
தானுண்டு தன் சாப்பாடுண்டு நாலு மணி காபி உண்டு, தன் நண்பர்களோடு வாக்கிங் உண்டு, அரட்டை உண்டு , ஜன்னல் கடையில் பஜ்ஜி உண்டு என்று தேமே என இருந்த குப்புசாமி மாமாவை குப்புற தள்ளவேண்டும் என்று முடிவெடுத்து வந்தது போல் அவரின் பக்கத்துக்கு வீட்டுக்கு புதியதாய் குடி வந்த எம்டன் எதிராஜின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஏற்கனவே இடது பக்கத்துக்கு வீட்டு பரிமளா மாமி ஜீபூம்பா போல் திடிரென்று தோன்றி பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்டு போய்விடுவாள், ஆனால் கிள்ளியது வலிப்பதென்னவோ குப்பு மாமாவுக்குத்தான். இந்த குடைச்சல் போதாதென்று பரிமளா மாமியே குப்பு மாமாவையும், அவர் மனைவி தி கிரேட், அசோசியேஷன் ப்ரெசிடெண்ட் மீனாட்சி மாமியின் " நல்ல " மனதைப் பற்றி சொல்லி வலது பக்கத்துக்கு வீட்டுக்கு இந்த எம்டன் எதிராஜனை குடி வைத்துவிட்டாள். அவர் அதிக அதிகமாக வீடு மாறி, ஊர் மாறி, ஆளே மாறி ஒரு வழியாய் வீ ஆர் எஸ் கொடுத்துவிட்டு இங்கே வந்து செட்டில் ஆக முடிவு செய்து, தன் குடும்ப நண்பி (?) யான பரிமளா மாமியிடம் சொல்லி வைத்து அவளின் அறிவுரைப்படி இங்கே வந்து விட்டார், குப்புவின் வாழ்க்கையில் விளையாட.
எம்டன் நன்றாக சமைப்பார் போதாதா? மீனாட்சி மாமியை தினம் ஒரு ஐட்டம் செய்து அசத்திக் கொண்டிருந்தார். மாமி அதை எடுத்து வாயில் வைக்குமுன்னேயே " நீங்களும் இருக்கேளே , " என்று ஆரம்பித்து " என்ன செய்யறது, என் தலை எழுத்து " என்று முடிப்பாள். அதற்குள் அந்த ஐட்டமும் முடிந்து போய் இருக்கும். குப்புவுக்கு அந்த பாத்திரத்தை கழுவி எம்டனிடம் ஒப்படைக்கும் வேலை (மட்டும் ) தான் மிச்சம். எதையுமே சாப்பிடாததினாலும், பாத்திரம் மட்டும் கழுவுவதாலும், எம்டன் மேல் செம கோபத்தில் இருந்தார் குப்பு.
அன்று சனிக்கிழமை , குப்பு எண்ணெய் தேய்த்து மங்கள ஸ்னானம் செய்யும் நாள். காபி சாப்பிட்டு , மிளகு, வெற்றிலைக்காம்பு, கொஞ்சம் விரலி மஞ்சள் (கடுகு, உளுந்து தான் பாக்கி தாளிக்க ) போட்டு காய்ச்சிய நல்லெண்ணையை சூடு பறக்க தேய்த்து விடுவாள் மீனாட்சி மாமி. நீங்கள் நினைப்பது போல் லவ் எல்லாம் இல்லை. தலையில் கை வைத்து எண்ணெய் தேய்க்கிறேன் பேர்வழி என்று கொத்தாக முடியை கையில் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி அந்த வாரத்து ஆத்திரத்தையெல்லாம் தீர்த்துக் கொ(ல் )ள்வாள். எனோ குப்புவுக்கு அந்த ஆட்டம் தேவைப்பட்டது , அம்மன் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு மாதிரி அமைதியாய், தலையை காட்டிக்கொண்டிருப்பார். அன்று அந்த ஆட்டத்தின் பாதியில் படாரென தலையை நீட்டினாள் பரிமளா மாமி..ஓஹோ மங்கள ஸ்னானமா? ..என்று சொல்லியபடியே ...இந்தாங்கோ மிளகு ரசமும் ,பருப்பு துவையலும் பண்ணேன், குளிச்சுட்டு சாப்பிடுங்கோ , உடம்புக்கு நல்லது நல்ல துக்கம் வரும் என்று சொல்லிவிட்டு....லட்சுமி கல்யாணம் ..வைபோகமே...என்று முணுமுணுத்துக்கொண்டே போய்விட்டாள். அவ்வளவு தான் , இவளுக்கு என்ன கரிசனம் ? யார் கேட்டா மிளகு ரசமும் , பருப்பு துவையலும், (நான் தான் கேட்டேன் ,நல்லவேளை அவ சொல்லல -குப்பு ) நான் பண்ணித்தரமாட்டேனா ? ( தரமாட்டேங்கிறியே , நானும் ஒவ்வொரு வாரமும் சொல்லிண்டு தான் இருக்கேன், பரிமளா கிட்ட நேத்திக்கு சொன்னேன் ...அவ கற்பூரம் .....நீ கழுதை---குப்புவின் மைண்ட் வாய்ஸ்) மீனாட்சி மாமிக்கு கேட்டதோ இல்லையோ ,காலை காபிக்கு கஜினி முகம்மது போல் தினமும் படையெடுக்கும் குப்புவின் மச்சினன் அச்சுவுக்கு கேட்டுவிட்டது போல...அவன் " என்ன அத்திம்பேர் பரிமளா மாமிகிட்டே நேத்திக்கு அப்ளிகேஷன் போட்டீங்களா ? கரெக்டா கொண்டு வந்து கொடுத்துட்டு போறாங்க போலிருக்கு..." சரி சரி...நீ காபி கொடுக்கா....சுப்புணிக்கு வேற நான் போய் எண்ணெய் தேச்சி விடணும்...." என்று எரிகின்ற மீனாட்சி மாமியின் மனத் தீயில் எட்டு ஸ்பூன் நெய் விட்டான். ( அது என்ன எட்டு? சனி பகவானின் என் இல்லையா ?) குப்புவோ தனக்கு ஏழரை பிடித்தது தெரியாமல் அச்சுவுடன் தனக்கும் ஒரு குவார்ட்டர் காபி கிடைக்கும் என்று ஆவலாய் சமையல் ரூமையே பாத்துக்கொண்டிருந்தார்.
மீனாட்சி மாமி ஒரே ஒரு டம்ளருடன் வந்தாள். அச்சு ஆவலாய் எழுந்து வாங்கினான் , அது காலி டம்ளர் . "என்னக்கா ?" என்றான் ஏமாற்றமாய்...."நீ இந்த டம்ளர் எடுத்துண்டு எம்டன் கிட்ட போய் நான் கேட்டதா அந்த ஸ்பெஷல் காபி பொடி ஒரு டம்ளர் கேட்டு வாங்கிண்டு வா...அப்போதான் ,பிரெஷ் டிகாஷன் போட்டு காபி தருவேன்" என்றாள். அச்சு சுறுசுறுப்பாய் கிளம்பினான். குப்பு மனது வேலை செய்தது....அது என்ன ஸ்பெஷல்....எனக்காக சொல்றாளா ?.....யோசிக்கும்போதே அச்சு வந்தான் ,டம்ளர் அப்பவும் காலி...ஆனால் கையில் ஒரு பாக்கெட். "அக்கா இந்தா ஸ்பெஷல் காபி பொடி ,அவரோட கொடகு காபி எஸ்டேட்லேர்ந்து ..." பொட்டலத்தை குப்புவின் மூக்குக்கருகே கொண்டு வரும்போதே வாசனை மனதை மயக்கியது...மாமி அதை வாங்கிக்கொண்டே சொன்னாள் "எங்களுக்கும் எஸ்டேட் வெச்சிருக்கற மாதிரி பிரண்ட்ஸ்லாம் உண்டு.." டபக்கென்று பொட்டலத்தை பிடுங்கிக்கொண்டு உள்ளே போய் விட்டாள். வரப்போகும் காபியை எண்ணி , வாய் முடி மௌனியாய் இருந்தார் குப்பு..
ஆனால் அச்சு என்ன இது அத்திம்பேர்? இப்படி சொல்லிட்டுப்போறா அக்கா நீங்க அப்படியே கம்முனு இருக்கீங்க ...( ஆமாம் நீ அப்படியே உன் பொண்டாட்டிகிட்ட பேசி .......போடா இவனே....குப்பு )
காபியோடு மாமி வரவும் அதற்காகவே வந்தது போல உள்ளே வந்தார் எம்டன் ...வாங்கோ வாங்கோ வராதவர் வந்திருக்கேன்...அச்சு அந்த சேர எடுத்து மாமாவுக்கு போடு , ஏன்னா ,இந்த டேபிளை நகத்தி வைங்கோ ,நான் காப்பிய வெக்க வசதியா.... என்று அவருக்கு ராஜோபசாரம் செய்தாள்..காபி பறிபோன சோகத்தில் இருந்த குப்பு மனதிற்குள்ளே புலம்பினார்( எல்லாம் அந்த காபி எஸ்டேட் பண்ற வேல .....அடேய் எதி...நான் செய்யப்போறேன் சதி, உன் கதி இனிமே அதோ கதி ....என்று டி ஆராய் மாறி ,ஒரு நாயின் சபதம் போல குறைத்தார் )
காபியை சாப்பிட்ட எம்டன் , கண்ணை முடி வேறு உலகத்துக்கே போனவர் போல ஒரு மிதப்பு...ஒரு உச்! உச்! ...சப்தம் ....மாமி நீங்க இங்க இருக்க வேண்டியவங்களே இல்ல TAJ லையோ, ஹில்டன்லயோ chief cook ஆ இருக்க வேண்டியவங்க .....தவறிப்போய் .........என்று அவர் முடிப்பதற்குள்....."எங்க அத்திம்பேருக்கு வடிச்சு கொட்டிட்டு இருக்காங்க , இல்லையா சார் " என்று கோஷ்டி கானம் பாடி தன் காபியை confirm செய்து கொண்டான் அச்சு.
மீனாட்சி மாமி சிரிப்பை நிறுத்தவேயில்லை.....தரையில் அவள் கால் இல்லை, மனது அங்கே இல்லை, பார்வை அங்கே இல்லை , மொத்தத்தில் உடம்பு மட்டும் தான் இங்கே....உள்ளிருந்த ஆவி பரிமளா வீட்டுக்கு போய் அவள் முன்னால் பாருடி என் காப்பியை எப்படி ஒருத்தர் புகழுறார்னு ....." என்று சொல்லிக்கொண்டிருந்தது....
திரென்று எம்டன் சொன்னார் ...மாமி ஒரு request ....எனக்கு புதினா சட்னி சாப்பிடனும்னு ஒரே ஆசை, எனக்கென்னமோ அது சரியாய் வருவதேயில்லை. உடனே மாமி சொன்னாள், சொன்னா நம்ப மாட்டீங்க , எங்காத்து மாமா புதினா சட்னி அரைச்சா இந்த காலனியே வாங்கி சாப்பிடும். நான் அரைச்சு தர சொல்றேன் நீங்க போயிட்டு வாங்கோ என்று வழி அனுப்பி விட்டு மாமாவை மார்க்கெட்டுக்கு துரத்தினாள்.
மாமா போனவுடன் அச்சுவின் மனைவி வந்து மருதாணி கொடுத்தாள் (அச்சு ஐஸ் வெக்க அனுப்பியிருந்தான், மாமிக்கு மருதாணி தலைக்கு போடுவாள், டை எல்லாம் கிடையாது ) அவளுக்கு காபி கொடுத்து அனுப்பிவிட்டு , மருதாணியை அரைத்து பிரிட்ஜுக்குள் வைத்து விட்டு மாமி தூங்க போனாள்.
மாமா ஒருவழியாக புதினா வாங்கி வந்தார் கூடவே சாயங்கால காபிக்கு ஒட்டிக்கொண்ட அச்சுவையும் , சுப்புணியையும் அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். ஒருவர் புதினாவை கழுவி, ஆய்ந்து வைக்க, ஒருவர் மற்ற சாமான்களெல்லாம் எடுக்க, ஒருத்தர் மிக்ஸியை ரெடி பண்ண, பிரமாதமாக ரெடியானது சட்னி.
மாலையில் மாமி தலையில் மருதாணி பேஸ்ட் தேய்த்து குளிக்க ரெடியானாள். அச்சு எதிராஜனுக்கு கொடுக்க மாமியின் உதவுப்படி புதினா சட்னி கொஞ்சம் ப்ரெட்டில் தடவி sandwich ஆக தரச்சொல்லி மாமி உத்தரவு போட்டிருந்தாள், அதை நிறை வேற்றி கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தான் அச்சு...குப்பு மாமா சாவகாசமாக சாய்ந்து கொண்டு காபியை குடிக்க ஒரு வாய் வைத்திருப்பார்...பாத்ரூமிலிருந்து மாமியின் குரல்..." என்ன கன்றாவி இது ....யார் இப்படி பண்ணா?......அதே சமயத்தில் பக்கத்துக்கு வீட்டிலிருந்து....எம்டனின் ஏமாந்த குரல்....என்னதிது sandwich இப்படி கசக்குது.......குப்பு சார்...குப்பு சார்....மாமி.....என்று காட்டுக்கத்தலில் கத்த துவங்கியிருந்தார் ...எதி ......
மாமா வழக்கம்போல எஸ்கேப்.....(மனசுக்குள் எப்படி இரண்டு பேரையும் பழி வாங்கினோம் ...ராஜதந்திரத்தில் உன்னை மிஞ்ச ஆளே இல்லடா குப்பு என்று ஓடிக்கொண்டே காலரை தூக்கிவிட்டுக்கொண்டார்....)
(பின் குறிப்பு: சட்னியை பிரிட்ஜிலிருந்து எடுக்கப்போன அச்சு ரெண்டு பாத்திரத்திரத்தில் இருந்ததையும் ஒன்றாக கலந்து , எம்டனுக்கு கொஞ்சம் கொடுத்தால் போதும் , மிச்சத்தில் தன் வீட்டுக்கும் எடுத்துப்போகலாம் , ராத்திரி தொட்டுக்கொள்ள உதவும் என்று எண்ணி தனி டப்பாவில் போட்டுக்கொண்டான், எம்டன் சாப்பிட்டது மருதாணி புதினா சட்னி வைத்ததா அல்லது புதினா மருதாணி சட்னி வைத்த sandwich ஆ என்பதை அந்த இறைவனே அறிவான். சேம் டு மாமி....ஒரு வாரம் அவள் தலையில் மருதாணி புதினா வாசனை....என்ன செய்தும் போகவில்லை )
அது புதிய ஆர்கானிக் தலைமுடி பாதுகாப்பு ரெசிபி என்று மாமி எல்லோரிடமும் சமாளித்தாள் ஆனால் எதி "I am Waiting Kuppu "
(பின் பின் குறிப்பு : இது முழுவதையும் அறியாமல் வீட்டிற்கு எடுத்துப்போன சட்டினியை முதலில் பிசைந்து சாப்பிட்ட அவன் மனைவி...அவன் மேல் ...வேண்டாம் ..இந்த வாரம் நான் அஹிம்சை பற்றி மட்டுமே பேசுவேன் )

Leave a comment
Upload