தொடர்கள்
கவர் ஸ்டோரி
இன்றைய சூப்பர் ஸ்டார் - தோனி - விகடகவியார்

சூப்பர் ஸ்டார்......

20230503064600644.jpeg

இறுதி மாட்சில் ஜடேஜா 2 பந்துகளில் பத்து ரன் அடித்ததிலிருந்து துவங்கவில்லை இந்த சூப்பர் ஸ்டார் பட்டம்.

தோனி என்பவர் ஒவ்வொரு தமிழருக்கும் ஏன், இந்தியருக்கும் தங்கள் வீட்டில் உள்ள ஒரு குடும்ப உறுப்பினர். இப்படித் தான் இந்த கட்டுரை துவங்க வேண்டும்.

சினிமா நடிகரோ அல்லது கிராஃபிக்ஸில் கலக்கும் தெலுங்கு பட ஹீரோவோ அல்ல தோனி.

யோசித்துப் பார்த்தால் சூப்பர் ஸ்டார்களின் துவக்கம் மிக சாதாரணமாகவே இருந்திருக்கிறது.

ஒரு பஸ் கண்டக்டர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக வந்தார் என்று சிலாகித்தால், அதே ஒரு டிரெயின் கண்டக்டர் தான் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக பரிமளிக்கிறார்.

ஏன் தோனியை இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பிடித்திருக்கிறது என்று வலைதளத்தில் மிகப் பெரிய ஆராய்ச்சியே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அன்பை எல்லோராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை.

சர். விவியன் ரிச்சட்ஸுக்கு கூட இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் பின்னே இருந்திருக்குமா தெரியவில்லை ? சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என்று தூக்கி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கும் தோனியை பின் தொடரும் கூட்டத்திற்கும் ஆகப் பெரிய வித்தியாசம் பார்த்தாலே தெரியும்.

20230503064638281.jpeg

(தோனியின் கையெழுத்தை சட்டையில் வாங்கிக் கொள்ளும் கவாஸ்கர்)

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் நான்காவது பெரிய மதம். இன்னும் சொல்லப்போனால் மற்ற மூன்று பெரிய மதங்களை இணைக்கும் பெரிய மதம் கிரிக்கெட்.

கிரிக்கெட் நேர விரயம், இளைஞர்களின் ஆற்றலை வீணாக்குகிறது என்று யார் எப்படி கதறினாலும் அதெல்லாம் காதில் விழாத ஏறாத விஷயம். கிரிக்கெட்.!!

அவ்வளவு தான்.

இந்த ஒற்றை போதையை நம்பி கல்லா கட்டும் பெரிய துறை பி.சி.சி.ஐ. கபில்தேவ் எண்ணத்தில் உதயமான ஐ.சி.எல் என்பது தான் ஐ.பி.எல் என்பது அனைவருக்கும் தெரியும். இதெல்லாம் வரலாறு.

தோனி விஷயத்திற்கு வருவோம்.

20230503064936279.jpeg

(தோனியின் ஆனந்த் கண்ணீர் மிகப் பெரும் பேசு பொருள்)

இது வரை யாரும் தோனி உணர்ச்சிவசப்பட்டு அழுது பார்த்ததில்லை. இந்த கடைசி ஃபைனல் மேட்ச் அவரையே கலங்க வைத்து விட்டது. யாரும் இரண்டு பாலில் பத்து ரன் ஜடேஜா அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் தோனிக்கு அவர் டீமீன் மீது அபார நம்பிக்கை எப்போதும் இருக்கும். அது ஏப்பை சாப்பையாக இருந்தாலும் தோனியின் தலைமைக்கு கீழ் அவர்கள் பின்னிப் பெடலெடுப்பார்கள்.

காரணம் தோனியின் தலைமை.

விளையாட்டில் தவறுகள் சகஜம் என்ற ஒற்றை உண்மையை உணர்ந்தவர் தோனி. தன்னுடைய டீம் ஆட்கள் தவறு செய்தால் அதை ஒரு சின்ன புன்னகையுடன் அல்லது அதை கண்டு கொள்ளாதவர் போல கடந்து செல்பவர் தோனி.

கடைசி மாட்சில் கூட ஷுப்மன் கில்லின் காட்சை விட்டதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை தோனி. பெளலருக்கு கை தட்டி விட்டு அடுத்த பாலுக்கு தயாரானார் தோனி. அது தான் ஒரு தலைவனுக்கு அடையாளம். நடந்து கொண்டிருக்கும் மாட்சில் கத்தி, உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய அணியின் பலவீனத்தை மேலும் பெரிதாக்குபவனல்ல ஒரு காப்டன். இது ஒரு பெரிய காரணம்.

தோனியே சொல்வது போல அவரை மக்களுக்கு பிடிப்பதற்கு முக்கிய காரணமே இளைஞர்கள் எப்படி தெருவில் கிரிக்கெட் ஆடுவார்களோ அதே போல விளையாடுவதால் தான் என்னை அவர்களுக்கு பிடிக்கிறது என்கிறார். என்னுடைய கிரிக்கெட் ஆடும் ஸ்டைல் சாதாரண மக்கள் விளையாடும் ஸ்டைல் அது தான் என்கிறார்.

41 வயதில் தோனிக்கு இருக்கும் ரிஃப்ளெக்ஸ், சுதாரிப்பு அசாத்தியமானது. ஃபைனல் மேட்சில் அவருடைய ஸ்டம்பிங்கைப் பார்த்தால் புரியும்.

(தோனியி எதிர்வினை நேரம் 0.12 விநாடிகள்)

ஓய்வெடுப்பதைப் பற்றி ஒரு ரிப்போர்ட்டரின் கேள்விக்கு, எனக்கு வயதாகி விட்டது என்று நினைக்கிறீர்களா வாருங்கள் இரண்டு பேரும் ஓடுவோம். யார் ஓடுகிறார்கள் என்று பார்க்கலாமா என்றார் சிரித்துக் கொண்டே.

இன்னொரு கோணத்தில், இறுதிப் போட்டி, கோப்பையை தூக்கியாயிற்று, இந்த சமயத்தில் தன்னுடைய ஓய்வைப் பற்றி பேசினால் அத்தனை ஊடகங்களும்,வெளிச்சமும் தன் மீது பாய்ந்து ஜெயித்த சந்தோஷ கணங்களை விழுங்கி விடும், தன்னுடைய அணியின் வெற்றி அமுங்கிப் போகும் என்று தான் அதை அப்புறம் யோசிக்கலாம் என்று சொன்னார் என்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சொல்கிறார்கள்.

தோனியின் சமயோசிதம் மைதானத்தில் அவரது ஒவ்வொரு அசைவிலும் பார்க்கலாம். இது வரை 537 சர்வதேச கிரிக்கெட் மாட்சுகள் விளையாடியிருக்கும் தோனியின் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு செய்தி பொதிந்திருக்கும். ஒரு சின்ன உதாரணமாக 2007 பாகிஸ்தான் அணிக்கு எதிரான மாட்சை சொல்கிறார்கள்.

சூப்பர் ஓவர். அதில் பந்து வீச தோனி தேர்ந்தெடுத்தது ஷேவாக், ஹர்பஜன், ராபின் உத்தப்பா. எல்லோரும் கரித்துக் கொட்டத் துவங்கி விட்டார்கள். ஏன் ரெகுலர் பந்து வீச்சாளர்களை விட்டு விட்டு இவர்களை தேர்ந்தெடுப்பானேன் ?? அது தான் தோனி.

பாகிஸ்தான் தன்னுடைய சிறந்த பந்து வீச்சாளர்களை களமிறக்க, அவர்களது விக்கெட் கீப்பிங்கும் தோனியும் அங்கு தான் வித்தியாசப்பட்டது. தோனி ஸ்டம்புக்கு பின் ஒரு கீப்பர் போல நிற்கவில்லை. தன்னுடைய பந்து வீச்சாளர்களுக்கு ஸ்டம்பை எப்படி அடையாளப்படுத்துவது என்பது தான் அவரது கவனமெல்லாம். இந்த படத்தை பாருங்கள்.

20230503065912721.jpeg

(இந்த சின்ன உதாரணத்தை ஜியாமெண்டிரிகல் மார்வல் என்று வர்ணிக்கிறார்கள். இது தான் தோனி. இப்படி வித்தியாச கோணத்தில் யோசிக்க தோனியால் மட்டுமே முடியும்)

ஆனால் தோனி சொன்னது என் மீது இவர்கள் ஏகத்திற்கும் அன்பு வைத்திருக்கிறார்கள். என்னுடைய ஓய்வு சேப்பாக்கம் மைதானத்தில் என் ரசிகர்கள் முன்பு தான் இருக்க வேண்டும். என் மீது அன்பு வைத்திருக்கும் அவர்களுக்கு என்னுடைய அன்பை சொல்ல அது தான் சரியான வழி என்கிறார்.

தன்னுடைய வேர்களை மறக்காத பண்பு தான் தோனியை உச்சாணியில் வைத்திருக்கிறது என்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

20230503070237157.jpeg

பல கோப்பைகளை கடந்தவர்... சி.எஸ்.கே இரண்டு வருடம் தடை செய்யப்பட்டிருந்த போது தானும் காத்திருந்து மீண்டும் சிஎஸ்கே வுக்கு வந்தது தான் சி.எஸ்.கே ரசிகர்களின் ஒட்டு மொத்த அன்பையும் தோனி மேல் பொழிவதற்கு பெரும் காரணம்.

ஒரு நல்ல தந்தை,

ஒரு நல்ல கணவன்,

ஒரு நல்ல ரசிகன்,

ஒரு நல்ல தலைவன்,

ஒரு ஆதர்ச மனிதன்

இது போன்ற பிம்பம் தான் மஹேந்திர சிங் தோனி என்ற மனிதனை பின்பற்ற வைத்திருக்கிறது.

பாலிவுட், கோலிவுட், டாலிவுட், மல்லுவுட், ஜாலிவுட்... இதெல்லாவற்றையும் புறக்கணித்து இன்றைய தேதிக்கு, இன்னும் வரும் பல வருடங்களுக்கு சூப்பர் ஸ்டார் தோனி தான்.

தோனிக்கு மூட்டு ஆபரேஷன் இதிலிருந்து எப்படி விளையாட மீண்டும் வருவார் என்றெல்லாம் யாரும் விசனப்பட வேண்டாம் !!

தோனி அசுரன். அடுத்த ஐ.பி.எல்லுக்கும் தோனி தான் ஹீரோ. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

20230503070514682.jpeg

20230503070540157.jpeg

20230503070604189.jpeg

(தான் பணிபுரிந்த இரயில் பயணத்தை மறக்காத தோனி)

20230503070642571.jpeg

(பைக் ரசிகர் தோனி. 80 பைக் வைத்திருக்கிறாராம்)

20230503071000769.jpeg

(தன்னுடைய முடிதிருத்துபவரைக் கூட மறக்காமல் எளிமையான ஹேர் கட் என்று தோனியை சிலாகிக்கிறார்கள்)

தோனியின் கடைசி மாட்ச் தாயே மகமாயி ஆத்தா எப்படியாவது கடைசி பால்ல காப்பாத்தும்மா என்ற இந்த ரசிகரின் பக்தரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. எத்தனை பேர் மாட்ச் பார்த்தார்களோ அத்தனை தமிழர்களும் இந்த வீடியோவையும் பார்க்க தவறவில்லை.

விகடகவியின் ஆவணத்திற்காக இந்த வீடியோ.... இங்கே...