தொடர்கள்
கதை
மான்தோல் செருப்பு -சுஶ்ரீ

20240514065146557.jpeg

என் புது ஸ்கெச்சர்ஸ் ஷூ என்பையன் யு.எஸ்.ல காஸ்ட்கோ கடைல வாங்கிக் கொடுத்தது.

போன ஆகஸ்ட் மாசம் வாங்கினோமா,78 டாலர் (கிட்டத்தட்ட 6500 ரூபா)கொடுத்து எதுக்குடா இப்பனு கேட்டேன்.நீங்க இந்தியால வாக்கிங் போறப்ப போட்டுக்கோங்கோ ரொம்ப கம்பஃர்டபிளா இருக்கும்னான்.

அழகான பேக்கிங்ல அப்படியே அந்த செக்இன் லக்கேஜ்ல போட்டு கொண்டுவந்தது தான்.நடுநடுவே எடுத்துப் பாப்பேன் அழகா பிஸ்கட் கலர்ல மினுமினுக்கும்.அப்பதான் வயசுக்கு வந்த பொண்ணு போல ஒரு கவர்ச்சி.

அழுத்தி தொடக் கூட மனசு வராது. பழைய புடவைத் துணியால அழுந்தாம தொடைச்சுஉள்ளே வச்சிடுவேன்( இந்த ரிச்சுவல் மத்யானம் அலமு அசந்து தூங்கற நேரத்துலதான்)

என் பையன் லச்சுவும் ஃபோன் பண்றப்ப கேப்பான்,ஷூ வாக்கிங்

போக செளகரியமா இருக்கானு.நான் ஏதோ மழுப்பலா சொல்லி சமாளிப்பேன்.6500ரூபாயை காலுல மாட்டிண்டு நடக்க கூசாதோ?

ஒண்ணரை வருஷம் முன்னால ராஜஸ்தான் போறப்ப ஒரு கடைக்காரன் ராஜா மகாராஜா போடற மான்தோல் செருப்பு, முழுதும் கைல தெச்சது ,லிமிட்டட் எடிஷன்,ஒரு ஜோடி வாங்கினா லைஃப்டைம் வரும்,உங்க முகத்தைப் பாத்தா உங்களுக்குதான் இதை கொடுக்கணும்னு தோணுது,வெறும் 5000 ரூபாய்தான்னு ஆரம்பிச்சு 800 ரூபாய்க்கு என் தலைல கட்டின செருப்பைத்தான் போட்டுண்டு நடக்கறேன் இன்னும்.இப்ப தன் முழு வண்ணம் இழந்து சாம்பல் கலர்ல காலை அறுக்கறது நடக்கறப்ப.

அலமு சொல்ல சொல்ல கேக்காம வாங்கினதாச்சே, அதனால வீம்புக்கு போட்டுண்டு நடக்கறேன்.

நேத்து ஃபோன்ல தன் அம்மாவோட லச்சு ரொம்ப நேரம் பேசிண்டிருந்தான். நைட் டிபன்தோசை வாத்து, என் தட்டுல போட்டுண்டே அலமு சொன்னா,

”உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“கீழ் வீட்டு ஜெயா மாமிக்கும், அவ நாட்டுப் பொண்ணுக்கும் உப்புப் பெறாத விஷயத்துக்குகுடுமிப்பிடி சண்டை அதுதானே”

“சரியான அவசரக் குடுக்கை நீங்க,எட்டாவது மாசத்துலயே ஜனனமோ”

“இல்லை ரொம்ப நாள் பாடாப் படுத்தி 9 நாள் தள்ளிப் பிறந்தேனாம்”

“அது இப்ப ரொம்ப முக்கியம்,ஏதாவது சொல்ல வந்தா பேச விடாம ஏதாவது தர்க்கம்”

அடுத்த தோசை என் தட்டுல சிவந்து விழுந்து தன் கோபத்தை காட்டியது.

“இல்லை அலமு அந்த தினமும் நடக்கற கீழாத்து சண்டையைதான் சொல்லப்போறேனு நினைச்சேன்,அதான்…….”

“லச்சு சொன்னான் சர்ப்ரைசா இருக்கட்டும் அப்பாக்குனு,

எனக்குதான் உங்க கிட்ட எதையும் மறைக்கத் தெரியலை உளறிடறேன்,

உங்க பிள்ளை நாளனிக்கு வரான் அவ்வளவுதான்”

சட்னு எனக்கு ஞாபகம் வந்தது,அந்த பெரிய செக்இன் பெட்டில

இருக்கற ஸ்கெச்சர் ஷூதான்.அச்சோ அவன் வரப்ப நான் அதை

யூஸ் பண்றதில்லைனு தெரிஞ்சா வருத்தப் படுவானேன்னுதான்.

இதே ஞாபகத்துல படுத்துண்டதாலே,தூக்கமே வரலை.ராத்திரி ஒரு மணிக்குஎழுந்திருந்து,கட்டிலுக்கு அடில இருந்த அந்த பெட்டியை அலமுவுக்கு சத்தம் கேட்காம வெளியே இழுத்தேன்.அந்த புத்தம் புது கன்னி ஷூக்கள் கவர்ச்சியா சிரிச்சது.அதை எடுத்து செப்பல் ஸ்டாண்டு பக்கம் நலுங்காம வச்சேன்.மான் தோல் செருப்பு அதை பொறாமையா பாத்தது போல இருந்தது.

பொதுவா ஆறரை மணி என் மார்னிங் வாக் டைம். ஆறுமணிக்கே எழுந்திருந்து காபி பில்டர்ல 3 ஸ்பூன் நரசூஸ் பொடி போட்டு,கொதிக்க கொதிக்க வென்னீர் அபிஷேகம் பண்ணி டிகாஷனுக்கு ரெடி பண்ணிட்டு கிளம்பினேன்.

டிராக் பேண்ட்,வெள்ளை டிஷர்ட், இன்னிக்கு அந்த புது ஸ்கெச்சர் ஷூஸ் வெக்கப் பட்டுண்டே என் கால்ல நுழைஞ்சது. மேலே இருந்த மான்தோல் கட்டழகி கடுப்பாய் முறைத்தது.

பொதுவா தினம் 5000 ஸ்டெப்ஸ் கணக்கு, மணியக்காரத் தெருவுல ஆரம்பிச்சு, ராவுத்தர் சந்து வழியா பெருமாள் கோவில் வரை வந்தா உத்தேசமா 3000 ஸ்டெப்.திரும்பறப்ப கோவிலை சுத்திண்டு மார்கெட் வழியா வீடு வந்தா நடை பூர்த்தி.

இன்னிக்கு கோவிலுக்குள்ளே போய் பெருமாளை பாக்கணும்னு ஒரு ஆசை.புது ஷூவை வெளில விட்டு போகவும் பயம்.மனதை திடப்படுத்திண்டு ஒரு ஷூவை நுழைவாயிலுக்கு இடது பக்கமும், இன்னொண்ணை வலதுபக்கமுமா பிரிச்சு போட்டுட்டு ரெண்டையும் ஒருதடவை தலையை திருப்பி பாத்துட்டு உள்ளே போனேன். எப்படி ஐடியா ??

கோவில் இந்த வேளைல காலியாதான் இருக்கும். என்ன விசேஷம் இன்னிக்கு தெரியலையே,பெருமாள் உடம்பு பூரா தங்கக்காப்பு. அட கால்ல கூட அது தங்க ஸ்கெச்சரோ. ச்சீ தலை பூரா செருப்பு நினைப்பு.

தீர்த்தப்பிரசாதம் வாங்கிண்டு,பிரகாரம் சுத்தி அவசரமா வெளில வந்தேன். ஒரு ஷூ எடுத்துமுதல்ல மாட்டிண்டு இடது பக்கம் பாத்தா காணோம்.

வலது கால் ஷூவைக் காணலை.சுத்தி முத்திப் பாத்தா யாரும் தட்டுப்படலை. இருந்த ஷூவை கைல எடுத்துண்டு நடந்தேன் வேற வழி.

எனக்கு என்ன தோணித்தோ அங்க எப்பவுமே உக்காந்திருக்கிற ஒரு நொண்டி பிச்சைக்காரன் நினைவுக்கு வந்தான்.

தூரத்தில் கம்பு ஊணிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.

இதுநாள் வரை சாக்குத்துணியை தன் ஒத்தைக் கால்ல சுத்தி நடந்துண்டிருந்த அந்த நொண்டி பிச்சைக்காரனுக்கு புது ஷூ கொஞ்சம் லூசா இருந்தது.

இதைச் சொன்னா லச்சு சந்தோஷம் தான் படுவான். என் மகன் எங்களைப் போல இல்லை.