
“விஷயத்தை கேளும்.. சன் டி.வி. தனது ஊழியர்களுக்கான விழாவை தனது வளாகத்திலேயே நடத்த முடிவெடுத்ததாக சொன்னேனில்லையா?.. திடீரென இந்த முடிவில் ஒரு மாற்றம். அதிரடியாக ஒரு சில நாட்களிலேயே திட்டமிட்டு இந்த மாதம் 13ஆம் தேதியன்று அவர்கள் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஒரு வளாகம் எடுத்து செமத்தியாக கொண்டாடினார்கள். வெள்ளி விழாவையொட்டி அனைத்து ஊழியர்களுக்கும் சீனியாரிட்டிபடி மூன்றிலிருந்து ஒரு மாதம் வரை போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சன் டி.வி. உத்தியோகம் என்பது அரசாங்க உத்தியோகம் போன்றது. `அந்த வேலை என்னாச்சு?.. இந்த வேலை என்னாச்சு?!` என்று யாரும் கழுத்தைப் பிடித்து நெரிக்க மாட்டார்கள். சுமாராக வேலை செய்தே கூட இங்கே வேலையில் நீடித்துவிட முடியும். ஆனால் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம். அதிலும் நடுத்தட்டு மற்றும் கீழ்மட்ட ஊழியர்களுக்கு சமபள உயர்வு என்பது இன்ச் இன்ச்சாகத்தான் நடக்கும். ஆனால் இங்கே அனைத்து ஊழியர்களுக்கும் அற்புதமான மதிய உணவு போடுகிறார்கள். ஷிப்ட்டுகளில் வேலை செய்பவர்களுக்கு அந்தந்த வேளையும் அட்டகாச உணவு உண்ணக் கிடைக்கும். மற்ற சேனல்களில் இப்படியொரு தாராள மனசு இல்லை!” என்றபோது `கலாநிதி மாறன் வாழ்க!` என்றார் நண்பர் வாயார.
“வெள்ளிவிழா நேரத்தில் இந்திய சேட்டிலைட் டி.வி.யின் மன்னனுக்கு இது சரியான பாராட்டுதான்!.." என்றேன்.
"அதிருக்கட்டும். இந்த வாரம் வெப் சீரிஸ் உலகில் களமிறங்கியிருக்கும் மூன்று இயக்குநர்கள் பற்றி சொல்வதாகச் சொன்னீர்களே!” என ஞாபகமாகக் கேட்டார் நண்பர்.
“ம்.. சொல்கிறேன். முதலில் கௌதம் வாசுதேவ் மேனன். திரையுலகில் ஏராளமான கடன் பிரச்னையில் இவர் தத்தளிப்பதாக சொல்லப்படுகிறது. தனக்கு எத்தனை கோடிகளில் கடன் இருக்குமென்றாவது இவருக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாம்.! சமீபத்தில் இவருக்கும் புதிய வெற்றிகர இயக்குநர் ஒருவருக்கும் ட்விட்டரில் சண்டையே நடந்தது. அதாவது இயக்குநர் கார்த்திக் நரேன் `துருவங்கள் பதினாறு` எனும் படம் தயாரித்து இயக்கி வெற்றி பெற்றவர்.

இவரது அடுத்த படமான `நரகாசுரன்` படத்தை தானே தயாரிப்பதாகக் கூறி வாய்ப்பு கொடுத்தார், கௌதம். ஆனால் அப்படிச் சொல்லி அந்தப் படத்தின் மீது கடன் வாங்கி தனது மற்ற தயாரிப்புகளுக்கு கௌதம் செலவழித்துவிட்டார் என்றும் இதனால் `நரகாசுரன்` முடிந்த பிறகும் ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கிறது என்றும் புது இயக்குநர் பொங்கிவிட்டார். இதனை நம்பிக்கை துரோகம் என்பது போலவே புது இயக்குநர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட, `புது இயக்குநர்களுக்கு அனுபவம் போதவில்லை` என பதிலுக்கு ட்வீட்டினார் கௌதம். இந்த சினிமா பிரச்னை ஒருவழியாக இப்போதுதான் ஒரு சுமுகமான முடிவுக்கு வரப்போகிறது. இதற்கு உதவுவது ஒரு சேனல்தான்!” என நான் நிறுத்த..
“அதானே பார்த்தேன்.. சினிமா சங்கதி சொன்னாலும் நீங்கள் அதை சேனலில் கொண்டு வந்துதானே முடிப்பீர்கள்! அந்த சேனலின் உதவிக்கு வாருங்கள்!” எனச் சிரித்தார் நண்பர்.
“நரகாசுரன் படத்துக்கு சேனல் ரைட்ஸ் இன்னும் விலை போகவில்லை. அதனை ஒரு பிரபல சேனல் பெரிய பணம் கொடுத்து வாங்க முன் வந்திருக்கிறது. அந்தப் பணத்தை வைத்து பட ரிலீஸ் வேலைகளை மும்முரப்படுத்துகிறார்கள்!”
“பரவாயில்லையே! கௌதம் இந்த ஒரு வழியையாவது அவருக்கு மிச்சம் வைத்தாரே!” என்றார் நண்பர்.
“சரி கௌதமின் வெப் சீரீஸ் மேட்டருக்கு வருகிறேன். இவரிடம் ஏகப்பட்ட உதவியாளர்கள் இருக்கிறார்கள். விஸ்காம் முடித்த இளைஞர்கள் கூட்டம் இவரிடம் சேர ஆலாய்ப் பறக்கும். சொல்லப்போனால் தன்னிடம் எத்தனை உதவியாளர்கள் இருக்கிறார்கள் என்று கூட இவருக்கு சரியாகத் தெரியாது என்பார்கள். அந்த அளவுக்கு பெரிய பட்டாளம் அது. இந்த இளைஞர்களில் சிலர் கொடுத்த ஐடியாதான் இந்த வெப் சீரீஸ். `கொஞ்சம் போல பணம் போட்டு பெரிய அளவில் லாபம் ஈட்டலாம்` என ஒரு உதவியாளர் ஐடியா தந்து கான்செப்ட்டும் சொல்ல.. கௌதமுக்கு அந்த ரெண்டுமே பிடித்துவிட்டது! இப்போது ஐ.டி. ஆபீஸில் வேலை செய்துவிட்டு சனி, ஞாயிறுகளில் என்ன செய்வதென்று தெரியாமல் ஓ.எம்.ஆர். ஃப்ளாட்டுகளில் அடைந்து கிடக்கிறார்களில்லையா? அந்த பேச்சுலர் பசங்களின் வீக் எண்ட் வாழ்க்கைதான் இந்த வெப் சீரீஸ்!”
“இந்த ஐ.டி. பசங்க ஐடியாவில விகடன் டெலிவிஸ்டாஸ் கூட ஒரு டி.வி. சீரியல் முன்பு எடுத்ததில்லையா?!”
“ஆம். அதன் பெயர் ‘E.M.I.’ ஐ.டி. அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் நான்கைந்து நண்பர்கள் பற்றிய கதை அது. சன் டி.வி.யில் வந்தது. ஏனோ சீக்கிரமே முடிந்துவிட்டது. ஆனால் கௌதமின் வெப் சீரீஸ் குடும்பத்தோடு வாழும் ஐ.டி. ஊழியர்கள் பற்றியது அல்ல.. ஒரு குடும்பமாகவே வாழும் பேச்சுலர் ஐ.டி. பசங்க பற்றியது. இதில் முறையற்ற வாழ்க்கையும், உறவு முறைகளும், கெட்ட வார்த்தைகளும், குடி பார்ட்டிகளும் சற்று தாராளமாகவே காட்டப்படும். வெப் சீரீஸுக்கு சென்ஸார் கிடையாது என்பதால் கௌதம் உதவியாளர்கள் இதில் வேற லெவல் ஏறிவிட்டார்கள் என்பது தகவல்!”
“அது சரி.. இந்த வெப் சீரீஸ் எந்த OTT டி.வி.யில் வரப்போகிறது?!”
“மிக நல்ல கேள்வி. முதலில் யப் டி.வி. (Yupp TV) என்றார்கள். இப்போது அமேசான் என்கிறார்கள். எது என விரைவில் தெரியும்."

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் மேட்டருக்கு வருகிறேன். இவரும் தனது `ஸ்டோன் பென்ச்` தயரிப்பு நிறுவனம் மூலமாக தனது உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டி வெப் சீரீஸ் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்! ஒரு கிரைம் த்ரில்லர் கதைதான் இவர் செய்திருப்பது. ஒரு `தில்`லான பெண்ணின் கதையாம். கதையிலும் அதன் உருவாக்கத்திலும் கார்த்திக் சுப்புராஜ் நிறைய கவனம் எடுத்திருக்கிறாராம். இதுவும் விரைவில் யப் அல்லது வேறு ஏதாவது OTT டி.வி.யில் வெளியாகலாம்!”

“மூணாவது இயக்குநர் வசந்தபாலன்தானே?!”
“அவரேதான். இவர் ‘லாட்ஜ்’ என்ற பெயரில் 13 வாரக் கதைகள் ஒன்றை ‘யப்’ டி.விக்காக இயக்குகிறார். பதிமூன்றும் பதிமூன்று சிறந்த சிறுகதைகள் எனலாம். ’அவ்வளவு அற்புதம்’ என யப் டி.வி.யினர் இதனை உச்சி முகர்கிறார்கள். இதனை தயாரிப்பது அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு சினிமா நடிகர் இதில் தோன்றுவார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தேன். பார்த்த உடனேயே இது மிகுந்த பரபரப்பினை உண்டாக்கும் என புரிந்து விட்டது!”
“அப்படியென்ன சென்சேஷனல் போஸ்ட்டர்? எனக்கு கொஞ்சம் விளக்கக்கூடாதா?”
“இன்னும் அதிகாரபூர்வமாக வராத போஸ்ட்டர் என்றாலும் ஒரு ஹிண்ட் மட்டும் தருகிறேன்.லாட்ஜூகளில் பெண்கள் செய்யும் செக்ஸ் தொழிலை மையப்படுத்தியதே ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டர். இதற்கு மேல் இப்போதைக்கு சொல்ல முடியாது!” என்றேன்.
“ம்... இப்படி பெரிய பெரிய இயக்குநர்கள் நடிகர்கள் எல்லாம் களமிறங்குகிறார்கள் என்றால் வெப் சீரிஸூக்கு OTT சேனல்கள் நல்லதொரு பட்ஜெட்டைத்தருகிறது என சொல்லுங்கள்!”

“ரொம்பச்சரி. தமிழில் மினிமம் ஒரு எபிசோடுக்கு ஐந்தாறு லட்சம் தருகிறார்கள். ஆனால் இது போதவில்லை. அவர்கள் கேட்கும் காமிரா, போஸ்ட் புரொடக்ஷன் குவாலிட்டியை தயாரிப்பாளர் தர வேண்டுமெனில் மினிமம் ஒரு எபிசோடுக்கு பத்து லட்சமாவது தேவை என இப்போது கூக்குரல் எழுகிறது. வடக்கே ஒரு எபிசோடுக்கு 30லிருந்து 40லட்சங்கள் கூட தருகிறார்கள். கிட்டத்தட்ட தென்னிந்தியாவில் ஒரு குட்டிப்படமே எடுப்பதற்கு சமானம் அது! ஒரு இந்தி வெப் சீரியலில் நம்ம மாதவனே நடிக்கிறார் என்றால் பட்ஜெட்டை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்."
“என்னது? மாதவன் நடிக்கிறாரா?”
“ஆம். ‘ப்ரீத்’(Breathe) எனும் சீரிஸ் அது. கதைப்படி நோய்வாய்ப்பட்டு இருக்கும் தனது மகனுக்காக மாதவன் தொடர்ந்து கொலைகள் செய்கிறார். எல்லாவற்றிலுமிருந்தும் அவர் சாமர்த்தியமாக தப்பிக்கிறார். அவர் ஏன் அவர்களை கொலை செய்தார்? அதனால் அவர் மகனுக்கு என்ன நன்மை என்பதை திரில்லிங்காக கொண்டுபோகிறது இந்தத்தொடர்!”
“இது எதில் வருகிறது?!”
“அமேஸான் ப்ரைம்’ எனும் OTT யில். இது நம் விகடகவி போல ஒரு ‘APP’. இதனை டவுன்லோடு செய்து சப்ஸ்க்ரைப் செய்து விட்டால் போதும். அதில் எக்கச்சக்க தொடர்களை கைபேசி மூலமாகவே வருடம் முழுக்கப் பார்க்கலாம். இப்போதுதான் ஜியோ வந்துவிட்டதே. அதனால் இது போன்ற ‘ஆப்’கள் மூலம் பார்க்கும் வெப்சிரீல்களுக்கு ஏக கிராக்கி. தரமும் சாதாரண டி.வி. சீரியல்களை விட அதிகப்படியான... கிட்டத்தட்ட சினிமா படத்திற்கு ஈடாக இருப்பதால் இதற்கு இப்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே ஏக கிராக்கி. மெள்ள நம் ஊர் மக்களும் இதற்கு அடிமையாகிக் கொண்டு வருகிறார்கள்."

"இது போன்ற APP TVகளில் வந்த தமிழ்தொடர்கள் பற்றி சொல்லுங்களேன் கேட்போம்!"
"ஹாட்ஸ்டாரில் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கி நடித்த 'As i am suffering from kadhal', யூ-டியூபில் வந்த ப்ளாக்ஷீப், கண்ட்ரோல் ஆல்ட் டிலீட், லிவ் இன் போன்றவை தமிழின் ஆரம்பகட்ட வெப் சிரீஸ்கள். இது தவிர ALT பாலாஜி மூலம் ‘முகத்திரை’ எனும் ஒரு தமிழ்த்தொடர் வந்திருக்கிறது. குட்டி பத்மினியின் தயாரிப்பு இது. யப் டி.வி.யில் இவரது அடுத்த தொடரான ‘அலார்ம்’இன்னும் சில நாட்களில் ரிலீஸாகிறது. இதில் நடிகர் பிரேம் (அண்ணி, அண்ணாமலை சீரியல் புகழ்) போலீஸ் கேரக்டரில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் தயாரிப்பில் உள்ள சில தொடர்கள் பற்றி அடுத்தவாரம் பேசுவோம்!” என விடைபெற்றேன் நான்.
(தொடரும்)

Leave a comment
Upload