தொடர்கள்
பொது
யாமறியோம் பராபரமே! -  ஆரா 

20240514051850378.jpeg

டோகோ (Toco) - இவரை பற்றி பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சட்டென்று நினைவுக்கு வரும் அளவுக்கு அவ்ளோ பெரிய அப்பாட்டக்கர் இல்லைதான், ஆனாலும் ஜப்பானின் நாய் மனிதர் என்றால் பலருக்கும் தெரிந்துதான் இருக்கும்.

தெரியாதவர்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி:

இந்த டோகோ என்று அழைக்கப்படும் மனிதரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. இவர் ஜப்பானில் ஒரு பெருந்தனக்காரர் என்பது மட்டும் திண்ணம். இவருக்கு நான்கு கால் பிராணிகள் மீது அலாதி பிரியம். குறிப்பாக, பிராட் கோலி (விராட் கோலி இல்லை) அல்லது ரஃப் கோலி என்ற புசு புசு பங்களா நாய் வகை மீது தனி காதல் என்றே சொல்லலாம். காதல் என்றாலே ஒரு வகை பித்து தானே?! இந்த பித்து முத்திப்போனதன் விளைவு, இவர் 2 மில்லியன் yen, கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த நாய் போலவே தன்னை உருமாற்றி கொண்டு விட்டார். இதற்காக இவர் பல இன்னல்களை அனுபவித்து இருந்தாலும் அதை ஒரு சுகமான சுமை போல கருதுகிறார்! அந்த நாயின் நடை (நோ உடை) பாவனைகளை கச்சிதமாக பின்பற்றி அந்த நாயைப் போலவே வளைய வருகிறார். இது கொஞ்சம் பழைய செய்தி தான். (அதாவது எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல எப்போதும் இல்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டும் தானாம்)

ஆனால் இவர் சமீபத்தில் புதிய ஆசை ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது வரும் காலங்களில் அவர் வேறு நான்கு கால் பிராணிகள் - உதாரணமாக பாண்டா கரடி, சாதா கரடி போன்ற வேறு ஒரு பிராணி போலவும் உருமாற வேண்டும் என்று விரும்புகிறாராம். பூனை மேலும் ஒரு கண் உள்ளது, ஆனால் தன் மனித உடல் பூனைக்கு மிகவும் பெரிதாக இருப்பதால் நன்றாக இருக்காது என கருதுகிறாராம். சரி, இந்த நாய் சேகர் வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றால், இது தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் அதே நேரத்தில் பார்க் பீச் என்று போகும் போது தன் புசு புசு முடியில் மண் சேறு ஓட்டுவதை சுத்தம் செய்வது தான் கடினமாக இருப்பதாகவும் கூறுகிறார்!

இந்த வினோதமான மனப்போக்கு உள்ளவர்கள் தீரியன் (Therian) என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது இவர்கள் தங்களை ஒரு விலங்கைபோல கருதுகின்றனர். இது போல பல வகை மனித இயல்புகள் இன்று நிதர்சனமாக உள்ளன.

குறிப்பாக தான் யார் என்ற அடையாளம் சமுதாய நோக்கைப் பொறுத்து அல்லாமல், தன் எண்ணம் போல அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்து பரவலாகிக் கொண்டு வருகிறது. உதாரணமாக, நம் சமூகத்தில் திருநங்கைகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் வழக்கம் முன்னைக்கு இன்று சாதாரணமாக கருதப்பட்டு ஓரளவு சமுதாய புரிதலையும் ஏற்பையும் பெற்று வருகிறது. சில நாகரீகங்களில், குறிப்பாக ஐரோப்பிய கலாச்சாரம் ஊடுருவிய மேலை நாடுகளில் இந்த சுய அடையாளம் என்பது பல புதிய எல்லைகளையும் தாண்டி தனி மனித சுதந்திரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பொது சமூகம் இதனை ஏற்றுக்கொண்டு விட்டதா என்றால் அது ஒரு கேள்விக்குறி தான்!

இன்று கலிபோர்னியா, நியூ யார்க் போன்ற முற்போக்கு சிந்தனை அதிகம் ஊக்குவிக்கப்படும் இடங்களில் இது ஒரு முக்கியமான பேசுபொருளாக உருவெடுத்து உள்ளது. அந்த மாகாண சட்டங்கள் ஒருவர் தன்னை எப்படி வேண்டும் ஆனாலும் அடையாள படுத்திக்கொள்ளலாம் என்று வழி வகுக்க முயன்று வருகின்றன. இதன் மூலம் ஒரு ஆண் தன்னை பெண் என்று நினைத்தால் அவர் உயிரியல் ரீதியாக (biologically) அவ்வாறு இல்லாவிடினும் அவருக்கு அந்த சுதந்திரம் உண்டு என்ற கருத்து பரவலாக பலம் பெற்று வருகிறது. பாலின பாகுபாடில்லாத (ஜெண்டர் நியூட்ரல்) ஓய்வு அறைகளைத்தாண்டி இன்று இந்த ஆண் நினைத்தால் ஒரு பெண்ணின் ஓய்வு அறையை பயன் படுத்திக்கொள்ளலாம் என்று ஒரு சாரார் சொல்கின்றனர். இதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. சில தனி விளையாட்டுகளிலும், பெண் அணிகளிலும், பெண் என்று கருதும் ஆண்கள், பெண்களின் இடத்தைப் பிடித்தும் விட்டனர். அவர்களின் உயிரியல் ஆணை ஒத்து இருப்பதால், அவர்களின் பலம் மற்றும் திறன் ஆண் போட்டியாளர்களை ஒத்து இருக்கிறது. இதனால் எதிர் அணிக்கும், சக போட்டியாளர்களுக்கும் சம தள வாய்ப்பு பறிக்கப்படுவதாக பலர் புலம்புகின்றனர்.

நமக்கு பாலினம் என்றால் செக்ஸ் மற்றும் ஜெண்டர், இரண்டுக்கும் பொருந்தும். ஆனால் இந்த புதிய கண்ணோட்டத்தில் செக்ஸ் வேறு, ஜெண்டர் வேறு. மேலும், மனம் சார்ந்த இந்த புது அடையாளங்கள் நம் உயிரியல் சார்ந்த அடையாளங்ளைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை, என கருதும் போக்கு அதிகரித்து வருகிறது. இது சரியா தவறா? இதனால் சாதாரண மக்களுக்கு என்ன சாதக பாதகங்கள் ஏற்படும்? ஒரு இரண்டு சதவீததிற்கும் குறைவான எண்ணிக்கை உள்ள இந்த வித்தியாசமான எண்ண ஓட்டம் மற்றும் மனப்பாங்கு உள்ள மக்களின் தேவைக்காக பொதுவான சட்டங்கள் எந்த அளவு மாற்றப்பட வேண்டும்? ஆனால் ஜன நாயகத்தில் சிறுபான்மையை காப்பது தலையாய கடமை ஆயிற்றே? என்ன செய்ய போகிறோம்? நம் பாரத சமூகம் மிகவும் நேசிக்கும் இந்த 'நான் யார்?' என்ற தேடல் இப்படி புது பரிமாணம் பெறும் என்று நம் ஞானிகளும் நினைத்து இருப்பார்களோ தெரியவில்லை. சரி இதெல்லாம் எங்கு போய் முடியும்? யாமறியோம் பராபரமே