தொடர்கள்
கதை
தன்வினை தன்னைச்சுடும் -ரேவதிநடராஜன்

20240606072759816.jpeg

“அம்மா.. பசிக்குதும்மா.. பன்னு வாங்கி கொடும்மா..” என தன் தாய் ரேணுகாவிடம் ரொம்பநேரமாக முனகி கொண்டிருந்த 5 வயது வேலன். அதற்கு மேல் தெம்பு இல்லாமல் கண்ணீருடன்வெறுந்தரையில் சுருண்டான். தன் புருஷனான மாரிமுத்துவிடம் 1 மணி நேரமாக க‌த்‌தி கூச்சலிட்டுசண்டைப் போட்டுக்கொண்டிருந்த ரேணுகா “ பாத்தியா நம்ம புள்ளைய..! தாய்மாமனானஉன்னைக் கட்டுன பாவத்துக்கு இப்படி காலு ஊனத்தோட பொறந்து என் புள்ள கஷ்டப்படுறான். குடிக்கார நாயே..! உன்னைய எவளும் கட்டிக்க வரலன்னு தம்பி பாசத்துல என்னையதாரைவாத்துக் கொடுத்துட்டா என் ஆத்தாக்காரி. ஏண்டா பாவி.! பாதி நாளு ஊட்ல கூட நீதங்குறதில்ல. நீ தான் வேலைவெட்டிக்கு போவாம பூமிக்கு பாரமா இருக்கியே! நான் நாலு வூடுபத்து தேச்சு உழைச்சு ஓடா தேஞ்சு 5,10 சேத்து வச்சா அதையும் திருடிட்டு போய் குடிச்சுநாசமாக்குறியே! நீ நல்லா இருப்பியா!” என்று அழுதவளை பீடி இழுத்தபடி அலட்சியமாகபார்த்தான் மாரிமுத்து. விரித்த கூந்தலை தட்டி கொண்டைப்போட்டப்படி எழுந்த ரேணுகா ” சரி.. எடுத்த காசுல கொஞ்சமாவாவது மிச்சம் வச்சிருப்பில! முக்கு கடையாண்ட போயி 2 பன்னு, கொஞ்சம் வெங்காயம் தக்காளி , 4 முட்டைவாங்கியா. புள்ள பசில கெறங்கி போய் கெடக்கான்பாரு” என்றாள்.

“அடிப்போடி வேலையத்தவளே! என் கிட்ட ஒரு பைசா கெடையாது. அப்படியே நான்வச்சிருந்தாலும் என்னாத்துக்கு இந்த நொண்டி பயலுக்கு செய்யனும்? வளந்தோன என்னைய வச்சுகாப்பத்தவா போறான். ? இந்த நொண்டிக்கால வச்சுக்கிட்டு இவனே இவனை காப்பாத்திக்கவக்கு இருக்காது. பொறந்தப்பையே சொன்னேன் எங்கனாவது கடாசிடுனு.. நீ கேக்கல.. எக்கேடுக்கெட்டோ போ.. என்னைய இதுல சம்பந்தப்படுத்தாத..!” என்று அலட்சியமாகசொன்னபடி வீட்டை விட்டு வெளியேறினான்.

“அடப்பாவி.. நீயெல்லாம் ஒரு அப்பனா?” என்று அதிர்ந்து நின்றாள் ரேணுகா.

மறுநாள் காலை வேலனை அவசரமாக கிளப்பி “ வேலா..! பள்ளிக்கூடத்துல காலை சாப்பாடுகொடுப்பாங்க. நல்லப்புள்ளையா சாப்பிட்டு டீச்சரு சொல்ற பாடத்தையெல்லாம் நல்லா கவனிச்சுபடிப்பா. படிப்புதான் நம்மள காப்பாத்தும். நல்லாப்படிச்சு பெரிய வேலைக்குப்போயி நேர்மையா 4 காசு சம்பாதிச்சு மானத்தோட நல்லா வாழனும்” என்ற ரேணுவை அழகிய புன்னகையுடன் பார்த்தகுழந்தை “ காசு சம்பாதிச்சு நா நிறைய பன்னு வாங்கி சாப்பிடுவேன். உனக்கும் நிறைய பன்னுதருவேன். அப்பாக்கு 1 பன்னு தான் கொடுப்பேன்!” என்றான். மகனின் அப்பாவித்தனமானமழலைப் பேச்சில் ரேணுகாவிற்கு கண்ணில் நீர் பெருகியது. கண்ணை துடைத்துக்கொண்டரேணுகா “ சரிடா தங்கம். பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு வா போகலாம் “ என்று வேலனைஇடுப்பில் தூக்கிக்கொண்டு 3 வீடு தள்ளி இருந்த ஆட்டோக்காரர் வீட்டு வாசலுக்கு வந்து “ குமாரு.. குமாரு தம்பி..” என்று அழைத்தப்படி குழந்தையை ஆட்டோவில் உட்கார வைத்தாள். குரலை கேட்டு வெளியே வந்த குமார் தன் இருக்குழந்தைகளுடன் ஆட்டோவின் உள்உட்கார்ந்திருந்த வேலனை பார்த்து

” என்னா வேலா.. ! கிளம்பலாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க வேலனும் உற்சாகமாகதலையை ஆட்டினான். இதற்கிடையில் ரேணுகாவும் “ குமாரு தம்பி.. வேலனை தெனமும் உன்பிள்ளைங்களோட சேர்த்து மாகராட்சி பள்ளிக்கூடத்துல விட்டுட்டு திரும்பவும் கூட்டி கொணந்துவிடுற.. இந்த உதவிக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல.

நீ நல்லா இருக்கனும்ப்பா “ என்றபடி கண்ணை துடைத்துக்கொண்டாள்.

“அட நீ வேற யக்கா! என் புள்ளைங்கள தெனமும் கூட்டினு போறேன். கூட வேலனையும் இட்டுன்னுபோறேன். நான் என்ன வேலனை தனியா தலையிலயா சொமந்துக்குனு போறேன்.?இதுக்கெல்லாம் சொம்மா ஃபீல் பண்ணிக்கினு இருக்காத யக்கா.. வர்ட்டா.. வேலா..! அம்மாக்குபை சொல்லு” என்றபடி ஆட்டோவை கிளப்பி சென்றான்.

தனக்கு வேலைக்கு செல்ல நேரமாவதை உணர்ந்த ரேணுகா வேலைக்கு செய்ய விரைந்தாள்.

அன்று மாலை தான் வேலை செய்த இடங்களில் சம்பளம் வாங்கியவள் பக்கத்து பாத்திமா வீட்டுக்குசென்று

“ பாத்திமா அக்கா.. இந்த 2000 ரூபா என் சம்பள பணம்க்கா. அந்த பாவி அதான் என் புருசன்நான் கஸ்டப்பட்டு சம்பாதிச்சு சேத்து வச்ச பணத்தை திருடிட்டு போய்ட்டான்க்கா.

வேலன் நல்லாப்படிச்சு நல்லப்படியா யார் கையையும் எதிர்பாக்காம

கௌரவமா வாழனும் னு பாடா படறேன். வேலனும் வளந்துக்கிட்டு வரான். இப்பவே அவனைதூக்கிக்கிட்டு என்னால முன்ன மாதிரி ரொம்ப தொலைவு நடக்க முடியறது இல்லக்கா. நான்வேலை செய்ற டாக்டரு வீட்ல அந்த டாக்டரம்மா ஒரு பேட்டரி சக்கர நாற்காலிவாங்கித்தாரேன்னு சொன்னாங்க. 30,000 ஆவுமாம். வேலனும் காலேசு போற வரை அதுலபோய்க்கலாமாம். நான் ஒரு 10,000 கொடுத்தா பாக்கி அவங்க போட்டு வாங்கித்தரேன்னுசொன்னாங்க. அதுக்கு தான் 4000 வரை சேத்து வச்சிருந்தேன். அந்த பாழாப்போனவன் அதுலகைய வச்சிட்டான். இப்ப வீட்டுல பணம் வைக்க பயமா இருக்கு. அதான் உன் கிட்ட கொடுத்துவைக்கிறேன்க்கா”

“அதுக்கு தான் உனக்கு ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிச்சு தரேன். அதுல போட்டு வைன்னாகேக்க மாட்டேங்கிற!” என்றார் பாத்திமா.

“ஐயோ பணம் போட, எடுக்க எல்லாம் எனக்கு புரிய மாட்டேங்கிதுக்கா. இப்போதைக்குபணமாவே என் கைல இருக்கட்டும். அப்பால பாத்துக்கலாம்.”

“சரி விடு. பணத்தை பத்திரமா வச்சிக்கிறேன். கவலை படாம போய்வா!” என்றார் பாத்திமா.

வீட்டுக்கு வந்த ரேணுகா “வேலா பசிக்கிதா.. ? இந்தா பன்னு சாப்பிடு. ராவைக்கு இட்லி சுட்டுதாரேன் ” என்றாள்.

“அம்மா.. நாளைலேருந்து எனக்கு அரையாண்டு பரிட்சை லீவும்மா!”

“லீவா.. அப்ப நீ வீட்டுல இருந்தா யார் உன்ன பாத்துக்கறது? நான் வேற காலைல 9 மணிக்குபோனா சாயங்காலம் 4 மணிக்கு தானடா வருவேன். இப்ப என்ன செய்றது?” என்றுகவலைப்பட்டவளை பார்த்து

“அம்மா.. அதான் அப்பா வீட்லதானே இருப்பாரு.”

“யாரு.. அந்தாளா? வீட்ல இல்லாம சைக்கிள்ல பொழுதன்னைக்கும் ஊர் மேய்வானே.. வீட்லஎன்னைக்கு தங்கியிருக்கான். ஒரு பன்னு வாங்கித்தர கூட யோக்கியம் இல்லாதவன். இவனைநம்பியா உன்ன உட சொல்ற?” என்றபடி யோசித்தவள் “ பாத்திமா அக்காக்கிட்ட பாத்துக்கசொல்லிட்டு போறேன்டா. மதியத்துக்கு சோறு கொண்டுவந்து தர சொல்றேன். சாப்பிட்டுட்டு நல்லபுள்ளையா உக்காந்து வெளையாடிட்டு இரு. சாயங்காலம் அம்மா வந்துருவேன். சரியா? என்றாள். வேலன் கவலையாய் தலையை ஆட்டினான். மறுநாள் ரேணுகா வேலைக்கு கிளம்பிட வேலன்தரையில் உட்கார்ந்து உடைந்த பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். இரவுமுழுதும் வீட்டுக்கு வராமல் காலையில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து, வேலன் தனியாக விளையாடிகொண்டிருப்பதை கண்டு “ என்னடா இன்னைக்கு ஸ்கூலு லீவா? உங்கொம்மாவ வேற காணோம்? உனக்கு சக்கரநாற்காலி வாங்க சீக்கிரமே வேலைக்கு கெளம்பி பூட்டாளா? அதுக்காக வச்சிருந்தபணத்தை தான் நான் எடுத்துட்டேன்னு என்னாண்ட லபோதிபோ னு கத்திக்கினு கெடந்தா பஜாரிமாதிரி. புருசன்னா ஒரு மருவாதி வேணாம்? இவள்ல்லாம் ஒரு பொம்பளையா?” என்று கோபமாகஇரைந்தவன், “ அது சரி.. சக்கரநாற்காலி வாங்கி அதுல சிவாஜி கணக்கா உன்ன உக்கார வச்சுஉங்கொம்மா சரோசாதேவி மாதிரி தள்ளிக்கினே மலை உச்சி வரை போவப்போறாளா? இதுலசக்கரநாற்காலியும் மலை உச்சியும் தான் இப்ப மிஸ்ஸிங்கு.” என்று வெடி சிரிப்பு சிரித்தான். மிரண்ட வேலனின் பக்கத்தில் அமர்ந்த மாரிமுத்து சிறிது நேரம் அவனையே உற்றுபார்த்துக்கொண்டிருந்தான். திடீரென மாரிமுத்து “ வேலா.. வா.. உன்ன அப்பா சைக்கிள்லஉக்கார வச்சு வெளியே வேடிக்கை காமிக்கிறேன்” என்றான்

“ ம்ஹூம்.. நான் வர மாட்டேன். அம்மா திட்டும். “ என்று மறுத்த வேலனை குண்டுக்கட்டாய் தூக்கிசைக்கிளின் பின்புறம் உட்கார வைத்த மாரிமுத்து சைக்கிளை நேராக பஸ்ஸ்டாண்டுக்கு ஓட்டிசென்றான்.

மாலையில் எப்போதும் போல் வீடு திரும்பிய ரேணுகா அழுக்கு சட்டை ட்ரவுசரோடுஉக்காந்திருந்த வேலனை பார்த்து குழம்பி நின்ற சமயம் பாத்திமா வந்து “ ரேணுகா வந்துட்டியா! நீ என்கிட்ட வேலனுக்கு மதிய சாப்பாடு கொடுக்க சொன்னே.. ஆனா காலைல உன் புருஷன் வந்துகுழந்தையை தூக்கிட்டு போய் சாயங்காலம் தான் கொண்டு வந்து விட்டான். நான் அப்புறம் எப்படிமதிய சாப்பாடு கொடுக்கறது?” என்றார்.

சிறிது அதிர்ச்சியான ரேணுகா “ அப்பா உன்னை எங்கடா கூட்டிட்டு போனாரு? ” என்று வேலனைகேட்க

“ அப்பா என்னை வெளில வேடிக்கை பாக்க கூப்பிட்டு போறாரு. மதியானம் பன்னு முட்டாய்எல்லாம் வாங்கித்தந்தாரு. அப்புறம் பார்க்குல வெளையாடிட்டு திரும்ப வீட்டுக்கு வந்தோம்” என்றுஅழுகையை அடக்கிக்கொண்டு திக்கி திணறி பதில் சொன்னான்.

“ இதென்ன அதிசயம்..?” என்றவள் “ அதெல்லாம் இனிமே நீ போவக்கூடாது. அந்தாள நம்பிபோனா யார் கிட்டயாவது உன்ன வித்தாலும் வித்துடுவான். “

“இல்லம்மா. நான் போவேன். அப்பா பத்திரமா பாத்துக்குறாரு” என்று கண்ணீரை துடைத்தபடிகூற அந்த அழுகையை வேற மாதிரி புரிந்துக்கொண்ட ரேணுகா

“ சரி சரி அழுவாத.. பத்திரமா விளையாடிட்டு வூடு திரும்பனும். சரியா!” என்று சமைக்க சென்றாள்.

மறுநாளும் ரேணுகா வேலைக்கு கிளம்பிட மாரிமுத்து உற்சாகமாய் விசிலடித்தபடி வீட்டிற்குள்நுழைந்தான்.

அவனை கண்டதுமே மருண்ட விழிகளோடு சுவரோரம் வேலன் ஒண்டிக்கொள்ள, மாரிமுத்து அவன்அருகில் வந்து

“ வா.. பஸ்ஸ்டாண்டுக்கு போவோம்” என்றான்.

வேலன் அழுதபடி “ முடியாது.. நான் வர மாட்டேன்” என்றான்.

“டேய் என்னடா ரொம்ப கிராக்கி பண்ணிக்கிற.. நீயும் ஒங்கொம்மா மாதிரியே செவப்பா அதேஅளகான மொகத்தோட இருக்கே.! பாக்குறவன் எல்லாம் இந்த அளகான கொயந்த பிச்சைஎடுக்குதேனு மனசு தாங்காம்ம 5, 10 னு கைல கொடுத்துட்டு போறான். நானேஎதிர்பாக்கலையே..! ஒரே நாள்ல 150 கிட்ட சம்பாதிச்சு கொடுத்திட்ட.. நல்ல பிசினசுடா. பேசாமதெனமும் பள்ளிக்கூடம் போவாம பஸ்ஸ்டாண்டுக்கு போவோம். உனக்கு தெனமும் பன்னுமட்டுமில்ல சாக்லெட்டு முட்டாயி கூட நான் வாங்கித்தாரேன்”

“அப்பா .. நான் படிச்சு பெரிய ஆளா வரனும்னு அம்மா சொல்லிச்சு. நான் பள்ளிக்கூடம் தான்போவேன்”

“என்னடா பெரிய பள்ளிக்கூடம்? உனக்கு நல்லது தான் சொல்லித்தரேன். எதுக்கு வீணாகஸ்டப்பட்டு படிச்சு வேலை செஞ்சு சம்பாதிக்கனும்? உக்காந்த இடத்துலேயேசம்பாதிக்கலாம்டா!”

“ம்ஹூம்.. முடியாது.. நான் பிச்சை எடுக்க மாட்டேன்”

“ஓங்கி அறைஞ்சேனா அவ்வளவுதான். நொண்டிப்பயலே.. ஒனக்கு படிப்பு வேற கேக்குதோ? மருவாதையா நான் என்ன சொல்றனோ அதுப்படி நடந்தா நீ பொழைச்ச! இல்லன்னா ஒங்கம்மாதூங்குறப்ப அவளை கழுத்த நெறிச்சு கொன்னுட்டு ஒன்னையும் தூக்கி கடல்ல போட்ருவேன். ஜாக்கிரத.. பிச்சை எடுக்கறதையோ, நான் மிரட்டுனதையோ அம்மாக்கிட்ட மூச்சு காமிக்ககூடாது” என்றபடி முரட்டுத்தனமாக வேலனை வாரி எடுத்து சைக்கிளில் அமர வைத்துபஸ்ஸ்டாண்டுக்கு ஓட்டி சென்றான் மாரிமுத்து.

இப்படியே ஒரு வாரம் கழிந்த நிலையில் அன்று வேலை சற்று முன்பாகவே முடிந்து விட , சீக்கிரமாகவே வீட்டுக்கு போய்க்கொண்டிருந்த ரேணுகாவை “ ஏய் ரேணுகா.. ரேணுகா .. “ எனயாரோ அழைக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தாள். பூக்கார ஆயா பொன்னம்மாதான் கடுகடுத்தமுகத்தோடு தன்னை கூப்பிடுவதை கண்ட ரேணுகா திரும்பி போய் “ என்ன ஆயா? இவ்வளவுசவுண்டா ஏன் என் பேரை ஏலம் உடுற? என்ன ஆச்சு? “ என வினவினாள்.

“ நீ எல்லாம் நல்லா இருப்பியாடி? உனக்கு போய் அந்த ஆண்டவன் புள்ளை வரம் கொடுத்தான்பாரு! என்ன அருமையான குழந்தை.. வச்சி காப்பாத்த வக்கில்லாம ரோட்டுல பிச்சை எடுக்கஉட்டுட்டியே! த்தூ..!” என்ற ஆக்ரோஷமான பேசியதை கேட்ட ரேணுகாவிற்கு தலை சுற்றியது. கண்களில் நீருடன் , குரல் நடுங்க நடுக்கத்துடன் மெதுவாக “ என்ன ஆயா சொல்ற? யார்குழந்தை?” என்றாள்.

“உன் குழந்தை தாண்டி.. வேலனு.. பஸ்ஸ்டாண்டுல பிச்சை எடுக்குறான்..போய்ப்பாரு. மண்ணுதரையில தவழ்ந்து தவழ்ந்து அழுதுக்கிட்டே அங்க வரவன்கிட்ட கையேந்திக்கிட்டு இருந்தான். எனக்கு பகீர்னு ஆகி ஓடிப்போய் குழந்தைய தூக்கப்போனா அங்க உன் புருசன் பீடி புடிச்சிக்கிட்டு“ஏய் கெய்வி உன் வேலையப்பாத்துக்கினு ஓடிப்

போ”ன்னு மிரட்டுனான். “ஏண்டா பாவி ?ரேணுகாவுக்கு தெரிஞ்சா என்ன ஆவும் தெரியுமா?”னுகேட்டா “எல்லாம் அவளுக்கும் தெரியும். பிச்சை காசுல அவளுக்கும் தான பங்கு போவுது “னுசொல்லி சிரிச்சான். நான் வந்துட்டேன். இதெல்லாம் கடவுளுக்கு அடுக்குமா டி?” என பூக்காரஆயா தொடர்ந்து ஏசிக்கொண்டே போனதை காதில் வாங்காமல் ரேணுகா பஸ்ஸ்டாண்டுக்குதலைத்தெறிக்க ஓடினாள்.

ஓடிய வேகத்தில் ரோட்டில் இரு முறை தடுக்கி விழுந்து முட்டியில் ரத்தக்காயம் வாங்கியதை கூடபொருட்படுத்தாமல் பஸ்ஸ்டாண்ட் வந்தவுடன் மூச்சிறைக்க நின்று வேலனை தேடினாள். அங்கேநின்று கொண்டிருந்த ஒரு பஸ்ஸின் கீழே மண்தரையில் உட்கார்ந்தபடியே தரையை தேய்த்து, நகர்ந்து நகர்ந்து ஒவ்வொருவரிடமும் கையை நீட்டிக்கொண்டிருந்த வேலனை பார்த்த ரேணுகாஉடனே ஓடிப்போய் அவனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு மாரிமுத்து எங்கே என்றுசுற்றிமுற்றி பார்த்தாள். அங்கே உள்ள கடைவாசலில் முதுகை காண்பித்துக் கொண்டு டீகுடித்துக்கொண்டிருந்தவனை கண்டாள். பின் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் விறுவிறுவெனவேலனை இடுப்பில் சுமந்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

“ அம்மா.. அப்பா தான்மா இப்படி செய்ய சொன்னாரு. நான் வேணாம்னு தான் சொன்னேன். உன்கிட்ட சொன்னா உன்னையும், என்னையும் கொன்னு கடல்ல தூக்கிப்போட்ருவேன்னு சொன்னாரு. “ என வேலன் தேம்பி தேம்பி அழுதபடி சொல்ல அதை அமைதியாக கேட்டுக்கொண்டே ஒருவார்த்தை கூட பதில் பேசாமல் வேலனை வென்னீர் போட்டுக் குளிப்பாட்டி சுத்தமாக துடைத்து, துவைத்த சட்டை, ட்ரவுசரை மாட்டிவிட்டு குடிக்க தண்ணீர் கொடுத்து அவனை உட்கார வைத்துவிட்டு, விடுவிடுவென வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்றாள். குடிசை போட்டப்பின் மிச்சம்இருந்த மூங்கில் கம்புகள் அங்கே கிடந்தன. அதில் சற்று பருமனான ஒன்றை கையில்எடுத்துக்கொண்டு வீட்டில் நுழைந்தவள் அதை கையில் இறுக பிடித்தபடி தரையில் அமர்ந்தாள்.

இதற்கிடையில் பஸ்ஸ்டாண்டில் வேலனை காணாமல் பயந்து அங்கே இங்கே என தேடிகடைசியாக வீட்டிற்கு வந்தான் மாரிமுத்து. அவன் இங்கே திருதிரு என்று முழித்தபடிஉட்கார்ந்திருப்பதை கண்டவுடன் நிம்மதிக்கு பதில் கோபம் தலைக்கேறி “ ஏண்டி! அப்பன்காரன்அங்க பஸ்ஸ்டாண்டுல புள்ளைய காணுமேனு தவியா தவிச்சு தேடிக்கினு வந்தா இங்க ஆத்தாளும்மவனும் ஊமை மாதிரி அமேதியா உக்காந்தாக்கீறிங்க? பாதி பிச்சையில கூட்டினு வந்தா என்னஅர்த்தம்டி? 200 ரூவா இந்நேரம் சம்பாதிச்சிருப்பான். உன்னால எல்லாம் கெட்டுப்போச்சு.. இப்பஎனக்கு பணம் வோணுமே! மரியாதையா அந்த 200 ரூவாய நீ குடு. இல்லைன்னா ரெண்டுபேரையும் உயிரொட கொன்னு பொதைச்சிருவேன்” என்றவனை பார்த்து ரேணுகா அடிக்குரலில் “ எவ்வளவு வேணும்?” என்றாள்.

“ சொன்னேனே.. காதுல விழல.. 200 ரூவா. எடுடி மரியாதையா” என்று சொன்ன அடுத்த நொடியேபொளேரென மாரிமுத்து காலில் அடி விழுந்தது. இரு கைகளிலும் மூங்கில் கொம்பை இறுகப்பற்றிக்கொண்டு “ பணமா வேணும் ! இந்தா வாங்கிக்கடா.. “ என்று படார் படார் என அவனது கால்முட்டியிலிருந்து பாதம் வரை அடியோ அடி என அடித்து நொறுக்கினாள். சத்தம் கேட்டு ஓடி வந்தபாத்திமா அக்காவும் குமாரும் தடுக்க பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடித்து ஓய்ந்ததும்வேலனை தூக்கிக்கொண்டு பாத்திமா அக்கா வீட்டு வாசலில் சென்று அமர்ந்தாள்.

முட்டியும் முட்டிக்கு கீழேயும் ரத்த சகதியாக கிடந்த மாரிமுத்துவை பாத்திமா அக்கா உதவியுடன்தனது ஆட்டோவில் ஏற்றிக்

கொண்டு பெரியாஸ்பத்திரியில் சேர்த்து, பின் மாரிமுத்துவின் அக்காவும் ரேணுகாவின் தாயுமானலட்சுமியிடம் ஃபோனில் நடந்ததை கூறி ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தான் குமார். சிறிது நேரத்தில்ரேணுகாவும் ஆஸ்பத்திரி வந்தாள். ரேணுகா எந்த டாக்டர் வீட்டில் வேலைப்பார்க்கிறாளோ அதேடாக்டரம்மா அங்கே வேலைப்பார்ப்பதால் அவர் அவளிடம் நேராக வந்து “ கால் முட்டியிலிருந்துபாதம் வரை சில்லுசில்லா உடைஞ்சு போச்சு. இனிமே பழையமாதிரி நடக்க முடியுமானு கூடஉறுதியா சொல்ல முடியாது. ஏதோ வண்டிக்காரன் கால்ல ஏத்திட்டதா இந்த குமார் சொல்றாரு. ஆனா காலை பாத்தா அடி வாங்கி உடைஞ்சமாதிரி இருக்கு. என்ன ஆச்சுனு நீ தான்சொல்லனும்!” என்றார்.

“ குடிக்காரன்.. குடிச்சிட்டு எவன் கிட்டயாவது சண்டை வலிச்சிருப்பான் டாக்டர். அதான் நல்லாடின்னு கட்டிருப்பாங்க” என்று தரையை குனிந்து பார்த்தபடி ரேணுகா மெதுவாக பதிலளித்தாள்.

“சரி.. வண்டி ஏத்துனதாவே நான் காரணம் எழுதிக்கிறேன்” என்றபடி டாக்டர் அகன்றார்.

அரை நாள் மயக்கத்தில் கிடந்த மாரிமுத்து கண்ணை விழித்து பார்த்தபோது எதிரில் தன் அக்காலட்சுமியும், ரேணுகாவையும் பார்த்ததும் ஆத்திரத்துடன் “ உன்னை சும்மா விட மாட்டேன்டி . என்காலை ஒடைச்ச உன்ன போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி உன்னை ஜெயிலுக்கு அனுப்புல..! என்பேரு மாரிமுத்து இல்ல “ என கத்தினான்.

அதைக்கேட்டதும் ஆவேசமடைந்த ரேணுகாவின் தாய் லட்சுமி

“அட கேடுக்கெட்ட நாயே..! என் பொண்ண நீ நல்லா பாத்துப்பேனுதானே நான் உனக்கு கட்டிவச்சேன். விருப்பம் இல்லாத கட்டி வச்சதால அன்னையிலிருந்து என் கூட பேசுறதையேநிறுத்திப்புட்டா எம்மவ. நீ குடிச்சு கும்மாளம் போட்டு என் மவளை அடிச்சு கொடுமை படுத்துறதுஎல்லாம் தெரிஞ்சும், தம்பியாச்சேனு மனசுல வச்சி வேதனை பட்டது எனக்கு தாண்டா தெரியும் . என்னைக்காவது ஒரு நாளு நீ திருந்துவ ன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு என் பேரனையேபிச்சை எடுக்க வச்சிட்ட. இனிமே உன்னை நம்ப முடியாது. என் மவ வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிபோய்டு. கூடப்பொறந்த பாவத்துக்கு இந்த ஆஸ்பத்திரியிலிருந்து நீ குணமாவுற வரை உன் கூடஇருக்கேன். போலீஸு கம்ப்ளைண்டு அது இதுன்னு எம்மவ மேல நீ ஏதாவது பிரச்சனை பண்ணே, தூங்குறப்ப தலையணைய உன் மூஞ்சில வச்சு உன்னை நானே கொன்னு போலீஸ்ல “ அடிச்சதும்நான்தான்! இப்ப கொன்னதும் நான்தான்” னு சொல்லி சரண்டரு ஆகிடுவேன். ஜாக்கிரதை!“ என்றாள் லட்சுமி.

“ அடிப்பாவிங்களா! வலி தாங்க முடியலையே..! என் ரெண்டு காலும் போச்சே? என்ன இனி யார்கவனிப்பா? எப்படி நான் பொழைப்பேன்?” என்று அழுதபடி கேட்ட மாரிமுத்துவிடம் ரேணுகா

“அதான் கைவசம் ஒரு தொழில் தெரிஞ்சு வச்சிருக்கியே.. பிச்சை தொழிலு.. பெத்த புள்ளனு கூடபாக்காம நொண்டி நொண்டி னு திட்டிக்கிட்டு பெறகு அத வச்சியே காசு சம்பாதிக்கலாம்னுகுழந்தைய பிச்சை எடுக்க வச்சீல்ல! அதே பஸ்ஸ்டாண்டுக்கு போய் தெனமும் நீ போயி பிச்சைஎடுத்து தின்னு பொழைச்சுக்க..” என்று சொல்லி வெளியேறியவளை பார்த்து ஸ்தம்பித்தான் மாரிமுத்து.