தொடர்கள்
அரசியல்
உரசல் தானாம், விரிசல் இல்லையாம் !!- விகடகவியார்

2024925113939308.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "நீங்கள் முரசொலி பார்க்கிறீர்களா "என்று கேட்டார். நாம் "இல்லை "என்று சொன்னதும் "இப்போதெல்லாம் முரசொலி 30 பக்கம் 40பக்கம் என்று தினந்தோறும் சிறப்பிதழ் போல் வரத் தொடங்கி இருக்கிறது" என்றவர் தொடர்ந்து "மாவட்டம் தோறும் துணை முதல்வர் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரை வரவேற்று முரசொலியில் விளம்பரங்கள் என்று கிட்டத்தட்ட 20 பக்கங்கள் வரத் தொடங்கி இருக்கிறது. முரசொலிக்கும் வருமானம் விளம்பரம் தந்து துணை முதல்வர் மனதில் இடம் பிடிக்க மாவட்டங்களில் ஒரு போட்டியே நடக்கிறது "என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

"சரி, மாவட்ட செயலாளர் இளைஞர் அணி உறவு எப்படி "என்று நாம் கேட்டோம்.

அதற்கு விகடகவியார் "அப்படி சொல்லிக் கொள்ளும் படி போகும் இடமெல்லாம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மதிப்பதில்லை மாவட்ட அமைச்சர்கள் எங்கள்சிபாரிசை கண்டு கொள்வதில்லை என்று ஒரே புகார் புராணம்" என்றார். 'சரி, அதற்கு துணை முதல்வர் ரியாக்க்ஷன் என்ன ? என்று நாம் கேட்டோம். அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் அவ்வளவு தான் ஆனால், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்கள் கட்சிக்கு செலவு பண்ணுவது நாங்கள் தான் கட்சிக் கூட்டங்களுக்கு செலவு பண்ணுவது நாங்கள் தான் இளைஞர் அணி பணத்தையே கண்ணில் காண்பிக்க மாட்டேன் என்கிறது என்று புலம்புகிறார்கள். அதே சமயம் இளைஞர் அணியில் தங்கள் வாரிசுகளை செல்வாக்குள்ள பதவிகளில் நியமனம் செய்ய துணை முதல்வரிடம் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்கள். இப்படியும் நடக்குது அப்படியும் நடக்குது "என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

'சரி, திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுடன் உறவு எப்படி இருக்கிறது' என்று நாம் கேட்டோம்.

அதுதான் முதல்வர் கூட்டணியில் விரிசல் இல்லை உரசல் தான் என்று எடப்பாடிக்கு பதில் சொல்லி இருக்கிறார். ஆனால் அப்படி தெரியவில்லை. மேம்பாலங்களில் எல்லாம் வருங்கால முதல்வர் தொல்.திருமாவளவன் என்று விடுதலை சிறுத்தை கட்சிகள் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை எடுத்து விடுவேன் என்று பேசியதற்கு அவர் அப்படிப் பேசவில்லை அதற்கு பதில் வேறு வாழ்த்து வைப்பேன் என்று சீமானுக்கு வக்காலத்து வாங்கியது இதையெல்லாம் திமுக தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது "என்றார் விகடகவியார்.

2024925112617318.jpg

'சரி ,விஜய் கட்சியின் மாநாடு ஏற்பாடுகள் எப்படி ? என்று நாம் கேட்டோம்.

உளவுத்துறையின் ஒரு குழு அந்தப் பகுதியிலேயே முகாமிட்டு அங்கு நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் விஜய் படம் போட்ட ராட்சச பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. மாநாட்டு திடலில் காமராஜர்,பெரியார், அம்பேத்கார் கட்அவுட் வைக்கப்பட்டிருக்கின்றது. எல்லா கட்சியும் செய்வது போல் ஜார்ஜ் கோட்டை முகப்பு மாநாடு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இது போதாது என்று விக்கிரவாண்டி அருகே உள்ள ஏரிக்கரை அய்யனார் கோயிலில் மாநாடு வெற்றிகரமாக நடக்க கணபதி ஹோமம் நடத்தி இருக்கிறார்கள். எடப்பாடி மாநாடு வெற்றி பெற வாழ்த்து சொல்லி இருக்கிறார். மாநாடு செய்தி இது போதும் என்று நினைக்கிறேன் "என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.