தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 13 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

ஆறு மனமே ஆறு

பொறு மனமே பொறு! ஆறு மனமே ஆறு! ஆறுவது சினம்.. என்கிற ஒளவையின் சொல்லை ஆத்திசூடியில் கற்றறிந்தோம். வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நாம் சினம் கொள்கிறோம். உறவுகளுக்குள் மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள சமுதாய அவலங்களாலும் சினம் எழுவதுண்டு. நம்பிக்கை.. துரோகமாக மாறும்போது.. எதிர்பார்ப்பு முற்றிலும் புறக்கணிக்கப்படும்போது எனப் பல நிலைகளில் கோபம் அடைகிறோம்.

அப்படி அடையும் கோபம் சரிதானா? நியாயம்தானா? என்று நிலைப்படுத்தும் நிலையில் நாம் அப்போது இருப்பதில்லை. ஒரு முறை வானொலி நிலையத்தில் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்டதைப்போல..
“வந்த கோபம் வடிந்து முடிவதற்குள்..
வாழ்க்கையில் பாதி தொலைந்து போகிறதே!”
மனிதனின் இயல்புகளில் ஒன்றான இந்தக் கோபம் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தி அதிக இரத்த அழுத்தத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறது. எந்த விஷயத்திற்காக நாம் கோபப்பட்டோமோ அதே விஷயத்தைச் சற்று ஆற அமர சிந்தித்துப் பார்த்தால்.. இதற்குத்தான் இவ்வளவு கோபப்பட்டோமா? தேவையில்லையே என்று நமக்கே தோன்றலாம்.
“மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா”
என்கிற கவியரசு கண்ணதாசனின் வரி.. ஒரு காலக் கண்ணாடி!

மனிதப் படைப்பு என்பதுகூட என்ன? சமூக அமைப்பு ஒன்றில் சில கட்டுப்பாடுகளுக்குள் கிடக்கும் மிருகம் என்பது சரிதானே! இதை நாகரீகம் எனவும் சொல்வதுண்டு!

நல்ல குணங்களாய்.. அன்பு, பாசம், பணிவு, பரிவு, கனிவு எனவும் தீய குணங்களாய் – பொய், கோபம், சூது. வஞ்சகம் எனவும் மனிதன் எந்த நிலையில் இருக்கிறான் அல்லது இருக்க வேண்டும் என்கிற பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது இப்பாடல்!

ஒரு முறை.. ராஜா அண்ணாமலை மன்றத்தில் இலக்கியச் சுடர் தா.ராமலிங்கம் அவர்கள் கண்ணதாசன் பற்றி சொற்பொழிவாற்றினார். அப்போது.. இப்பாடலைக் குறிப்பிடாமல், நான் இப்போது ஒரு பாடலை நேரடியாகச் சொல்லாமல் பத்து திருக்குறள்களை மேற்கோள் காட்டுகிறேன். அந்தப் பாடல் எந்தப் பாடல் என்று நீங்கள் சொல்ல வேண்டும். அப்படியே அவர் ஆரம்பித்தார்..

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

இந்த மூன்று குறள்கள்தான் அவர் சுட்டிக்காட்டியிருப்பார்..அதற்குள் மக்களிடமிருந்து “ஆண்டவன் கட்டளை – ஆறு மனமே ஆறு” என்று குரல்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தன. உடனே இலக்கியச்சுடர் –நான் இன்னும் ஏழு குறள்களைச் சொல்லவில்லையே என்று சொல்ல.. அதையெல்லாம் போனாஸாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றது மக்கள் கூட்டம்!

துயில்கின்ற நேரம் தவிர மனித மனதில் எண்ண அலைகள் தவழ்ந்தவண்ணமே இருக்கும். எனவே, மனிதன் நினைவுகளிலிருந்து விடுபட வழிகளில்லை. ஏதோ ஒரு அழுத்தம் சுமந்தபடிதான் பெரும்பான்மையான மனிதர்கள் வாழ்கிறார்கள். சமீப காலங்களில் ‘மன அழுத்தம்’ (pressure) என்பது சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட, இதன் பாதிப்புகளில் உடலுறுப்புகள் பலவீனமடைவது முதல் உயிர்பலிவரை சாத்தியமாகிறது. இன்பமும் துன்பமும் வாழ்க்கையைப் பொறுத்தவரை இரட்டைக் குழந்தைகள்தான் என்பதை நாம் உணர்ந்திடும்போதும் இயல்பாக இரண்டையும் ஏற்றுக்கொள்ள இயலாமல் தவிக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் பயிற்சி கை கொடுக்கிறது என்பார்கள். எனவேதான் மனதைப் பக்குவப்படுத்த இன்றைய மனிதன் பல்வேறு தியானப் பயிற்சி, யோகாப் பயிற்சி என் அடைக்கலம் தேடுகிறான். எந்தப் பிரச்சினையையுமே அந்தப் பிரச்சினைக்குள்ளிருந்து கொண்டு தீர்வு காண்பது இயலாத ஒன்று. அப்பிரச்சினையை முதலில் அயலார் பிரச்சினையாக எண்ணி அப்படி ஒரு பிரச்சினைக்கு நீங்கள் என்ன வழி சொல்வீர்கள்? எப்படி அணுகுவீர்கள்? என ஒரு பருந்துப் பார்வை – புதிய தீர்வுக்கும் புதிய பாதைக்கும் வழிவகுக்கும்.

பேராசிரியர் பானுமதி (கவிஞர் ஆதிரா முல்லை) அவர்களின் பரிந்துரைப்படி கம்பனும் கண்ணதாசனும் எனும் கட்டுரை ஒன்றை ‘பன்முகப் பார்வை – கம்பனில்’ எனும் நூலுக்கு வரைந்தளித்தேன். பேராசிரியர் ராஜபாண்டியன் அவர்களால் உருவாக்கப்பட்ட அந்நூலின் பிரதியைப் பெறுவதற்காக மாநிலக்கல்லூரி (Presidency College) சென்றிருந்தேன். பல்வேறு விஷயங்களைப்பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்படியே கண்ணதாசன் பற்றியும் பேச்செழுந்தது. அவர் ஒருமுறை சொற்பொழிவாற்றியபோது, ‘ஆறு மனமே ஆறு’ பாடலைப் பற்றிக் குறிப்பிட்டாராம். ‘ஆறு’ என்பதன் அர்த்தம் அவர் ஆங்கிலத்தில் சொன்னபோது, அட... ஆண்டவன் கட்டளைக்காக அன்றெழுதிய பாடலில் (இத்தனை) இதுவும் உள்ளடக்கமா என்று தோன்றியது. RELAX... RELAX... சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு என்று எழுதிய வரிகளும்,


ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும்பணிவு என்பது பண்பாகும்
இந்தநான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு....

உளவியல் மனவியல் பற்றியெல்லாம்கூட கவியரசர் பாடல் கைகொடுக்கிறதே... பாருங்கள்! எனவேதான் எழுதியெழுதி வைக்கிறேன், கவியரசர் பாடல் வெறும் திரைப்பாடல்களல்ல, மனித குலத்திற்கு வரைந்தளிக்கப்பட்ட வாழ்வியல் சாசனம்!

மீண்டும் சிந்திப்போம்...