தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 13 “பிஃப்டி பிஃப்டி” - மோகன் ஜி

20240514194519879.jpg

நானும் என் தம்பி சங்கரும் அன்று ‘கலாட்டா கல்யாணம்' சினிமா காலைக் காட்சி பார்த்துவிட்டு வந்திருந்தோம்.

என் வயசு பத்து. சங்கருக்கு எட்டு. அப்போதெல்லாம் சினிமா ஒன்றைப் பார்த்துவிட்டு வந்தால் இரண்டுமூன்று நாட்கள் அதைப் பசங்களெல்லாம் அலசோ அலசு என்று அலசிக் காயப்போடுவதும், பாடல்களைப் பாடிப் பார்ப்பதும் வாடிக்கை. கூடுதலாக அப்படியே காட்சிகளை நடித்துக் காட்டுவதும் என் வழக்கம்.

அன்று மாலை எங்கள் வீட்டுத் திண்ணையில்

'உறவினில் பிஃப்டி பிஃப்டி' பாடல்காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தோம்.

நான் அந்தப் பாடலில் வரும் கவர்ச்சி நாயகியாக வளைந்து நெளிந்து கண் சிமிட்டல்களோடும், உதட்டுச் சுழிப்புகளோடும் ஆடிக் கொண்டிருந்தேன்.

சங்கரோ, ஏவிஎம் ராஜனாக கன்னங்களை உப்பவிட்டுக் கொண்டு ஆக்ட்டு கொடுத்துக் கொண்டிருந்தான். நாலைந்து ஆடியன்ஸ் வேறு.

எங்கோ போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய அக்கா இந்தக் கூத்தைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள்.

அக்கா வீட்டில் மூத்தபெண். அக்காவின் செல்வாக்கும் முக்கியத்துவமும் வீட்டில் அதிகம். மிகவும் கண்டிப்பானவளும் கூட.

எங்களுக்கு அதிக செல்லம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருப்பதாக அம்மாவிடமும் அப்பாவிடமும் சண்டை போடுவாள்.

நன்னடத்தை கன்ட்ரோலராயும், வீட்டில் எதையும் தீர்மானிப்பவாளகவும் அக்கா இருந்தாள். அமித்ஷா மாதிரி வச்சுக்குங்களேன்.

அக்கா வீட்டுக்குள் நுழைந்தவுடன், எங்கள் இருவரையும் உள்ளே அழைத்து விசாரணையைத் துவக்கினாள்.

"என்னடா மோஹி பாட்டு இது?" எடுத்தவுடன் குரல் டாப்கியரில் சரியாக விழுந்தது.

"இல்லக்கா... இன்னிக்கு கலாட்டா கல்யாணம் புதுசினிமா போனோம். அதுல தான் இந்தப் பாட்டு"

"அப்டியா? எப்போ சங்கர் இந்தப் படம் வந்தது?"

"இன்னிக்கு தான்க்கா ரிலீஸே! கார்த்தால ஏழு மணிக்கே போயிட்டோம் டிக்கெட் எடுக்க"

ஆஹா! இந்த ஆடு மஞ்சத்தண்ணி சொம்பை எடுத்து தனக்குத் தானே ஊத்திக்குதே!

என் பக்கம் திரும்பின அக்கா கேட்டாள், "எங்க மோஹி.. நீ ஆடிக்கிட்டிருந்த அந்தப் பாட்டைப் பாடு பார்ப்போம்?"

" எனக்கு சரியா தெரியாதுக்கா..." என்று கொஞ்சம் முத்துராமன் போன்று தளர்ந்த உடல்மொழியையும், விஜயகுமாரி முகபாவத்தையும் கலந்துகாட்டி பம்மினேன்.

தம்பி சங்கரோ சற்றும் தளராமல், சாமந்திமாலையையும் கழுத்தில் போட்டுக்கொண்ட ஆடாக பாட்டைப் பயின்றான்,

"உறவினில் பிஃப்டி பிஃப்டி.. உதட்டினில் பிஃப்டி பிஃப்டி"....

அக்காவின் கண்கள் விஜயகாந்த் கண்களாகச் சிவந்தன. சங்கருக்கே முதல் மண்டகப்படி நடந்தது.

சங்கருக்கு அடி கொஞ்சம் பலம்தான். அவனுக்கு நடக்கும் பூஜையைக் கண்ணுற்று கொஞ்சம் பரவசப்பட்டாலும், அடுத்து நமக்குமிருக்குமே என்ற கலவரம் வயிற்றுள் உதைத்தது. 'சரி! இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை?' என்று என் முறைக்கு விறைப்பாகத் தயாரானேன்.

என் பக்கம் பீரங்கி திரும்பியது.

''ஏண்டா? வீட்டுக்கு சொல்லாம சினிமாவுக்கு போறியா? நீ கெடறது இல்லாம சங்கரையும் கெடுக்கறயா?'' என் முதுகிலும் டிரம்ஸ் இசைக்கத் தொடங்கியது.

"அந்தப் பாட்டு சரியாத் தெரியாதா உனக்கு... வளைஞ்சு வளைஞ்சு ஆடுற?.. நாயே!".

என் ஜோதிலெட்சுமி இடுப்பின் பின்சரிவில் பாய்ந்தன கணைகள்.

என் தம்பி சங்கருக்கு நல்ல குரல் வளம். படிக்கும் போது PBசீனிவாசாகவும், பாடும்போது TMS ஆகவும், அடிவாங்கும் போது சீர்காழி கோவிந்தராஜனாகவும் மாறும் தன்மையது. அந்தக்குரலே தோட்டத்திலிருந்த அம்மாவை ஹாலுக்குக் கூட்டி வந்தது.

"ஏண்டி இப்படி அடிக்கறே? நான் தான் அவங்களை சினிமாவுக்குப் போயிட்டு வாங்கன்னு அனுப்பி வச்சேன். ஆம்பிளப்பசங்க அப்பிடித்தான் இருக்கும். விடுடி" என்று என்னை அக்காவின் கைகளிலிருந்து காப்பாற்றினாள். சில அடிகளோடு தப்பித்தேன்.

நானும் சங்கரும் திண்ணைக்கு மீண்டோம். லேசில் ஓயாத அழுகையுடன் சங்கர் சொன்னான், "எனக்குத் தான் செம மாத்து. அம்மா வந்ததால நீ தப்பிச்சிட்டே!" என்று விசும்பினான்.

"விடுறா!" என்றேன்.

"உனக்கு கிடைச்சது பதினாலு அடி! எனக்கு ஆறோ ஏழோ. நமக்கு கிடைச்ச அடி என்ன விகிதத்தில் சொல்லு?"

பின்னாட்களில் கணக்கில் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கிய சங்கர் சட்டென்று சொன்னான், "70:30"

அந்தப் பாட்டை நானும் கையோடு மாற்றிப் பாடினேன்.

"உறவினில் பிஃப்டி பிஃப்டி!

உதையினில் ஸெவண்ட்டி! தர்ட்டி"