தொடர்கள்
கல்வி
சர்ரென உயரும் கல்வி கட்டணம்-மாலாஸ்ரீ


20240424175906424.jpeg
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு பிரபல மற்றும் சாதாரண தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான அனைத்து கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டது.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரம் சிறிதளவு உயர்ந்து, ஒருசில பள்ளிகள் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 100 சதவிகித மாணவ-மாணவிகள் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.


அனைத்து அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் சராசரி கட்டணமே வசூலிக்கப்படுவதால், வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னையின் பல்வேறு பிரபல தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை அதிக பொருட்செலவில் படிக்க வைக்கும் ஒருசில குடும்பத்திரை சந்தித்து பேசினோம்.

அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “இப்போ நாங்க இங்க புதுசா ஃப்ரிகேஜில குழந்தையை சேர்க்கணும்னா, குறைந்தபட்சம் ₹2 லட்சம் கட்டணும். அதுக்கு ஏதேதோ பேர்ல ரசீது தருவாங்க. நோ யூஸ்… இதுக்காக மணிக்கணக்குல கியூவுல நின்னு, குழந்தைக்கு பதிலாக பேரண்ட்ஸ் பர்சனல் இன்டர்வியூல பாஸானா, குழந்தைக்கு சீட் கன்பார்ம்! இதுவே ஒன்று முதல் பிளஸ் 2 வரை, அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆண்டுதோறும் கல்வி கட்டணங்கள் உயர்ந்துகிட்டே இருக்கு. ஆனா,
பல்வேறு தனியார் பள்ளிகளில் கல்வித்தரமும் தேர்ச்சி விகிதமும் சராசரியாகவே உள்ளது. இங்கு பசங்களுக்கு எவ்வித ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிஸ் கிடையாது. ஆனா, அதுக்கு தனியே ஆயிரக்கணக்கில் ஃபீஸ் வசூலிப்பாங்க. என்ன பண்றது… அக்கம்பக்கத்தினர் தொல்லை தாங்க முடியலை. பசங்களை கடன் வாங்கி படிக்க வைக்கிறோம்!” என்று அனைவரும் வேதனை தெரிவித்தனர்.

கூடுவாஞ்சேரி அருகே வாடகை இடத்தில் செயல்படும் ஒரு பிரபல பள்ளியின் அபார வளர்ச்சி மற்றும் அதிகளவு கல்வி கட்டணம் வசூலிப்பதைப் பார்த்து கணக்கிட்டு, ‘எனக்கு வாடகை வேண்டாம்.
என்னையும் இப்பள்ளியில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று பள்ளி இயங்கும் தனியார் நிலத்தின் உரிமையாளர் கூறியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்கின்றனர் அப்பாவி பெற்றோர்கள்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொது தேர்வு முடிவில், சென்னை பெரம்பூரில் இயங்கும் மாநகராட்சி பள்ளி மாணவி அதிக மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். அவரது சரளமான ஆங்கிலப் பேச்சு வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும், இந்தாண்டு பத்து மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிகளவிலான அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று, 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் ஏழை மற்றும் நடுத்தர
மக்களிடையே மிக வேகமாக பரவியது.


இதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கல்வி கட்டணங்களை கட்ட முடியாமல் அவதிப்பட்ட பல்வேறு குடும்பத்தினர், தற்போது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் குறிப்பிட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் தங்களின்
குழந்தைகளை சராசரி கல்வி கட்டணத்துடன் சேர்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் மாநகராட்சி
பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் சேர்த்தால், ஆங்கில பேச்சுத் திறனுடன் பல்வகை தொழில்நுட்ப அறிவை திறம்பட கையாள்வர் எனக் கருதி, கடன் வாங்கி அதிக கல்வி கட்டணத்துடன் படிக்க வைத்தோம். ஆனால், அப்பிள்ளைகள் எவ்வித வேலைக்கும் செல்லாமல், வீட்டுக்கும் பயன்படாமல், செல்போன் மூலமாக ஆன்லைன் சூதாட்டத்திலேயே பொழுதைக் கழிக்கின்றனர். தற்போது நிலைமை எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

ஒரு சில பிரபல தனியார் பள்ளிகளின் தொழில் போட்டியால், அதிகளவு விளம்பரங்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர். இதில் செலவான தொகைகளை மாணவர்களிடம் இருந்தே பல்வேறு வகைகளில் கல்வி கட்டணங்களாக வசூலிப்பதில் குறியாக உள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளின் கல்வி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.


இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருசில மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை ஆசிரியர்கள் ஊக்குவித்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரமும் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகின்றன. இப்பள்ளிகளில் கல்வி
கட்டணமும் சராசரிக்கும் குறைவு என்பதால், தற்போது அனைத்து வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.


இதற்கு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஒருசில அரசு உயர் அதிகாரிகள் மட்டுமே மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.