தொடர்கள்
அரசியல்
விலகுகிறாரா பைடன்???-தில்லைக்கரசி சம்பத்

20240619145350517.jpg

அமெரிக்காவில் 2024 நவம்பரில் வர போகும் அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் தற்போது ஆடுக்களம் சூடு பிடித்துள்ளது. ஆனால் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வயது மூப்பின் காரணமாக மறதி, தடுமாற்றம் அடைவது மட்டுமில்லாமல் மேடைகளில் பேசும் போது அடிக்கடி உளறுவதால் சொந்த கட்சிக்காரர்களே கதிகலங்கி நிற்கிறார்கள். சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக துணை அதிபர் ட்ரம்ப் என அழைத்திருக்கிறார். உடனேயே “ட்ரம்ப் அதிபர் பதவிக்கு லாயக்கானவர் இல்லை என்பதற்காக அவரை துணை அதிபர் என்று அழைத்தேன்” என்று சமாளிக்க கமலா ஹாரிஸ் வெடிசிரிப்பு சிரித்து அவர் பங்குக்கு அவரும் சமாளித்தார். வாஷிங்டன்னில் நடந்த நேட்டோ கூட்டத்தில் பேசும் போது ஜோ பைடன் , உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை “அதிபர் புடின்” என்று அன்புடன் விளித்ததில் விளாடிமர் திடுக்கிட்டு பைடனை பார்த்த சம்பவம் வைரலானது.

ஏற்கனவே அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதப்போட்டியில் ட்ரம்ப்புடன் நடந்த விவாதத்தில் ட்ரம்ப் கேட்ட காரசார கேள்விகளுக்கு தெளிவான பதில்களை பைடன் அளிக்காதது மட்டுமில்லாது, பதிலுக்கு எந்த பலமான கேள்விகளையும் திருப்பிக்கேட்காமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைப்போல் நின்று பைடன் தோற்றது பெரும் விவாதத்துக்கு ஆளானது.

காற்றில் மிதப்பது போல் வந்து தட்டுத்தடுமாறி நடப்பது, திக்கு தெரியாமல் முட்டிக்கொண்டு நிற்பது போன்ற செயல்கள் 81 வயதாகும் பைடனுக்கு வயதாவதால் வரும் பிரச்சனைகள் என்று சொன்னாலும் அரசியல் விவகாரங்களை கையாளும் போது கூட புரியாமல் உளறுகிறாரே !எப்படி அமெரிக்கா இவர் கைகளில் பாதுகாப்பாக இருக்கும் என பலர் கவலைப்படுகிறார்கள். முன்னாள் அதிபர் ஒபாமா முதற்கொண்டு கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், பைடன் நிற்பது ட்ரம்ப்புக்கு சாதகமாகி விடும், பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டும் , என கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே ட்ரம்ப் காதில் துப்பாக்கி சூட்டை வாங்கிய ஜோரில், நிச்சயம் வெற்றிப்பெறுவோம் என “அமெரிக்கா பிறந்தது எனக்காக!” என்று உற்சாகமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்.

“யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்குங்க.. நான் தான் அதிபர் . தேர்தலிலிருந்து விலக மாட்டேன் “ என்று கங்கணம் கட்டிக்கொண்டு பைடன் ஒரு புறம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென அவரை கொரோனா தாக்கியதில் தற்போது அத்தனை சுற்றுப்பயணத்தையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு தலைவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

போட்டியிலிருந்து விலக முடியாது என கறாராக பைடன் சொன்ன நிலையில், போட்டியிலிருந்து அவரே தானாக விலகாத பட்சத்தில் பைடனை நீக்குவது என்பது கடினம். அப்படியே பைடன் விலகினால் அவருக்கு பதிலாக அதிபர் பதவிக்கு துணை அதிபராக உள்ள கமலாஹாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா கவர்னர் கெவின் நியூசம், மிச்சிகன் கவர்னர் க்ரெட்ச்சன் விட்மர் போன்ற பெயர்கள் அடிப்படுகின்றன.

பைடனே நீடிக்கும் பட்சத்தில் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து பிரசாரம் செய்து பைடனால் வெற்றிபெற முடியாது என்று சொந்தக் கட்சியினரே வெளிப்படையாகத் தெரிவித்துவருகிறார்கள்.

இந்திலையில் பைடன் தேர்தலிலிருந்து விலகுகிறார் என்றும், அதிபர் போட்டிக்கு கமலாஹாரிஸை, பைடன் முன்மொழியப்போவதில்லை எனவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை பைடனோ அல்லது அவர் சார்ந்திருக்கும் ஜனநாயக கட்சியோ இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் பைடன் எடுக்கப்போகும் முடிவு அவர் சார்ந்திருக்கும் ஜனநாயக கட்சிக்கு பலமா? பலவீனமா?என்பது கூடிய விரைவில் காணலாம்.