தொடர்கள்
தொடர்கள்
நாடும் நடப்பும் – 11 - சுதாங்கன்

20180313220244628.jpg

தேசியமயமாகட்டும் நதிகள்!



காவிரி விவகாரம் என்பது பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். காவிரி
என்பது தமிழ்நாடு - கர்நாடகம் இரு மாநிலங்களுக்கான பிரச்னை என்றே
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலத்தவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான் சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு வந்தபோது
ஐ.பி.எல்லின் தலைவர், `விளையாட்டில் அரசியலை நுழைக்காதீர்கள்’ என்றார்.


அவர் எந்த மாநிலத்துக்காரர் என்பது தெரியாது. நதி நீர் கேட்பது மக்களின்
வாழ்வாதார பிரச்னை என்பதை அவருக்கு யார் புரிய வைப்பது? ஆனால்
இந்தியாவில் நதிகளே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே

உணருவதில்லை.

நதி என்பதை ஒரு காலத்தில் கடவுளாக பூஜித்தார்கள். நம் நாடே நதிக்கரை
நாகரீகத்தில் வளர்ந்ததுதான். பூஜிக்கப்பட்ட நதியின் மீது இருந்த பக்தி
காணாமல் போய், அதை இப்போது சடங்குகளுக்காக பயன்படுத்துகிறோம்.
அமாவாசைக்கும், முதியோர்களுக்கு திதி கொடுக்கவும், சில மாநிலங்களில்
ஈமச்சடங்குகளுக்கும் அதை பயன்படுத்துகிறோம்.

நீர் என்பது தாராளமாக நமக்கு கிடைக்கக் கூடியது என்கிற நினைப்பினால்

அதை பற்றி கவலைப்படாமல் இருந்து விட்டோம். நதி மீதுதான் நமக்கு எத்தனை

அலட்சியம்!

வைகை என்கிற நதி மதுரையில் எத்தனை புராதனமானது! வை கை என்பதாலேயே அதில்

முழுக்க கையை வைத்து அந்த நதியே காணாமல் போய்விட்டது. அதே போல் இந்தியாவில்

எல்லா நதிகளுமே சுரண்டப்பட்டுவிட்டது.

`மங்கை தீட்டானால் கங்கையில் குளிக்கலாம். ஆனால் அந்த கங்கையே
தீட்டானால்..’ என்று முன்பு வசனம் வரும்.

ஆனால் அந்த கங்கையே தீட்டாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது!

நதியின் முக்கியத்துவத்தை மனிதர்கள் உணரவேயில்லை.

முன்பு பெண்கள் கிராமங்களில் மாலை நேரங்கள் கையில் குடத்துடன் கூட்டமாக

நடந்து போவார்கள். போய் ஆற்றோர மணலை கையில் இருக்கும் வட்டையினால்

தூர் வாரி நீர் எடுத்து வருவார்கள். அந்த நீர் சமையலுக்கும், குடிப்பதற்கும் அத்தனை

அருமையாக இருக்கும்.

இப்போது தமிழகத்திலேயே எந்த ஆற்றிலிருந்து ஊற்று நீரை எடுக்க முடியும்?.

பல ஆறுகள் காணாமல் போய்விட்டது. தன் மாவட்டத்திலேயே துவங்கி தன்
மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, தன் மாவட்ட கடலிலேயே கலக்கும்

ஒரு சுயம்பு, ஒரு தன்மானமிக்க நதி எங்கள் தாமிரபரணி என்று ஒரு காலத்தில்

நெல்லைக்காரர்கள் பெருமையொடு சொல்வார்கள். இப்போது நதி இளைத்து துரும்பாய்

போய்விட்டது.

நதிகளை காணாமல் அடித்தது மணல் கொள்ளையர்கள்தான்.

அடுத்தது நதியோரம் இருக்கும் தொழிற்சாலைகள்!

தொழிற்சாலைகளின் சுத்தகரீக்கப்படாத கழிவுகள் ஆறுகளில் கலந்து ஆறுகளையே சீரழித்துவிட்டார்கள்.

ஒரு காலத்தில் சென்னையின் கூவம் என்பது ஒரு நதி! ஆனால் இரண்டு
தலைமுறைகளாக அதை ஒரு சாக்கடை என்றே நினைக்கத் துவங்கினார்கள்.

பச்சையப்பன் கல்லூரியை துவக்கிய பச்சையப்ப முதலியார் ஒரு காலத்தில்
இந்த கூவம் நதியில் குளித்துவிட்டுத்தான் அவருடைய இஷ்ட தெய்வமான
முருகனையே வழிபடுவாராம்.

நதிகளை தேசியமயமாக்க வேண்டும். இதில் அம்பேத்கரின் பிறந்த நாளான (ஏப்ரல் 14)

இன்று நினைவு கூர்வது அவசியம்.

அம்பேத்கர் 1942-46 ஆண்டுகளில் வைராய் கவுன்சிலில் தொழிலாளர் நலன்,
பாசனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். அந்த நான்காண்டுகளில்

அத்துறைகளில் அவர் புரிந்த சாதனைகள் இன்றும் நமக்கு வழி காட்டுகின்றன.


அம்பேத்கர் பதவியேற்கும் வரை இந்தியாவில் நீராதாரக் கொள்கை தெளிவாக
இல்லை. தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாகாணங்கள் நீரைத் தேக்குவதற்கு அல்லது

வெள்ளத் தடுப்புக்காக அணைகள் கட்டிக் கொண்டன. ‘மனிதன் நீரில்லாமல்தான் பாதிப்படைகிறான்.

அதிக நீரினால் அல்ல’ என்று குறிப்பிட்ட அம்பேத்கர்தான் நீராதாரக் கொள்கையை வடிவமைத்தார்.

அவை ஆற்றுப் பள்ளத்தாக்கு வளர்ச்சி சார்ந்த பன்முகப் பயன்களைஅளிக்கக்கூடிய

நீர் மேலாண்மைத் திட்டங்கள், ஆற்றுப் பள்ளத்தாக்குஆணையங்கள் உருவாக்குதல், நீர் மேலாண்மை

மற்றும் மின்சாரத் திட்டங்களை உருவாக்குவதற்கு வல்லுனர்களைக் கொண்ட தொழில் நுட்பக்

குழுவினை அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

இந்திய அரசு சட்டம் 1935ன் படி நீர் மேலாண்மை அதிகாரம் முழுவதுமாக மாகாணங்களுக்கு

வழங்கப்பட்டிருந்தது. நதிகள், மத்திய அரசின் அதிகாரத்தினுள் வர வேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டவர்

அம்பேத்கர். பல்வேறு காரணங்களுக்காக ஒரு மாகாணம் தன் ஆளுமைக்குட்பட்ட இடத்தில் உருவாகும்

நதியினை மற்ற மாகாணங்களுக்குப் பகிராமல் போகலாம் என்று அவர் அன்றே கருதினார்.

இந்திய அரசியல் சட்டக்கூறு 262ன் மூலம் நதி நீர்ப் பகிர்வு பிரச்ச்னைகளைத் தீர்க்கும் அதிகாரத்தை மத்திய

அரசுக்கு வழங்கியதோடு நிற்காமல், நதி நீர் குறித்து மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னையில்

நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தினார் அம்பேத்கர்.

காவிரி மட்டுமல்ல.. இந்தியாவின் நதிகள் அனைத்துமே உடனடியாக தேசியமயமாக்கப்பட வேண்டும்.

ப்ளே பேக் சிங்கர்! பி.பி.எஸ்.

நாடும் நடப்பும் என்கிற போதே நாம் அரசியலையும் பொது விவகாரங்களையும் மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இலக்கியம், கலை, இயல், இசை நாடகம் இவையெல்லாம் நாட்டு நடப்பில் இல்லயா என்ன ?

இந்த கேள்வி எழுகின்ற இந்த நாளில் அம்பேத்கரும் நினைவுக்கு வருகிறார்.
இதே நாளில் ( ஏப்ரல் 14) பின்னனிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸின் நினைவு
தினம் என்பதும் நினைவில் வருகிறது.

பேஸ் குரலில் பாடிய இவர், பொருளுணர்ந்து சொற்களுக்கு அழுத்தம் தந்தவர்.
அழகான அசைவுகள் மூலம் பாடல்களுக்கு மெருகூட்டியவர். கண்ணதாசனின் வரிகளை இதமாக இசைத்தவர்.

மாஞ்சோலைகளும், கரும்பு வயல்கலும் காற்றில் சலசலத்து எழில் கொஞ்சும்
ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குக் கடற்புறத்தில் செவிக்கு இனிமையான
சங்கீதத்தை தேடிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அவன் பெயர் ஸ்ரீனிவாசன்.

வீட்டில் தாய் சேஷகிரி அம்மாள் மனமுருகி பாடிய இனிமையான பக்திப்
பாடல்கள், அவனுக்கு ஆறுதல் அளித்தன. ஆனால், வடக்கிலிருந்து வந்த
வாடைக்காற்று, ஸ்ரீனிவாசனை இசை ரசனையின் கொடைக்கானலுக்கே அழைத்துச் சென்றது.

அந்தக் காற்று தலத் மெஹ்மூத், முகமது ரஃபி. மன்னாடே, முகேஷ், லதா
மங்கேஷ்கர் போன்றோர் பாடிய அந்நாளைய திரைப்பாடல்களை ஜிலுஜிலுவென சுமந்து வந்தது.

அவற்றில் தன் மனதைப் பறி கொடுத்தார் ஸ்ரீனிவாசன்.

சின்ன வயதில் இவரது ஜாதகத்தை பார்த்த ஒரு ஜோதிடர் ` இவன் கலைத்துறையில் உருப்படவே மாட்டான்’ என்றார். அந்த ஜோதிடத்தை பொய்யாக்கிக் காட்டியவர் பி.பி.எஸ். பிரதிவாதி பயங்கரம் என்பது குடும்பப் பெயர் அதோடு ஸ்ரீனிவாசன் சேர்ந்து பி.பி.எஸ். ஆனார் இவர்.

அறுபதுகளில் மெலடிப் பாடகராக பி.பி.எஸ் உருவெடுக்கப் போகிறார்
என்பதற்கான அறிகுறியை காட்டிய படம் 'அடுத்த வீட்டுப் பெண்'.

கப்பலோட்டிய தமிழனில் ஜி.ராமநாதன் ஜெமினி கணேசனுக்கு பி.பி.எஸ்ஸை பாட வைத்தார்.

` காற்று வெளியிடை கண்ணம்மா’ பாரதியின் இலக்கிய வரிகளை காதுக்கு இனிமையான சரளமான

இசைத்தமிழாக நகல் எடுத்தது.

`காலங்களில் அவள் வசந்தம்’ ( பாவ மன்னிப்பு) இந்த ஒரு பாட்டு என் தலை
எழுத்தையே மாற்றியது என்பார் பி.பி.எஸ்.

கண்படுமே பிறர் கண்படுமே ( காத்திருந்த கண்கள்) 1962. அதே ஆண்டில்தான் அவருக்கு எத்தனை அருமையான பாடல்கள்?காற்று வந்தால் தலை சாயும் நாணல் (காத்திருந்த கண்கள்) துள்ளித்திரிந்த பெண்ணொன்று (காத்திருந்த கண்கள்)
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்’, ` இந்த மன்றத்தில் ஓடி வரும்’
`பொன்னென்பேன் சிறு பூவென்பேன்’, ` நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ (போலீஸ்காரன் மகள்), ` பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன்’ ( வீரஅபிமன்யு), மயக்கமா கலக்கமா ( சுமைதாங்கி)... ஆஹா...அந்த ஆண்டு பூராவும் அவர் ராஜ்ஜியம்தான்.

தனது பாடல்களைப் போலவே இனிமையாக வாழ்ந்து விட்டுப் போனவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்!