தொடர்கள்
வலையங்கம்
ஆலோசனை மட்டும் போதாது

20240410163259310.jpg

சமீபத்தில் வெயிலின் தாக்கம் பற்றி முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். குடிநீர் வினியோகம் பற்றி தலைமைச் செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

நாடு முழுவதும் வெயிலில் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அது தமிழ்நாட்டையும் விட்டு விடவில்லை. ஊட்டியே வெயிலில் வதைப்படும் ஒரு நகரமாகி விட்டது இப்போது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வெயிலின் கொடுமையை சமாளிக்க சில விஷயங்களை அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. பல இடங்களில் மின்தடை காரணமாக இரவில் மின்விசிறி, ஏசி போன்ற மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால், அமைச்சர் தடையில்லாத மின்சாரம் தருவதாக சொல்கிறார். கூடவே சென்னையில் மின்தடையை கவனிக்க அறுபது பறக்கும் படைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் சொல்வதிலிருந்து அவரது கருத்தில் அவர் எந்த அளவுக்கு முரண்படுகிறார் என்பது தெரிகிறது. எனவே எதார்த்த நிலையை உணர்ந்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பது நல்லது.

விவசாய பணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தான் மும்முனை மின்சாரம் என்ற நிலை இருக்கிறது. அதை மாற்றி 24 மணி நேரமும் தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல் நியாய விலைக் கடைகளில் வெயில் நேரத்தில் மக்கள் நீண்ட கியூ வரிசையில் நிற்க விடாமல் விரைவில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல்வர் அமைச்சர் அதிகாரிகள் ஆலோசனை என்பது இந்த சின்ன சின்ன விஷயங்களில் கவனம் எடுத்து நடவடிக்கை எடுப்பது தான், மக்களை வெயிலின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கான உண்மையான நடவடிக்கை. இதை அரசு உணர வேண்டும்.