தொடர்கள்
ஆன்மீகம்
தாயாய் வந்த ஈசன்..!! திருச்சி தாயுமானவர் கோயில்…!!! - மீனாசேகர்.

Eason who became a mother..!! Trichy Thayumanavar Temple…!!!

தமிழ் நாட்டில் திருச்சி மாநகரின் மையப்பகுதியில் கம்பீரமாக அமைந்துள்ள மலைக் கோட்டை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் அருள்பாலிக்கின்றார். மலையின் நடுப்பகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். அதாவது தாயும் + ஆனவர் (தாயாகவும் மாறியவர்) மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார்.
பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது மிகவும் அற்புதமானது.
இத்திருக்கோவில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், ஆகியோர் இங்குள்ள சிவபெருமானைப் போற்றிப் பல பாடல்களை எழுதியுள்ளனர் .
இத்திருக்கோவில் அமைந்துள்ள மலை திருசிரா மலை, திரிசிர கிரி, முத்தலை மலை, பிரமகிரி மலை என்றும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. திருக்கோவில் அமைந்துள்ள இடத்திற்கு முன்னர் திரிசிர புரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது.

ஸ்தல புராணம்:
இந்த கோயில் தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. ஒருமுறை திருக்கயிலையில் சிவபெருமானை வழிபட ஆதிசேஷனும், வாயுபகவானும் வந்தபோது, இருவருக்கும் இடையே யார் பெரியவன் என்றும் போட்டி ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேஷன் கைலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக
வாயுதேவன் பலத்த காற்றை வீசக் கைலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு ஒன்று திருச்சியில் உள்ள பாறைக் கோட்டை. மற்ற இரண்டு திருகோணமலை (இலங்கை)மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி(ஆந்திரப் பிரதேசம்)
இப்படித்தான் திருசிரமலை தென் கயிலாயம் என்ற பெயர் பெற்றது என புராண வரலாறு கூறுகிறது. இதைத்தவிர திரிசிரன் என்ற அரக்கன் இங்குள்ள சிவனை வழிபட்டு பலவித பேறுகளையும் பெற்றமையால் திரிசிர புரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.

தாயாய் வந்த ஈசன்

Eason who became a mother..!! Trichy Thayumanavar Temple…!!!

இத்திருக்கோயிலில் ஈசனே தாயாக வந்து சுகப்பிரசவம் பார்த்ததால் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இங்குப் பிரார்த்தனை செய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும். முன்னொரு காலத்தில் திரிசிரா மலையில் தனகுப்தன் என்னும் வணிகன் தனது மனைவி இரத்தினாவதியுடன் வாழ்ந்து வந்தான். இந்த தம்பதியர் செவ்வந்தி நாதர் மீது தீராத பக்தி கொண்டவர்கள். இரத்தினாவதி தன் பேறு காலம் நெருங்க, உதவிக்குத் தன் தாயை அழைத்திருந்தாள். அவளது தாயாரும் மகள் இல்லம் சேர்வதற்காகக் காவிரி ஆற்றைக் கடக்க முற்பட, அப்போது பெய்த பெருமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, தாயாரால் உரிய நேரத்தில் வர இயலவில்லை. இரத்தினாவதி சிவபெருமானை வேண்டியதையடுத்து, செவ்வந்தி நாதரே அவரது தாயைப் போல் வந்து ரத்தினாவதிக்கு பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். தாயையும், பிறந்த ஆண்மகனையும் ஏழு தினங்கள் தக்கவாறு கவனித்துக் கொண்டார். இரத்தினாவதியின் உண்மையான தாயார் வந்ததும் தாயுமானவராக வந்த ஈசன், மறைந்து, ரிஷப வாகனத்தில் மட்டுவார் குழலம்மையுடன் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார். இறைவன் கர்ப்பிணிப்பெண்ணிற்குத் தாயாக இருந்து உதவிபுரிந்தமையால் அன்னாளில் இருந்து தாயுமானவர் என அழைக்கப்படுகிறார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டும் விதமாக இன்றும் ஒவ்வோர் ஆண்டும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் விழாவில் செட்டிப் பெண் மருத்துவம் என்ற நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இரத்தினாவதியின் வழி வந்த குலத்தினர் இந்தத் திருவிழாவை இப்போதும் விமரிசையாக நடத்துகிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகப்பிரசவ மருந்து வழங்கப்படுவதும் விசேஷம்.

கோயில் வரலாறு:
இத்திருக்கோவில் பண்டைய தமிழக கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் , நேர்த்தியான அமைப்புடன் மலையின் மீது திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளதால் முன்னோர்களின் திறமைக்குச் சான்றாக விளங்கி வருகிறது. இத்திருக்கோவில் பிற்காலத்தில் சோழர்கள் , பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் , விஜய நகர அரசர்களாலும் திருப்பணிகள் செய்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்தல அமைப்பு:

Eason who became a mother..!! Trichy Thayumanavar Temple…!!!

இங்குள்ள மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 258
படிகள் ஏறிச் சென்றால் தாயுமானவர் திருக்கோயிலில் சுமார் ஐந்து அடி உயரத்தில் பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள செவ்வந்தி நாதர்' என்கின்ற தாயுமானவர் மேற்குப் பார்த்தபடி இருந்து அருள்புரிகிறார். (கோயில்களில் சிவன் சந்நிதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்குப் பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்கச் சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சந்நிதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு, பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.
இக்கோயிலில் கிழக்கு பார்த்தபடி மாட்டுவார் குழலி அம்பாள் தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்குள்ள மற்ற சந்நிதிகள் கம்பத்தடி விநாயகர், வள்ளி தேவசேனா சண்முகர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, திரிபுரசுந்தரி, செவ்வந்தி விநாயகர், சோமாஸ்கந்தர் மற்றும் சிவகாமசுந்தரி. ஜீரகேஸ்வரர், தண்டாயுதபாணி, காலபைரவர், சண்டிகேசர் மற்றும் நால்வர் சந்நிதிகளும் இங்கு உள்ளன. இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் அனைத்து கிரகங்களும், சூரியனை நோக்கியவாறு அமைந்துள்ளன. அம்பாள் சந்நிதிக்கு அருகில், ஒரு பள்ளத்திற்குள், பாதாள அய்யனார் இருக்கிறார்.

ஸ்தல சிறப்பு :
ஒரு தாய் தன் மகளுக்குச் செய்ய வேண்டிய பிரதான கடமை, அவள் பிரசவத்திற்கு உதவுவதே. அத்தகைய அருஞ்செயலைச் செய்த நாதன் தாயுமானவன் என்பதால், கர்ப்பிணி ஸ்திரீகளின் கவலைகளைப் போக்கும் தலமாக இது விளங்குகிறது. இங்குத் தாயுமானவனை எண்ணி வேண்டிக் கொண்டால், சுகப்பிரசவமாகும் என்பது நம்பிக்கை. திருமூலர் மரபில் வந்த சாரமா முனிவர் சிவபெருமானைச் செவ்வந்தி மலர்களால் வழிபட்ட திருத்தலம் . பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் சிறப்பாகும். மேலும் சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான கங்காள மூர்த்தம் இத்தலத்தில் உள்ளது. அகத்தியர், அனுமன், அர்ச்சுனன், ராமர், இந்திரன், சப்த ரிஷிகள், பிரம்மா, ஜடாயு ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோயிலில் உள்ள ஜூரகரேஸ்வரரை வழிபட்டால் ஜுரம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடலாம். மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும்.

Eason who became a mother..!! Trichy Thayumanavar Temple…!!!

திருவிழாக்கள்:
சித்திரையில் பிரம்மோற்சவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது.
சித்திரை மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாள் 'செட்டிப்பெண் மருத்துவம்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தையைக் கையில் ஏந்தியபடி இரத்தினாவதியும், சுவாமி- அம்பாளும் திருவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்கள்.

பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காகத் தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். சுகப்பிரசவம் ஆன பிறகு, கோயில் வரை "வாழைத்தாரை" சுமந்து சென்று, தாயுமானவருக்குக் காணிக்கையாகச் செலுத்திய பிறகு, அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களைப் பிரசாதமாக விநியோகிப்பார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00மணி வரையில் கோவில் திறந்திருக்கும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
இத்திருக்கோவில், திருச்சி விமான நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், திருச்சி புகைவண்டி நிலையத்திலிருந்து 5கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5கி.மீ தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
திருச்சிக்குச் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான இரயில்கள் மற்றும் பேருந்துகள் உள்ளன. திருச்சியின் மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவிலை அடைய மெயின் காவலர் வாயில் அல்லது தெப்பக்குளத்தில் இறங்க வேண்டும்.

சுகப்பிரசவம் அருளும் திருச்சி தாயுமானவரைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!