தொடர்கள்
பொது
பாலபுரஸ்கார் விருது வென்ற தமிழக மாணவி! - மாலா ஶ்ரீ

20230028003952760.jpg

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுமை, சமூகசேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும் துணிச்சல் போன்ற பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்ததற்காக, இந்தியா முழுவதிலும் 14 சிறுமிகள் மற்றும் 15 சிறுவர்கள் என மொத்தம் 29 குழந்தைகளுக்கு 2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கான 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) விருது'களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக வழங்கினார். அவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் மற்றும் ₹1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

20230028004014846.jpg

2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பாலபுரஸ்கார் விருதுகள் பெற்ற 29 பேரில், கண்டுபிடிப்பு பிரிவில் 6 வயது நிரம்பிய தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவி விஷாலினியும் ஒருவர். விருதுநகரைச் சேர்ந்த டாக்டர்கள் நரேஷ்குமார்-சித்ரகலா தம்பதியின் மகள். கடல், நதி, ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பலூன் வீட்டை உருவாக்கிய விஷாலினிக்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த பலூன் வீடு கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை விஷாலினி பெற்றுள்ளார்.

20230028004036801.jpg

மேலும், பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரத்யேக சாதனத்தை உருவாக்கிய ஜூய் அபிஜித் கேஸ்கருக்கும், ஸ்பைரோமீட்டர் மென்பொருளை உருவாக்கிய புஹாவி சக்ரவர்த்தி, சிவம் ராவத், வினிதா தாஸ் ஆகியோருக்கும் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. வீரதீரச் செயல் பிரிவில், தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனது குடும்பத்தை மீட்ட சிறுமி குருகு ஹிமாப்ரியாவுக்கும், மின்கசிவில் சிக்கிக்கொண்ட தனது தாயையும், சகோதரனையும் மீட்ட சிவாங்கி காலி, முதலையிடம் சிக்கிய தனது சகோதரனை தைரியமாக மீட்ட சிறுவன் தீரஜ்குமாருக்கு பாலபுரஸ்கர் விருது வழங்கப்பட்டது.

கலைப்பிரிவில், காலிகிராபி எனும் கையெழுத்து சிறப்பாக எழுதிய சிறுமி கவுரி மகேஸ்வரி, பியானோ வாசிப்பதில் அபார திறமை கொண்ட சிறுவன் சையத் பத்தீன் அகமது, பரதநாட்டியத்தில் சிறுமி ரேம்னா இவெட் பெர்ரிரே, புகைப்படம், ஓவியம் வரைவதில் கில்லாடி சிறுவன் டோலஸ் லோம்போமா, கர்நாடக இசை, மிருதங்கத்தில் சிறந்து விளங்கிய தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பாடும் திறன் கொண்ட சிறுவன் திரிஷ்டிஸ்மானுக்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

கல்விப்பிரிவில் வேத கணித நிபுணராக, எழுத்தாளராக விளங்கி வரும் சிறுவன் அவிசர்மா, கொரோனா காலத்தில் தனது படிப்புக்காக இணையதளம் உருவாக்கிய சிறுவன் ஆகார்ஷ் கவுசல், கொரோனா ப்ரீவேர்ல்ட்.காம் என்ற இணையதளத்தை உருவாக்கிய மிஷான்ஸ் குமார் குப்தா, 10 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய சிறுவன் அபினவ்குமார் சவுத்ரி, பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பணம் திரட்டிய சிறுவன் பால்சக்திக்கும் பாலபுரஸ்கர் விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு பிரிவில், பாரா நீச்சல் பிரிவில் உலகசாதனை படைத்த ஜியாராய், மோட்டார் விளையாட்டில் சாதனை படைத்த ஸ்‌ரியொ லோகியா, யோகா போட்டியில் 21 விருது வென்ற அன்வீ விஜய், சந்த்ரே சவுத்ரி, சுவாயம் பாட்டீல், தருஷிகோர், அருஷி கோத்வால் ஆகியோரின் சாதனைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி 'பாலபுரஸ்கார்' விருது வழங்கி, மேற்கண்ட சாதனை படைத்த குழந்தைகளுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.