தொடர்கள்
பொது
இசைக்கு 80 வயது - வேங்கடகிருஷ்ணன்

20230502213806666.jpg

தமிழ் திரை இசையை ஹிந்தி பாடல்கள் ஆக்கிரமித்திருந்த காலம்.... ஒருபுறம் மெல்லிசை மன்னரும் தனது பிடியை தளர்த்தி இருந்த நேரம். 1976 களில் பொதிகை மலையடிவாரத்தில் இருந்து சென்னையை நோக்கி மிதந்து வந்த காற்று, சங்கீதத்தையும் தன்னோடு சேர்த்து அழைத்து வந்தது.

'அன்னக்கிளி உன்னை தேடுதே' என்ற தொடங்கிய அந்த சகாப்தம் இன்றும் 'அருட்பெருஞ்ஜோதி'யாய் சுடர் விட்டு பிரகாசிக்கிறது.
தனது பாணியை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வந்த இசைஞானி 80, 90களில் ரசிகர்களின் நாடியை பிடித்து பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் நாடி, நரம்போடு கலந்தும் விட்டார். சிறுவயதில் கம்யூனிஸ்ட் மேடைகளில் கச்சேரி செய்தபோதே மக்களின் மனதை படித்த இந்த மேதை, அதற்காகவே தனது இசை அனுபவத்தை மக்களுக்கு சென்று சேரும் வகையில் அமைத்து தர துவங்கினார். 80, 90களில் ஒரே நாளில் மூன்று படம் வெளியானால் மூன்றுமே ராஜா இசை இல்லாமல் வெளியானது இல்லை.
அவர் காலத்து சக இசைக் கலைஞர்களால் பாராட்டப்பட்டது மட்டுமல்லாமல் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு கலைஞன் இளையராஜா. நவ்ஷாத், சலீல் சவுத்ரி, ஆர். டி பர்மன் போன்ற மாபெரும் இசை மேதைகள் அவருடைய இசைக்கு முன் தாங்கள் மாணாக்கர்களே என்று சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக சங்கீத வித்வான்கள் அனைவரும் கண்டு நடுங்கிய இசை விமர்சகர் சுப்புடு , சினிமா பக்கமே செல்லாதவர், சினிமா இசையை ஏற்றுக் கொள்ளாதவர், இளையராஜாவின் இசையை அதுவும் குறிப்பாக சிந்து பைரவிக்காக இளையராஜா இசையமைத்ததை மனம் விட்டு பாராட்டினார். சரஸ்வதி கடாக்ஷம் இவருக்கு பரிபூரணமாக இருக்கிறது என்பதை நுணுக்கமாக சுட்டிக்காட்டி இருந்தார்.
இவரிடம் கீபோர்டு வாசித்த மாணவர், பின்னர் விளம்பரங்களுக்கு வாசித்து, கவிதாலயா மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, உலகப் புகழ் பெற்று இரண்டு ஆஸ்கர்கள் வென்று இந்தியா வந்த போதும் இளையராஜாவின் ரசிகர்கள் எதிரணி செல்லவில்லை. அப்படி தன் இசையால் அவர்கள் அனைவரையும் வசப்படுத்தி இருந்தார். ஒரு பேட்டியில் ரஹ்மானே இரவில் நீண்ட தூர கார் பயணம் என்றால் எனது எனது தேர்வு இளையராஜாவின் பாடல்கள் என்று சொன்னார் என்ற செவி வழி செய்தியும் உண்டு ...
இளையராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு ராஜா கதை உண்டு அதாவது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த அவர்கள் அனுபவித்த சூழல்களை நினைவில் கொண்டு வரும், மேலும் அதனை திறம்பட கையாள உதவும், அவர்களை ஆற்றுப்படுத்திய அவர்களின் மனக்காயங்களுக்கு மருந்திட்ட இளையராஜாவின் இசை என்ற கதை தான் அது. 80, 90களில் ரசிகர்கள் அனைவரிடமும் இந்த கதை தனித்தனியாக, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்கும் இந்த கதை, அவர்களுக்கு மட்டுமே உரியது. அதனை அறிந்தவர் ஒரே ஒருவர்தான் அவர் இளையராஜா.
அவருடைய இசையமைக்கும் திறனை பாராட்டாத கலைஞர்களோ, இசையமைப்பாளர்களோ கிடையாது. படத்தின் கதையை இசை மூலம் சொல்வதில் கைதேர்ந்தவர் இசைஞானி. பல படங்களுக்கு அவர் கதை அமைப்பை கச்சிதமாக மாற்றச் செய்து அதற்கு ஏற்றார் போல் பின்னணி இசை தந்தவர்.
ராஜாவின் பாணி என்பது எந்த இடத்தில் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் வழங்குவது. மேலும் அப்படி அவர் வழங்கும் ஒவ்வொன்றும் கடைசி மட்ட ரசிகனையும் திருப்திப்படுத்தும் விதமாய் அமைவது தான் அவரின் தனிப்பட்ட பாணி.

20230502213952696.jpeg
சில பாடல்களை காட்சி அமைப்போடு சேர்ந்து பார்க்க கேட்கவே நாம் விரும்புவோம். ஆனால் ராஜாவின் பாடல்களை தனியாக வெறும் ஒலி வடிவமாக மட்டுமே நம்மால் கேட்க இயலும். அந்த ஒலி நம் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள், மன பிம்பங்கள், காட்சி அமைப்புகள், இவை கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இன்றைய இளைஞர்கள் அதிகம் உபயோகிக்கும் வார்த்தையான "ஸென் மோடு"க்கு நம்மை அழைத்துச் செல்பவை.
இன்று தனது 80 வது வயதில் அடி எடுத்து வைக்கும் அந்த மகா கலைஞனை போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அவரது இசையை அறிமுகப்படுத்த வேண்டியது ஒவ்வொரு இசை ரசிகரின் கடமை.

மனதை அமைதிப்படுத்தி ஆற்றுப்படுத்தி நம்மை வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும் அந்த அற்புத இசையை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனை உணர்வுகளோடு கலந்துவிட அனுமதித்து ஒவ்வொரு முறையும் அந்த இசையோடு கரைந்து உருகி அழுத்தத்தைத் தொலைக்கும் இசை ரசிகனுடைய அந்தக் கதை நிச்சயம் உங்கள் நினைவுக்கு இப்போது வரும் என்பது எனக்கும் தெரியும்.

20230502214247452.jpg

இந்த நேரத்தில் நீங்கள் அந்தக் கதையை மீண்டும் ஒருமுறை ரசித்து அனுபவித்திட என் வாழ்த்துக்கள்...
இந்த இசை இன்னும் தொடர இசை (ஞானி)க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வோம். ..