தொடர்கள்
கவர் ஸ்டோரி
அட்’மிஷன்’ ஆரம்பம் ! -விகடகவியார்

எல். கே .ஜி அனுபவங்கள்

20240424114937581.jpeg

1960களில் எல் கே ஜி, யு கே ஜி, மழலையர் பள்ளி இதெல்லாம் கிடையாது.

வீட்டில் உள்ள பெரியவர்கள் அருகில் இருக்கும் பள்ளியில் ஐந்து வயது முடிந்து ஆறாவது வயது முதல் வகுப்பில் ஆரம்பப் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்போது அங்கிருக்கும் ஆசிரியர் அட்மிஷன் வந்திருக்கும் மழலையர் தலையை சுற்றி காதை தொடசொல்லுவார்கள் . காதை தொட்டால் அட்மிஷன் ஓவர்.கட்டணம் இல்லை.

19 70களில் தான் நர்சரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. நர்சரி பள்ளிகளை தனியார் தான் நடத்தி வந்தார்கள். இப்போதும் தனியார் தான் நடத்தி வருகிறார்கள்.

நான்கு வயது குழந்தைகள் நஸ்ரி பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்கப் பட்டார்கள் கட்டணம் பெரிய அளவில் எல்லாம் இல்லை. அங்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் இல்லை. படித்து வேலையில்லாமல் இருந்த பெண்களை நர்சரி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமற்றப்பட்டார்கள். சம்பளமும் ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு ப்ரீ கேஜி எனப்படும் மழலையர் பள்ளிகள் அறிமுகமானது. அதாவது பள்ளிகளில் சேர்வதற்கு முன்பு குழந்தைகளுக்கான இது ஒரு பயிற்சி மையம். இங்கு ரைம்ஸ், A,B,C,D ஒன்று முதல் நூறு இப்படி கற்றுத்தர ஆரம்பித்தார்கள். இதனை பெரும்பாலும் தாய்மார்கள் வரவேற்றார்கள். தவிர இப்படி மழலைப் பள்ளியில் குழந்தைகள் சேர்ப்பது தங்களுக்கு கௌரவ அந்தஸ்தாகவும் நினைக்க ஆரம்பித்தார்கள்.

போகப் போக நர்சரி பள்ளிகள் புற்றீசல் போல் அதிகளவு வரத் தொடங்கியது. தனியார் நர்சரி பள்ளிகள் மெல்ல ஆரம்பப் பள்ளிகளாக விரிவுபடுத்தப்பட்டு இப்போது உயர்நிலை வரை என்று விரிவுபடுத்தப்பட்டது.

இப்போது தனியார் பள்ளிகள் கல்வியை கிட்டத்தட்ட ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கி விட்டது.

கல்வி இப்போது தொழில் என்று ஆகி விட்டது. பல பள்ளிகளில் சேர்க்கை என்பது குதிரை கொம்பு என்ற அளவில் தற்சமயம் இருக்கிறது. அரசியல் தலைவர்கள் சிபாரிசு, சினிமா பிரபலங்கள் சிபாரிசு இதெல்லாம் இருந்தால் தான் சேர முடியும் என்ற அளவுக்கு அந்தப் பள்ளிகள் பெருமை பெரிய அளவு பேசப்படுகிறது.

எனக்கு தெரிஞ்ச ஒரு பழைய நடிகர் குடும்பம் பல இடங்களில் பள்ளிகள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல் தங்கள் குடும்ப வாரிசுகளுக்கு பள்ளிகளை பிரித்துக் கொடுத்த கதை எல்லாம் நடந்துள்ளது.

பெரும்பாலும் தனியார் பள்ளிகள் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்சி தான் அங்கு செயல்பாட்டில் இருக்கிறது.

தனியார் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்விக்கு தான் முக்கியத்துவம். அங்கு தாய் மொழியான தமிழ் இரண்டாம் இடம் அல்லது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

விண்ணப்ப படிவத்திலேயே ஆங்கிலம் முதன்மை மொழி அதற்கு அடுத்து இந்தி,பிரெஞ்சு ,ஜெர்மன் இப்படி வரிசைப்படுத்தி கடைசியாக தமிழ் என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.

தனியார் பள்ளியில் தமிழுக்கான நிலைமை இதுதான். இதைப் பற்றி எந்த அரசியல் கட்சிகளும் பேசாது போராட்டம் நடக்காது. எனில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் நடத்துவது அரசியல் பிரபலம் அல்லது அரசியல் ஆதரவுள்ள பிரமுகர்கள் என்பதுதான்.

இன்றைக்கு தனி நபர் வருமானத்தில் கல்விக்கான செலவு தவிர்க்க முடியாததும் முக்கியமானதும் என்று ஆகிவிட்டது. பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகள் கல்வி படிப்பதை விரும்புகிறார்கள். இது ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என்று எல்லோர் விருப்பமும் தனியார் பள்ளிகள் மீது தான் இன்று வரை இருக்கிறது.

மாநில அரசு தனது வருவாயில் 35 சதவீதம் கல்விக்காக செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கல்வி என்பது பனிரெண்டாம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் கிடையாது.

பாடப்புத்தகங்கள், சீருடை, கல்விக்கான உபகரணங்கள் புத்தகப் பை, காலனிகள், இலவச மிதிவண்டி, பிளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் இது தவிர காலையில் சிற்றுண்டி, மதியம் உணவு இப்படி சகல வசதிகளும் இருந்தும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தனியார் பள்ளிகளில் போட்டி போடும் அளவுக்கு இல்லை. இதற்குக் காரணம் நமது பாடத்திட்டம் மாணவர்கள் மீது காட்டும் அக்கறையில் உள்ள குறைபாடு இவைதான்.

பல அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் தேர்ச்சியில் குறிப்பிட்ட சதவீதத்தை எட்டி சாதனை படைத்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். அது அந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பொறுப்புணர்வு தான் காரணம் தவிர வேறு ஒன்றும் இல்லை. சில மாநகராட்சி பள்ளிகள் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சியை செய்து காட்டி சாதனை படைத்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் இன்னொரு அவலமும் நடக்கிறது ஒன்பதாம் வகுப்பு வரை அந்த மாணவன் தேர்ச்சி பற்றி பெரிதாக நிர்வாகம் அலட்டி கொள்ளாது. ஒன்பதாம் வகுப்பில் அந்த மாணவனின் தேர்வு மதிப்பெண்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றால் தயவு தாட்சினையும் இன்றி பெற்றோரை அழைத்து உங்கள் மாணவனை பத்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள முடியாது நீங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள். காரணம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வில் தேர்ச்சி சதவீதத்தை விளம்பரமாக காட்டி தான்.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண கொள்ளை நடத்துகிறது. தேர்ச்சி சதவீதம் குறைந்தால் வருமானம் குறையும் என்ற பயம் தான் இதற்குக் காரணம். அப்போது அந்த மாணவனுக்கு அபயம் தருவது அரசு பள்ளி தான். பெரும்பாலும் இப்படி தனியார் பள்ளிகளில் விரட்டி அடிக்கப்படும் மாணவர்கள் வேறு தனியார் பள்ளியிலும் சேர்க்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கும் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடும் என்ற பயம் அப்போது அவர்களுக்கு அடைக்கலமாக இருப்பது அரசுப் பள்ளிகள் தான்.

எல் கே ஜி யில் சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் வாங்க சில பிரபலமான பள்ளிகளில் இரவே போய் கியூ வரிசையில் முண்டியடித்துக் கொண்டு காத்திருந்து மறுநாள் காலை 10 மணிக்கு விண்ணப்பங்கள் வாங்கியதும் அதையே ஒரு பெரிய சாதனையாக பெருமை பேசும் பெற்றோர்களும் உண்டு.ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை தங்கள் வசதிக்காக மறந்து விடுகிறார்கள். இந்த பிரபல பள்ளியில் சொல்லித்தரும் அதே பாடங்கள் அதே புத்தகங்கள் தான் மற்ற பள்ளிகளிலும் என்பதுதான்.

குழந்தைகளின் கல்வி என்பது பள்ளிகளை தாண்டி பெற்றோர்கள் கவனிப்பில் தான் அவர்கள் வெற்றி பெற முடியும். பள்ளிகளில் இன்று என்ன சொல்லி தந்தார்கள் என்ன எழுதினார்கள் என்பதை பெற்றோர்கள் குழந்தைகளிடம் விசாரிக்க வேண்டும்.

அவர்கள் பள்ளிப்பையை சோதனை செய்து என்ன எழுதினார்கள் பள்ளிப்பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் இப்போது கவனிக்க வேண்டும் என்ற ஒரு சூழல் அமைந்துவிட்டது என்பதை நாம் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாக அன்னை வளர்ப்பில் தான் என்ற பாடல் எதார்த்தமானது. கல்விதான் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இதைப் பெற்றோர்களும் ஆட்சி செய்பவரும் புரிந்து கொண்டால் கல்வியும் முன்னேறும் நாடும் முன்னேறும்.

பல உலக நாடுகளில் படிப்பு இலவசம்…இங்கோ பணம் கொடுத்து சேர்க்கும் அட்”மிஷன் “ இனி சூடுபிடிக்கும் என்பதே நிஜம்!.