நம் தேசியக் கொடியைப் பற்றி பள்ளியின் பால பாடத்திலேயே தெரிந்து கொண்டிருப்போம். மேலேயுள்ள காவி நமது பலத்தையும், திடத்தையும் குறிக்கும். வெண்மை அமைதியையும் சத்தியத்தையும், நடுவிலுள்ள சக்கரம் தர்மத்தையும் கீழேயுள்ள பச்சை வளத்தையும், வளர்ச்சியையும், நம் நிலத்தின் புனிதத்தையும் குறிக்கும் என்று ஆறாங்கிளாஸ் பையனுக்கு கூட தெரியும்.
நமது தேசியக் கொடி நமது நம்பிக்கையையும் நமது எண்னங்களையும் பிரதிபலிப்பது. நம் நாட்டின் பெருமை. கடந்த 70 வது வருடங்களாக நமது இராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தந்து கம்பீரமாக எல்லைகள் தோறும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருப்பது.
திடீரென்று ஹர் கர் திரங்கா என்று ஹிந்தியில் இல்லந்தோறும் மூவர்ணக் கொடி முழுக்கம் ஏன் ???
(ஒவ்வொரு இல்லந்தோறும் மூவர்ணக் கொடி. )
இது நமது 75 வது ஆண்டு சுதந்திர தின விழா.
சமீபகாலமாக தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பு தேசிய கீதத்தை இசைப்பதற்கும் ஒரு சர்ச்சை ஓடியது. அதென்ன படம் பார்ப்பதற்கு முன் தேசிய கீதம் ?? அதெல்லாம் எழுந்திருக்க முடியாது என்று கூட ஒரு சிலர் சொல்லத் துவங்கினர்.
ஆனால் அதெல்லாம் போகப் போக மறந்து போய் ஒவ்வொருவரும் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்கத் துவங்கினர்.
நாளாவட்டத்தில் அட, நம்ம இங்க உக்காந்திருக்கும் எல்லாரும் ஒரே குழுவாச்சே நாமெல்லாம் ஒரே புள்ளியில் இணைந்திருக்கிறோமே என்று எண்ணத் துவங்கினார்கள்.
தேசியக் கொடியும் அப்படித்தான்.
பிரதமர் தன் மனதின் குரலில் இது 75வது சுதந்திர தினம். ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடி ஏற்றி வையுங்கள் என்று சொன்னதும் 15 ஆகஸ்ட் வருவதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நமது உணர்வில் அந்த சுதந்திர தின விழாவை நினைவூட்டி குறிப்பிட்ட நாளில் இந்தியன் என்று சொல்ல ஒவ்வொருவருக்கு நெஞ்சை நிமிர்த்தி பூரிப்பில் திளைக்க வேண்டும் என்ற மறைமுக எண்ணம் தான்.
எந்த நாட்டில் பிரச்சினையில்லை ?? எந்த நாட்டில் வறுமை இல்லை ?? எந்த நாட்டில் குற்றம் குறைகள் இல்லை ??
நாடு என்று வந்து விட்டால் மதம், மொழி, இனம் அனைத்தும் மறந்து போய் தேசத்திற்காக இணைவது தான் ஒவ்வொரு குடிமகனின் கடமை.
தேசியக் கொடியை வீட்டில் ஏற்றி வைப்பதற்கு சில பல நிபந்தனைகள் இருக்கின்றன.
அதற்கான மரியாதையுடன், விதிகளுடன் ஏற்ற வேண்டும். ஏதோ கொடியில் துணி காயப்போடுவது போல பறக்க விடக் கூடாது.
அழுக்காக இருக்கக் கூடாது.
தலை கீழாக இருக்கக் கூடாது.
சுருங்கி இருக்கக் கூடாது.
பாதி கம்பத்தில் பறக்கக் கூடாது.
இரவு பகல் 24 மணி நேரமும் பறக்கலாம் அது ஒழுங்கான விதிகளை பின்பற்றும் பட்சத்தில்.
நம் தேசியக் கொடிக்கான உரிய மரியாதையை செலுத்தி அதை இல்லந்தோறும் பறக்க வைப்போம்
தேசியக் கொடியை பறக்க விட்டால் தேசப்பற்று வந்து விடுமா என்றால் இதற்கு பதில் இல்லை.
ஆனால் ஒரு தாய்நாட்டு மக்களாக இணைந்து இந்த 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடித்தான் பாருங்களேன் !!
சுதந்திர தினத்தன்று ஒரு உன்னத இந்தியனாக உணர்வது ஏகாந்தமான தேசிய உணர்வு.
விகடகவியார் கொண்டாடத் துவங்கி விட்டார். நீங்களும் இந்த கொண்டாத்தில் கலந்து கொள்ளுங்கள்.
ஜெய் ஹிந்த் !
பிரதமர் சொன்னது போல சமூக ஊடக கணக்குகளில் தங்கள் புரொஃபைல் படமாக தேசியக் கொடியை இணைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த விகடகவியார் கொடியை ஏந்திருயிருக்கும் படத்தை வைத்துக் கொண்டால்... நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். சுதந்திரதினத்திற்கு முன்பே..!! )
Leave a comment
Upload