தொடர்கள்
தொடர்கள்
திரும்பிப் பார்க்கிறேன்! - பி.பி. ஸ்ரீனிவாஸ் - 2

- க. பரத்

20180313155016153.jpg

‘கண்டேனே காதல் கண்ணாலே’ இந்த பாட்டை நான் எந்த நடிகருக்கு பாடினேன் என்று புதிர் போட்ட பி.பி.எஸ். அந்த புதிரை அவரே அவிழ்க்கிறார்.


அந்தப் பாடலை அவர் ‘நான் சொல்லும் ரகசியம்’ என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காகப் பாடி இருக்கிறார். இதில் என்ன விசேஷம் என்றால் சிவாஜிக்காக இவர் பாடியது இரண்டே பாடல்தான். இது ஒன்று இன்னென்று புனர் ஜென்மம் படத்தில் ‘என்றும் இன்பமில்லை’ என்ற சோகப் பாடல்.


இதற்குக் காரணம் சிவாஜியின் குரலுக்கு டி.எம்.எஸ். குரலே ஒத்துப் போனதுதான். டி.எம்.எஸ் பாடினால் அவரே பாடுவது போல இருக்கும். மற்ற பாடகர்கள் பாடும் போது குரலில் லேசான மாற்றம் தெரியும். இருந்தும் தான் பாடிய அந்த பாடல்களுக்கு சிவாஜி வாயசைத்த விதம் அபாரம். “அவரே பாடுவது போல் அழகாகப் பொருத்திவிட்டார். சங்கீத ஞானம் இருந்தால்தான் அது மாதிரி உதட்டசைவும் முகபாவமும் கொண்டு வரமுடியும்.” என்று சிவாஜியை பாராட்டுகிறார்.


அடுத்த இன்னொரு ஜாம்பவான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அவருக்கும் மொத்தம் 4 பாடல்கள்தான் பாடியிருக்கிறார். பாசம் படத்தில் “பால் வண்ணம் பருவம் கண்டு…” என்ற பாடல் யாராலுமே மறக்க முடியாத பாடல். திருடாதே படத்தில் “என்னருகே நீ இருந்தால் - இயற்கையெல்லாம் சுழலுவதேன்” என்ற பாடல். இதை மிகவும் வித்தியாசமாக படமாக்கியிருப்பார் திரு.ப.நீலகண்டன். காதல் வாகனத்திலும், ‘இங்கே வா’ என்ற பாடலை இரகசியமாய் பாடுவதுபோல் ஹஸ்கி வாய்ஸில் பாடியிருப்பார். நமக்கு தெரியாத ஒரு வேலையையும் பி.பி.எஸ் செய்திருக்கிறார். அது ஜர்னலிஸ்ட் வேலை. பாட்டு ரிகார்டிங் இல்லாத நேரங்களில் பல ஸ்டூடியோக்களில் வலம் வருவாராம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒரு புனை பெயரில் எழுதி பல பத்திரிகைகளுக்கும் கொடுப்பாராம். ஆனால் அவை கிசுகிசுக்கள் அல்ல, எல்லாமே சுவாரஸ்யமான நல்ல விஷயங்கள்.


அப்படித்தான் ஒரு ஸ்டூடியோவில் இவர் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது எம்.ஜி.ஆர். ஷுட்டிங் இடைவேளை நேரத்தில் ஓய்வாக அமர்ந்திருந்தார். ஸ்டூடியோவில் நடமாடிக் கொண்டிருந்த பி.பி.எஸ்-ஐ எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டுத் தன் அருகே அழைத்தார். பி.பி.எஸ்-ம். எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சியில் ஏதோ முக்கியமான விஷயமாக இருக்கும் போலிருக்கிறது என்று ஆவலுடன் அவர் அருகே சென்றார். பி.பி.எஸ்-ஐ தன் அருகில் அமரச் சொன்னார் எம்.ஜி.ஆர். முதலில் சம்பிரதாயமாக குசலம் விசாரித்த எம்.ஜி.ஆர். தன் மனதில் உள்ள ஆசையை (இதை இலட்சியம் என்று கூடச் சொல்லாம்) பி.பி.எஸ்.ஸிடம் கூறியிருக்கிறார்.


கிட்டத்தட்ட தேவதாஸ் மாதிரி ஒரு அழியாக் காதல் கதை ஒன்று தன்னிடம் இருப்பதாயும் கூடிய விரைவில் அதைப் படமாக்கப் போவதாயும், அதில் வரும் எல்லாப் பாடல்களையும் பி.பி.எஸ். தான் பாட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட பி.பி.எஸ் நெகிழ்ந்து போய்விட்டார். திரையுலகில் எவ்வளவோ ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அவர்களை கேட்டால் மாட்டேன் என்றா சொல்லிவிடுவார்கள்? இருந்தும் மக்கள் திலகம் இவரைப் பார்த்து இப்படி ஒரு விண்ணப்பத்தை கூறியதும் என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கு முக்காடியிருக்கிறார்.
“இது எனக்குக் கிடைச்ச பாக்கியம். என்னிக்குன்னு மட்டும் சொல்லுங்க. உங்க ஆசையை என்னால் முடிஞ்ச அளவுக்கு நிறைவேத்திடறேன்” என்று கூறியிருக்கிறார்.


“எப்போதுமே ஆசைப்படுவது நாம், அனுமதிப்பது ஆண்டவனாயிற்றே. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் அவரை முழு நேர அரசியல்வாதியாக்கிவிட்டது. அவர் ஆசையும், என் அபிலாஷையும் நிறைவேறாமல் போய்விட்டது...” என்று பி.பிஎஸ். கூறும்போது அவர் குரலில் ஒரு ஏமாற்றம் தோன்றத் தவறவில்லை.


அதன் பிறகு ஜெமினிகணேசனுக்காக இவர் பாடிய பாடல்கள்தான் எத்தனை!! அத்தனையும் சொன்னால் ஒரு யுகம் கூட ஆகலாம். சங்கீத மும்மூர்த்திகள் என்று கர்நாடக சங்கீதத்தில் கூறுவார்கள். அது போல தமிழ் திரையுலகின் அப்போதைய மும்மூர்த்திகள் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி. இந்த மூன்று பேருக்கும் பாடியது மிகப் பெருமையாக இருக்கிறது என்கிறார் தமாஷாக.


கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், துளு, கொங்கணி, உருது என்று இன்றும் பல மொழிகளில் 3,000 பாடல்களுக்கு மேல் பாடிய பி.பி.எஸ்-க்கு இன்னொரு திறமையும் இருக்கிறது. அதுதான் சந்தஸ். அதாவது சந்தங்கள். கவிதைகள் எழுதும் முறையில் சந்தங்களை வைத்து ஒரு புதிய முறையை உருவாக்கினார். உதாரணமாக மகா கணபதி என்ற பெயர் இருந்தால் அதில் முதல் எழுத்து ‘ம’ வைத்து ஒரு கவிதை வாக்கியம் என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கவிதை வாக்கியம் எழுதி முடிவில் எல்லாம் சேர்ந்து ஒரு கவிதையாக்கும் விதம். இதில் பி.பி.எஸ். மிகத் தேர்ந்தவராக இருந்தார். அது பற்றிப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.


மிகவும் எளிமையானவர் எந்த விழாவாக இருந்தாலும் தன்னை அழைக்காவிட்டால் கூட வலியச் சென்று விழாத் தலைவரை பாராட்டுவார். மிகவும் ரசனை மிக்கவர். ‘காத்திருந்த கண்கள்’ படத்தில் “துள்ளித் திரிந்த பெண்ணொன்று – துயில் கொண்டதேன் இன்று” என்று பாடல். அந்த படத்தில் கதாநாயகிக்கு அக்கா, தங்கை என இரட்டை வேடம். அந்த வேடத்தில் நடிகையர் திலகம் சாவித்ரிதான் நடித்திருந்தார். கதாநாயகன் ஜெமினி கணேசன் அக்காவைக் காதலித்திருப்பார். அதே சமயம் தங்கை ஜெமினி கணேசனைக் காதலித்திருப்பார். விதி வசமாக அக்கா ஒரு ரயில் விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருப்பார். எதிர்பாராதவிதமாக ஜெமினி தங்கையை மணந்திருப்பார். ஆனால் தான் காதலித்த பெண்தான் தன் மனைவி என்று நினைத்திருப்பார். தங்கையும் அக்காவைப் போலவே நடித்துக் கொண்டிருப்பார் எப்போதாவது பிரச்சனை வரும்போது தூங்கிவிடுவார்.


இந்தச் சூழ்நிலைக்குத்தான் கண்ணதாசன் அந்தப் பாடலை எழுதியிருப்பார். தங்கை வீட்டில் படுத்திருக்க அக்கா ஆஸ்பத்திரியில் படுத்திருக்க...


துள்ளித் திரிந்த பெண் ஒன்று-
துயில் கொண்டதேன் இன்று-


இந்தச் சூழ்நிலைக்கு இந்த வரிகள் எவ்வளவு அழகாகப் பொருந்தியிருக்கிறது. அதுவும் இயக்குனர் டி.பிரகாஷ்ராவ் அதைப் படமாக்கியிருந்த விதம் அபாரம் என்று பாராட்டுகிறார் பி.பி.எஸ்.


அது மட்டுமல்ல கண்ணதாசனை பற்றி சொல்லும்போது அவர் யுகக் கவிஞர் என்றே சொல்கிறார். சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக இலக்கணச் சுவை குறையாமல் சங்க இலக்கியத்திற்கு நிகராகப் பாடல் எழுதுவதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான் என்று உறுதியாகக் கூறுகிறார்.
அதே போல இன்னொரு பாடலையும் சுட்டிக் காட்டுகிறார்.


உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே


என்ற பாடல். இதில் விண்ணிற்கு எதுகையாக மண்ணிற்கு என்று எழுதாமல் கண்ணிற்கு என்று எழுதினாரே அதுதான் கண்ணாதசான் கவித்வம்.


வாழ்க்கையின் தத்துவமே ரசித்து வாழ வேண்டும். அதுவும் கலைக்கு விலையே ரசிப்புத் தன்மைதான். அப்படித்தான் விசுவநாதனும் ரசித்து மெட்டுப் போடுவார். கண்ணதாசனும் ரசித்துப் பாட்டெழுதுவார். பாடகர்களும் ரசித்துப் பாடுவார்கள். ரசனை இல்லாதவன் கலைஞனே இல்லை என்று அடித்துக் கூறுகிறார்.


‘மணப்பந்தல்’ படத்தில் அசோகனுக்காக – “உடலுக்கு உயிர் காவல், உலகுக்கு ஒளி காவல்” என்ற பாடலைப் பாடியிருக்கிறார். அந்த பாடல் பதிவு முடிந்து பி.பி.எஸ். வெளியே வர அடுத்த பாடலை எழுத கண்ணதாசன் உள்ளே நுழைய அந்த மின்னலடிக்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “உங்கள் பாட்டு சூப்பர்” என்ற பி.பி.எஸ். ஜாடையிலே கட்டை விரலை உயர்த்திக் காட்ட பதிலுக்கு கண்ணதாசன் நன்றி என்பதை ஜாடையிலேயே கூறி சென்றாராம். காரணம் அந்தக் காலத்தில் பிரபலமான அனைவரும் அவ்வளவு பிசி. ஐந்து நிமிடங்கள் நின்று பேசக் கூட நேரம் இருக்காதாம். அந்த பாட்டிலேயே இன்னொரு தமாஷான சம்பவம். அந்த பாடலைப் படத்தில் எஸ்.ஏ.அசோகன் பாடுவது போல் வரும். அசோகனுக்கு திரைப்படங்களில் அவ்வளவாக பாடல் காட்சிகளில் நடிக்கும்படி அமையாது. ஆனால் இந்த பாடலை நன்றாகப் பாடுவது போல் நடிக்க வேண்டும்.


அதனால் பி.பி.எஸ் அவர்களையே தன் எதிரில் அமர வைத்து அவரைப் பாடச் சொல்லி அதற்கேற்றாற் போல் உதட்டசைவைப் பயிற்சி செய்வராம். இது மாதிரி குறைந்தது பத்து முறையாவது பி.பி.எஸ் பாட அசோகன் உதட்டசைவைப் பயிற்சி செய்ய பி.பி.எஸ்க்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம்.


கிட்டத்தட்ட அன்றைக்குப் பிரபலமாய் இருந்த அத்தனை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் ஒரு சிலதுதான் பாடியிருக்கிறார். மருதகாசி பாடல்களை ஓரளவிற்கு பாடியிருக்கிறார். கண்ணதாசன் பாடல்கள் தான் நிறையப் பாடியிருப்பதாகச் சொல்கிறார்.


‘மேல் டூயட்’ என்று சொல்லும் இரண்டு ஆண் குரல் சேர்ந்து பாடும் பாடல்கள் நிறையப் பாடியிருக்கிறார். அத்தனையும் சூப்பர் ஹிட்.
அதே போல கர்ணன் படத்தில் “ஆயிரம் கரங்கள் நீட்டி” என்ற பாடலை பி.பி.எஸ், டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் என நான்கு பேருடன் பாடியிருக்கிறார். அதில் “என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்” என்ற பாடல் இவர் பாடியது. இளையராஜாவிற்காக இரண்டு இந்திப் பாடல்கள் எழுதி கொடுத்திருக்கிறார். அவர் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் 7ஜி ரெயின்போ காலணி படத்திற்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.


ஒரு பாடலாவது இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் பாட வேண்டும் என்பது இவர் கனவு. நானும் ஒரு பெண் என்ற படத்தை ஏ.வி.எம். இந்தியில் ‘மேன் சுப் ரஹுங்கி’ என்ற பெயரில் படமாக்கினார்கள். அதில் ஒரு டூயட் லதா மங்கேஷ்கருடன் பாட வேண்டியிருந்தது. ஏ.வி.எம். செட்டியார்தான் பலமாக சிபாரிசு செய்தார். இசை சித்ரகுப்தா. அவருக்கு இவரை நன்றாகத் தெரியுமாதலால், ‘எனக்கு காலங்களில் அவள் வசந்தம் குரல் வேண்டும்’ என்று சிரித்துக் கொண்டே கூறினாராம். பாடல் பதிவு முடிந்ததும் பி.பி.எஸ்-ன் குரலுக்காகவும் இந்தி உச்சரிப்புக்காவும் மிகவும் பாராட்டினாராம் சித்ரகுப்தா.


ஏ.ஆர் ரஹமான் இசையில் அவர் பாடவில்லை. ஆனால் “கண்ணாளனே” பாடல் டியூனில் ஒரு பாடலை வேறு மொழியில் எழுதிக் கொடுத்தாராம்.

செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக இவரை நியமித்தார். உடன் இருந்தது குன்னக்குடி வைத்தியநாதன். 74 மேளகர்த்தா ராகங்களைக் கண்டுபிடிக்க ‘டைமண்டு கீ’ என்ற ஒன்றை கண்டுபிடித்தார். அதன் அடையாளக் குறிகளை வைத்து எந்த ராகம் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இதை எம்.எஸ்.விஸ்வநாதன் மிகவும் பாராட்டினார்.


தான் ஒரு சாப்பாட்டுப் பிரியன் என்று தன்னை தானே கூறிக் கொள்கிறார். 13 இனிப்பு வகைகளை ஒரே சமயத்தில் சாப்பிடுவாராம். இவர் குடும்பத்தில் அத்தனை பேருக்கும் இசை ஞானம் உண்டு. ஆனால் தொழில் முறையில் இவரைப் போல் யாரும் வரவில்லை. இலட்சக் கணக்கான இதயங்களைக் கொள்ளை கொண்ட பி.பி.எஸ்ஸால் நம் மத்திய, மாநில அரசுகளின் இதயத்தை கொள்ளை கொள்ள முடியவில்லை போலும். ஒரு கௌரவத்தையோ அங்கீகாரத்தையோ அவர்கள் கொடுக்கவே இல்லை. ஒருவேளை அந்த பாக்கியம் அந்த விருதுகளுக்கு இல்லை போலும்.
இருந்தாலும் என்ன? அவர் சுவாசம் வேண்டுமானால் காற்றில் கரைந்திருக்கலாம். ஆனால் அவருடைய தேனினும் இனிய குரல்…..?
காற்றில் கலந்துதான் இருக்கிறது. இன்றும் நம் செவிகளை வருடிக் கொண்டிருக்கிறது.