வழக்கமாக மே மாதத்தில் கேரளாவில் துவங்கும் தென் மேற்கு பருவ மழை சற்று ஸ்லோ மோஷனில் தமிழகத்தை நோக்கி வீசும் .
அதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முழுவதும் மழை பெய்ய துவங்கும் இது இப்பகுதி மக்களுக்கு பழகி போன ஒன்று .
அதே போல கோடையில் காய்ந்து போயிருந்த முதுமலை பண்டிபூர் சரணாலயம் மீண்டும் பசுமையை அரவணைத்து கொள்ளும் போது வெயிலின் தாக்கம் மற்றும் வறட்சி காரணமாக இடம்பெயர்ந்த யானை , புலி போன்ற வனவிலங்குகள் மீண்டும் அடர்ந்த வனத்திற்கு திரும்பி வந்து சேருவது இந்த தென் மேற்கு பருவமழையால் தான் .
கடந்த வருடம் பருவ மழை போக்கு காட்டிவிட்டு சென்றுவிட்டது .
இந்த வருடம் மே மாதத்தில் இருந்தே சற்று மழை வந்து போய்க்கொண்டிருந்தது
கடந்த வாரம் பருவ மழையின் தாக்கம் கேரளாவில் ஆக்ரோஷமாக கொட்ட ஆரம்பிக்க பயங்கர மழை கூடலூர் பகுதியில் கொட்டி தீர்க்க சேரங்கோடு , ஸ்ரீமதுரை , பாடந்துறை , தேவர் சோலை , நிலக்கோட்டை பகுதி முழுவதும் மழை வெளுத்து வாங்கியது .
இரண்டாவது சிரபுஞ்சியான தேவலாவில் கடும் மழை பெய்ய பந்தலூர் பகுதி முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கூடலூர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறி மிதந்து கொண்டிருக்கிறது .
மாவட்ட நிர்வாகம் கலெக்டர் அருணா தலைமையில் கூடலூர் நகராட்சி தீயணைப்பு துறை என்று அனைத்து அதிகாரிகளும் பருவ மழையின் வேகத்திற்கு ஏற்ப மீட்பு நிவாரண பணிகளை சரியான நேரத்தில் மேற்கொண்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டாலும் ஆக்ரோஷ மழை தன் கோரத்தாண்டவத்தை காட்டிவிட்டு தான் சற்று ஓய்ந்துள்ளது .
நாம் ஸ்ரீ மதுரை பஞ்சாயத்து தலைவர் சுனிலை தொடர்பு கொண்டு பேசினோம் ,
" இதற்கு முன் அதிகமான மழை கொட்டியுள்ளது .அதை விட இப்பொழுது மிக அதிகம் . தேவாலா , நெலாக்கோட்டை , தேவர்சோலை பகுதியில் 130 மிமி மழை கொட்டித்தீர்த்தது இதனால் பெருக்கெடுத்த மழை வெள்ளம் பெருக்கெடுத்து கூடலூர் முழுவதும் மிதந்தது .
தொரப்பள்ளி ஆறு முழுவதும் வெள்ளம் மிதந்து பாடந்துறை மிதந்து மாயார் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பவானி ஆறு ஆர்ப்பரித்து சென்றது .
பாடந்துறை பகுதி முழுவதும் வெள்ள பெருக்கு இரண்டாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தவித்து கொண்டிருக்கிறார்கள் பல வீடுகளினுள் வெள்ளம் புகுந்துவிட்டன .
கடந்த சில வருடங்களாக ஆடி மாதத்தில் மழை இல்லை இது எதிர்பாராத மழை இப்பொழுது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது தண்ணீர் சேகரிக்க வழியில்லை .
ஆறுகளில் செக் டேம் இல்லை அதனால் குடி தண்ணீர் பிரச்சனையும் ஏற்படுகிறது .
எங்க ஊரில் 74 கிணறுகள் உள்ளன வெயில் காலத்தில் அதில் தண்ணீர் குறைந்து விடுவது சகஜம் .
ஆறுகள் தூர் வாருவதில்லை செடிகள் கொடிகள் , மூங்கில் பூத்து ஆறுகளில் நிறைந்து தண்ணீர் போக வழியில்லை .அதனால் தான் வெள்ள பெருக்கு .
அரசு எல்லா திட்டங்களையும் கொடுக்கிறது அதை அதிகாரிகள் நிறைவேற்ற தாமதிப்பதால் தான் இப்படி பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .என்று கூறினார் .
மக்களை காப்பாற்றும் சொசைட்டி நிறுவனர் டாக்டர் .எலிஜோ எல்டோ தாமஸ் நம்மிடம் பேசினார் ,
" மீண்டும் ஒரு தென் மேற்கு பருவமழையை சந்திக்கிறார்கள் கூடலூர் பந்தலூர் தாலுகா வாசிகள் கடுமையான மழை வெள்ளத்தால் ஏகப்பட்ட இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது . அதே சமயம் இது எதிர்பார்த்த இயற்கை பேரிடர் என்ன செய்ய . சரியான முன்னேற்பாடுகள் இல்லாததால் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடிவதில்லை .
கூடலூர் பந்தலூர் பாடந்துறை , ஸ்ரீ மதுரை பகுதியில் வெள்ளப்பெருக்கு மிக மோசமாகிவிட்டதற்கு காரணமே ஆறுகள் கால்வாய்கள் தூர் வாரவில்லை என்பது தான் உண்மை .
பருவமழை துவக்கத்திற்கு முன்பே தூர் வாரும் வேலையை செய்தாலே கடும் வெள்ளபெருகில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் .
இந்த வருடம் மழையின் தாக்கத்தாலும் வெள்ள பெருக்கு ஆறுகளின் அடைப்பால் குடியிருப்பு பகுதிகள் மிகவும் பாதித்து விட்டது தான் பரிதாபமான ஒன்று .
வெள்ளத்தின் தாக்கம் கூடலூர் நகராட்சி பகுதிகளை பாதிக்கவில்லை காரணம் நகராட்சி நிர்வாகம் கடந்த வருடம் முதல் பாலங்கள் விரிவு படுத்தி கட்டியது அதில் தூர் வாரி ஒழுங்கு படுத்தியதால் தான் தப்பித்தது கூடலூர் பசார் பகுதி .
வெள்ளம் வந்தவுடன் வருவாய் துறை , நகராட்சி ,தீயணைப்பு துறை , காவல் துறை, டவுன் பஞ்சாயத் , ரோட்டரி சமூக சங்கங்கள் இணைந்து ஆற்றோரம் வசித்த குடியிருப்பு வாசிகளை பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்து உணவு கொடுத்தது அருமையான பணி .
சாலைகள் நிலச்சரிவுகள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு " என்கிறார் .
கூடலூர் புகைப்பட கலைஞர் ரமேஷ் கூறும் போது ,
" நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது 92-93 ஆம் வருடம் இப்படிப்பட்ட விடாத மழை கொட்டி தீர்த்தத்தை பார்த்திருக்கிறேன் அதற்கு பின் இப்பொழுது தான் பார்க்கிறேன் .
நான் மழையை ரசித்து படம் எடுப்பேன் வயலில் மழை நிறைந்து ஆறு ஓடுவதை அழகாக இருக்கும் .
தற்போது பார்க்கும் மழை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி காட்டாற்று வெள்ளம் வீடுகள் உடமைகளை நாசம் செய்வதை கண் முன் பார்ப்பது வருத்தமான விஷயம் .
வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவது கொச்சியில் தான் பார்த்திருக்கிறேன் எங்க ஊர் ஸ்ரீ மதுரை மிகவும் பாதிக்கப்பட்டது .நுறு நாள் வேலை நாள் திட்டத்தில் ஆற்றை அகலப்படுத்தினார்களே தவிர ஆழம் படுத்தவில்லை .அதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுவிட்டது .
தேவர்சோலை நிலக்கோட்டை பகுதியின் ஏற்பட்ட வெள்ளம் கூடலூர் பகுதிக்கு வந்து மாயார் ஆற்றில் கலக்கிறது .
கடந்த வருடம் மழையே இல்லாமல் இருந்தது இந்த வருடம் மிக பயங்கர மழை கொட்டி தீர்த்துள்ளது .
என்று கூறினார் .
கூடலூர் பகுதியை சுற்றி காட்டு விலங்குகள் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி தவித்துள்ளன .யானைகள் காட்டாற்று வெள்ளத்தில் தட்டு தடுமாறி ஆற்றில் நீந்தி தப்பித்துள்ளன .
கொடூர மழை வெள்ளத்தில் இருந்து கூடலூர் வாசிகள் இன்னும் மீளவில்லை .
அதே சமயம் பருவமழை மேலும் மிரட்டி கொண்டிருக்கிறது .
Leave a comment
Upload