தொடர்கள்
அனுபவம்
நடைப்பயிற்சி நல்லது -ஜா

2024925115742638.jpg

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் மூட்டு வலிக்கு தீர்வு என்று இந்த ஆயில் தடவுங்கள் இந்த மிதியடியை பயன்படுத்துங்கள் எங்களிடம் வாருங்கள் , ஒரே வாரத்தில் குணம் அடையலாம் என்று நிறைய விளம்பரங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. இதேபோல் மூட்டு வலி சரியாகும் என்று ஹோமியோபதி ஆயுர்வேத மாத்திரை களிம்புகளும் விற்கத் தொடங்கி விட்டார்கள்.

இது பற்றி சில மருத்துவரிடம் கேட்டபோது மூட்டு வலிக்கு காரணம் நீங்கள் நடக்காமல் இருப்பது தான். ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து கிலோ மீட்டர் அளவு நடக்க வேண்டும் அப்படி நடந்தால் மூட்டு வலிக்கு வாய்ப்பில்லை. ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை, ஆனால் மூட்டு வலியை பயன்படுத்தி சில வியாபாரம் மருத்துவர்கள் இதற்கு அறுவை சிகிச்சை நல்லது என்று சொல்லி பணம் பார்க்கிறார்கள். ஆனால் இதெல்லாம் நிரந்தர தீர்வு இல்லை என்று மருத்துவ ரகசியத்தையும் போட்டு உடைத்தார் அந்த மருத்துவர்.

ஆனால், நடப்பது என்பது இப்போது குறைந்துவிட்டது என்பது உண்மைதான். அரசாங்கம் பெண்களுக்கு இலவசமாக பஸ் பயணம் அறிவித்ததால் நடக்கக் கூடிய தூரத்திற்கு கூட அவர்கள் பேருந்தை பயன்படுத்துகிறார்கள். வசதி குறைந்தவர்கள் பங்கு ஆட்டோவில் பயணம் செய்கிறார்கள் வசதியானவர்கள் அவர்கள் வசதிக்கேற்ற வாகனங்களில் பயணம் செய்கிறார்கள்.

அதே சமயம் டாக்டர்கள் அறிவுரையோ அல்லது வேறு யார் அறிவுரையோ கொஞ்சம் பேர் நடை பயிற்சி செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். நான் அதிகாலை ரயில் நிலையத்துக்கு செல்லும்போது நிலைய நடை மேடையில் ரயில் வரும் வரை சிலர் நடைப்பயிற்சி செய்வார்கள். அப்படி நடை பயிற்சி செல்லும்போது ஏதோ ஒரு பெருமாள் ஸ்லோகங்களை உச்சரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலர் ரயில்வே நடைமேடை நடைப்பயிற்சிக்கு நல்லது என்று ரயில் நிலையத்துக்கு அருகில் குடியிருப்பவர்கள் நடைமேடையில் நடை பயிற்சி செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

சில அரசியல் தலைவர்களை நான் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்கும் போது காலையில் நான் வாக்கிங் போயிட்டு 9 மணிக்கு தான் வருவேன். அதன் பிறகு வாருங்கள் என்பார்கள். சிலர் வாக்கிங் போகும்போது பேசிக் கொண்டே போகலாம் என்று அந்த நேரத்தையும் ஒதுக்கி இருக்கிறார்கள் அந்த அனுபவமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்ய வேண்டும் நீங்கள் அஷ்டவதானி கிடையாது .பேசிக்கொண்டே நடப்பது பாட்டு கேட்டுக் கொண்டு நடப்பது இவையெல்லாம் நடைப்பயிற்சி கணக்கில் வராது என்கிறார்கள். கையை வீசிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்துடன் நடக்க வேண்டும் நடைபயிற்சி என்பது குறைந்தது முக்கால் மணி நேரம் இருக்க வேண்டும். ஆனால் நடை பயிற்சியை விட்டு விடக்கூடாது. அதேபோல் முடிந்தவரை மாடிகளுக்கு படிக்கட்டில் ஏறி செல்வது நல்லது அது உங்கள் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சி. நடக்க முடியவில்லை என்று நீங்களே சொல்லிக் கொண்டு லிப்டை பயன்படுத்துவது சரியில்லை. அதே சமயம் உண்மையில் முடியவில்லை என்றால் லிப்டை பயன்படுத்துங்கள். நடப்பதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் முடியும் முடியும் என்று நடந்தால் எல்லாமே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி நடைப்பயிற்சி பற்றி ஆலோசனை சொல்லும் மருத்துவர்களிடம் நீங்கள் தினந்தோறும் நடைப்பயிற்சி செய்கிறீர்களா என்று நான் கேட்டபோது அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

நானும் பணி ஓய்வு பெற்ற பிறகு தினந்தோறும் காலை நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று இரண்டு நாட்கள் நடந்தேன். அதன் பிறகு என் வேலை காரணமாக அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. அப்போதுதான் நான் ஒரு முடிவு செய்தேன் வேலை காரணமாக நாம் செல்லும் இடங்களுக்கு முடிந்த மட்டும் நாம் நடந்து செல்வோம். மனைவி கடைக்கு போக சொல்லும்போதெல்லாம் நடந்து போவோம் என்று முடிவு செய்து நடக்க ஆரம்பித்தேன். நடை நல்லது.