தொடர்கள்
கதை
பவிசு.-ஜி ஏ பிரபா.

20240124081707416.jpeg


கல்யாண மண்டபத்திற்குள் நுழையும் போது சிறிது கலக்கமாகத்தான் இருந்தது
வனஜாவுக்கு. அண்ணா, அக்கா என்று எல்லோரும் வந்திருந்தார்கள்.
அவளின் சித்தப்பா பையனுக்கு கல்யாணம். அக்கா அண்ணா பசங்கள் எல்லாரும் படித்து ஒருவன் அமெரிக்கா ஒருவன் ஜெர்மனி ஒருவர் ஆஸ்திரேலியா என்று இருக்கிறார்கள்.
அக்கா, அண்ணி எல்லோரும் கை நிறைய தங்க வளையங்களும், கழுத்து நிறைய செயினும் வைரத் தோடுமாக பலபலவென்று மின்னும் போது தான் மட்டும் எளிமையாக ஒரு தாலிக் கொடியுடன் சாதாரணமாக இருப்பதில் அவளுக்கு சிறிது மனக் குறைதான்.


கல்யாண வீடுகளிலும் அவர்கள் பெருமை பேசும் போது அமைதியாக ஒதுங்கி நிற்பாள்.
இப்போதும் “என் பையனுக்கு 10 லட்சம் சம்பளம். அமெரிக்க சிடிசன் ஆயிட்டான். என் பொண்ணு ஆஸ்திரேலியாவில் இருக்கா. அங்கேயே சொந்த வீடு வாங்கிட்டா.” பெருமை
கொப்பளிக்க பேசிய அவர்கள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க சங்கடமாக இருந்தது.
வனஜாவும் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. கணவன் நடுநிலைப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று பென்ஷன் வருகிறது. சொந்த வீடு. ஒரு பெண், பையன். பெண்ணை சென்னையில் கட்டிக் கொடுத்திருக்கிறது. மாப்பிள்ளை வங்கி அதிகாரி. ஒரு பேரன்.
மகன் சொந்த பிசினஸ். தேங்காய், தேங்காய்ப் பொடி, தேங்காய் எண்ணெய் தயாரித்து ஏற்றுமதி. மருமகள் அவன் வியாபாரக் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்கிறாள்.


அவனுக்கு ஒரு பெண் குழந்தை. ஒரு பையன். நாள் கிழமை, விசேஷ நாட்களில் எல்லோரும் வந்து விட தாத்தா, பாட்டி என்று குழந்தைகள் சுற்றி, சுற்றி வர ஆனந்தமான வாழ்க்கைதான்.
ஆனால் இந்த மாதிரியான சமயங்களில் அக்கா, அண்ணா, உறவுகள் கிண்டலாக
எதானும் பேசும்போது மனது கஷ்டமாகி விடுகிறது. அக்கா, அண்ணாவுக்கு இங்கு மரியாதை ஜாஸ்தி. அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று. வனஜாவையும் நக்கலாகப் பேசுவார்கள்.


“ உனக்கு சமர்த்து பத்தாது?- அக்கா.
“ பையனைப் படிக்க வச்சு வெளிநாடு அனுப்பலாம்ல”- அக்கா.
“என் பையனைப் பாரு. மாசம் பத்து லட்சம் சம்பளம்.”
“ வந்திருக்கானா?”
“எங்க வரது? கொள்ளையா வேலை. நகர்றதுக்கு நேரம் இல்லை. இந்தியா வந்து நாலு வருஷம் ஆச்சு”
“ என் பையனும் அப்படித்தான். படிச்சான். கேம்பஸ்ல செலக்ட் ஆகி அமெரிக்கா
போனான். கெட்டிக்காரன். வருஷம் ஒரு கோடி சம்பளம்.”- அண்ணா
இருவர் பேச்சிலும் பெருமை கொட்டி வழிந்தது.
“ எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்”
“ புத்திசாலித்தனமும் வேணும்”
“ இப்ப பாரு. நாங்க எவ்வளவு வசதியா இருக்கோம். கை நிறைய காசு. காரு, வசதி.”
“ எங்க இருக்கீங்க?”- அத்தை பெண்.
“ எங்களுக்கு என்ன? ஜம்முனு ஹோம்ல இருக்கோம். சொந்தமா அங்க வீடு
வாங்கிட்டோம். நல்ல வசதி. சாப்பாடு. டெய்லி டாக்டர் வரார். நினைச்சா உடனே எங்க
வேனாலும் போகலாம். பத்திரம்.”- அண்ணா, அக்கா ஒரே ஹோமில்தான் இருக்கிறார்கள்.
“ பாட்டி” என்று ஓடி வந்து வனஜாவின் மடியில் அமர்ந்தது மகனின் பெண் குழந்தை.
“ அம்மா இந்தாங்க” ஒருவர் கொண்டு வந்த சர்பத்தை வாங்கி வனஜாவிடம் நீட்டினான்
மகன் பரத்.
“ டைம் ஆகுது. உங்களுக்கு லோ சுகர் ஆயிடும்”

மருமகள் சர்பத்தை எடுத்து அனைவருக்கும் தந்தாள். பாட்டி உனக்கு வடை என்று ஓடி வந்தது பரத்தின் மூன்று வயது மகன்.
“ பாத்திக்கு” என்ற பேரனை அனைத்து முத்தமிட்டாள் வனஜா.
“ நீ இப்ப எங்க இருக்கே பரத்?” அக்கா
“ வெளிநாடு போகலையா?” அண்ணா.
“ இல்லை”
“ அதுக்கெல்லாம் நல்ல படிப்பு வேணும்” அண்ணா குரலில் ஒரு கிண்டல்.
“ இப்ப எங்க இருக்க?”
“ அப்பா, அம்மாவை ஹோமுக்கு அனுப்பாம, அவங்களோடு இருக்கேன்”. சிறிது கர்வம்
தொனித்தது பரத் குரலில்.
சட்டென்று நிமிர்ந்தாள் வனஜா. அவளின் அத்தனை நேர சஞ்சலமும் அகல
பேரன்,பேத்திகளை இறுக்கி அனைத்து முத்மிட்டாள்.
அதை ஏக்கத்துடன் பார்த்தது அக்கா, அண்ணா குடும்பங்கள்.