விசாரணை கமிஷன் கேள்விகள்-

சசிகலா வாக்குமூலம்
ஆறுமுகமசாமி விசாரணை கமிஷனுக்கு சசிகலா தந்த வாக்குமூலம் அவர் சிறையில் இருக்கும் போது தரப்பட்டது.அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூரப்பாண்டி அவர்கள் சசிகலா சொன்னதை வாக்கு மூலமாக தயாரித்து ஜெயில் வார்டன் ஒப்புதல் கையெழுத்துடன் விசாரணை ஆணையத்தில் சசிகலா வாக்குமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
சசிகலா தனது கணவர் பெயரை குறிப்பிடாமல் விவேகானந்தன் மகள் என்று தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் கூடவே சசிகலா இருந்ததால் ஜெயலலிதா ஏற்பட்ட உடல்நிலை சிரமங்கள் அவருக்கு தரப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை இந்த வாக்குமூலத்தில் விலாவாரியாக சொல்லி இருக்கிறார்சசிகலா அவரது வாக்குமூலத்தின் படி 2016 முதல் ஜெயலலிதா நடக்க சிரமப்பட்டார் இதன் காரணமாக அவரது உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போனது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை ஒருங்கிணைத்து கண்காணித்தது சசிகலா உறவினர் டாக்டர் சிவகுமார் இவர் அப்போலோ மருத்துவமனையில் பணி புரிந்து வந்தார்.
ஜெயலலிதா ஆடைக்குள் வெளியே தெரியாதபடி Flash glucose accounting System என்னும் கருவியை கட்டியிருப்பார் இது அவரின் சர்க்கரை அளவை அறிய உதவும்.நீரிழிவு நோய் காரணமாக ஜெயலலிதா எப்போதும் டயப்பர் அணிந்திருப்பார்.ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதிக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வார். ஜெயலலிதா தனது ரத்த அழுத்தம் சர்க்கரை அளவை பரிசோதித்து தன் கையாலேயே நோட்டுப் புத்தகத்தில் எழுதி வந்தார். இதேபோல் எத்தனை மணிக்கு என்ன சாப்பிட்டோம் என்பதையும் தனது கைப்பட அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பெரும்பாலான மருத்துவர்கள் அப்போலோ மருத்துவமனையில் பணி புரிந்தார்கள் இது தவிர பல் மற்றும் கண் ஆகியவற்றுக்கு வேறு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்கள் என்றும் தனது வாக்கு மூலத்தில் சசிகலா தெரிவித்திருக்கிறார்.
ஜூன் 2016 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு உடம்பில் பல இடங்களில் கொப்புளங்கள் அரிப்புகள் தடிப்புகளும் உண்டாகத் தொடங்கின இந்த தோல் பிரச்சனை காரணமாக அன்றாட அரசு பணிகள் செய்ய ரொம்பவும் சிரமப்பட்டார்.
19.9.2016 அன்று ஜெயலலிதாவுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வந்தது சபரிமலைக்கு போன டாக்டர் சிவகுமாரை நான் தொடர்பு கொண்டு சொல்ல அவர் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார் என்று தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள சசிகலா அன்றைய தினம் எப்போதும் போல் படுப்பதற்கு முன் பல் துலக்கம் பழக்கம் உள்ள ஜெயலலிதா பாத்ரூமுக்கு சென்றார் அப்படி பல் துலக்கும் போதே எனக்கு மயக்கமாக வருகிறது என்று சத்தமாக சொல்ல நான் பாத்ரூமுக்கு ஓடிப் போய் அவரைக் கைதாங்கலாக அழைத்து படுக்கையில் உட்கார வைக்க முயற்சித்த போது என் மேல் மயங்கி விழுந்த போது அங்க வந்த டாக்டர் சிவகுமார் அவருக்கு முதல் உதவி சிகிச்சை செய்தார்.கூடவே அப்போலோ மருத்துவமனை தொடர்பு கொண்டு ப்ரீத்தி ரெட்டியின் கணவர் விஜயகுமார் ரெட்டி இடம் ஜெயலலிதாவுக்கு உடம்பு சரியில்லை அவருக்கு அவசர சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் உடனே ஒரு ஆம்புலன்ஸை அனுப்பி வையுங்கள் என்று சொன்னார். ஆம்புலன்சில் நான் டாக்டர் சிவகுமார் ஆகியோர் சென்றோம் என்று தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார் சசிகலா
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விஷயங்களை ஓபிஎஸ் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் அடிக்கடி சொன்னார்கள் தலைமைச் செயலாளர் ஜெயலலிதா தங்கி இருந்த அறையைத் திறந்து வணக்கம் சொல்வார் என்று தனது வாக்குமூலத்தில் சசிகலா சொல்லி இருக்கிறார் ஆனால் இந்த மூவரும் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை பற்றி அவருக்கு என்ன நோய் என்பது கூட எங்களுக்கு தெரியாது என்று தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்களில் அவர் சில நாட்கள் நல்ல நினைவாற்றலுடன் இருந்திருக்கிறார் எல்லோரிடமும் பேசியிருக்கிறார் டிவி பார்த்தார் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜெய் வீர அனுமான் சீரியல் ஜெயலலிதா பார்த்ததாக தனது வாக்குமூலத்தில் சசிகலா தெரிவித்திருக்கிறார்.கூடவே அவருக்கு தரப்பட்ட சிகிச்சைகளை நான் வீடியோ எடுத்தேன் என்றும் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா
4.12.2016 மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதா கேட்ட பன் காப்பியை நர்ஸ் ஒருவர் ட்ராலியில் எடுத்து வர சூடு ஆறட்டும் சாப்பிடுகிறேன் என்றார் ஆனால் சில நிமிடங்களில் ஜெயலலிதாவுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது நாக்கு ஒரு பக்கமாக துருத்தி கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ சத்தம் போட்டார். டாக்டர்கள் வந்து அவரது உடல் நிலையை பரிசோதித்து அவருக்கு திடீர் மாரடைப்பு என்று சொன்னார்கள் அதன் பிறகு தீவிர சிகிச்சை அளித்தார்கள்.பிழைத்து விடுவார் என்று நம்பினேன் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.ஜெயலலிதா இறந்து விட்டார் என்ற தகவல் கேட்டு நான் மயங்கி விழுந்தேன் என்று தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா
அதே சமயம் ஓ பன்னீர்செல்வம் துரோகி என்று அந்த வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார் சசிகலா. ஓ.பன்னீர்செல்வம் பல மறைமுக துரோக செயல்களில் ஈடுபட்டு திமுகவுடன் கைகோர்த்துள்ளார் என்பது கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மூலமும் மூத்த அமைச்சர்கள் மூலமும் எனக்குத் தெரிய வந்தது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்களும் பிற நிர்வாகிகளும் ஒரே குரலாக அணி திரள அதன்படி பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்று சசிகலா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இது தவிர பன்னீர்செல்வம் அதிமுகவின் அடி வேரையே அசைத்துப் பார்க்கும் வண்ணமாக நேரடியாக துரோக செயல் ஈடுபட்டார் இதனால் அடுத்தடுத்து பல திருப்பங்களை தமிழக அரசியலில் ஏற்பட்டது. மத்திய அரசின் ஆதரவோடு இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் முடக்கினார் என்று குற்றம் சாட்டி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் சசிகலா, எடப்பாடியும் ஓபிஎஸ்ம் சேர்ந்து சந்தர்ப்பவாத அரசியல் செய்தார்கள் என்று குறிப்பிட்ட சசிகலா எடப்பாடி யையும் சாடி தனது வாக்கு மூலத்தில் சொல்லி இருக்கிறார் சசிகலா. இது தவிர தன்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை சொல்லி போயஸ் கார்டனில் இருந்து நான் வெளியேற துக்ளக் ஆசிரியர் சோ காரணமாக இருந்தார் அவர் எழுதித்தந்த மன்னிப்பு கடிதத்தில் நாங்க கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் போயஸ் கார்டன் வந்தேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சசிகலா தனது வாக்குமூலத்தில் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சைகள் மருத்துவர்கள் பெயர்கள் உள்பட அவருக்கு தரப்பட்ட மருந்துகள் என்று விலாவாரியாக தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார் சசிகலா.ஆனால் விசாரணை ஆணையம் சசிகலாவை குற்றம் சாட்டி விசாரணை அறிக்கை வெளியிட்ட போது நான் படிப்பறிவு இல்லாதவள் எனக்கு மருத்துவ அறிவு எதுவும் இல்லை ஜெயலலிதா அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எனக்கு எதுவும் தெரியாது எல்லாமே அப்போலோ மருத்துவர்கள் பார்த்துக் கொண்டார்கள் என்று அறிக்கை வெளியிட்டார் என்பதையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ ஒரு ஆளுமை மிக்க தலைவி தொண்டர்கள் பாசத்துடன் அம்மா என்று ஆத்மார்த்தமாக அழைத்த ஜெயலலிதா மரணம் சம்பந்தமான மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழவில்லை என்பது தான் உண்மை விசாரணை கமிஷனும் அதற்கு உள்ள பூர்வமாக கண்டுபிடிக்க முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை என்பதே ஜெயலலிதா விசுவாசிகளிடையே பேச்சாக உள்ளது..
முற்றும்

Leave a comment
Upload