தொடர்கள்
ஆன்மீகம்
இனிக்கும் இஸ்லாம் - 8



கவிதை அம்பை விட வேகமாகத் தாக்கும்
---------------------------------------------------------------------

வி.எஸ்.முஹம்மத் அமீன்

20180312155033603.jpg

தம்மைத் தாக்க வரும் எதிரிகளை எதிர்கொள்ளும் ஒரு யுத்தகாலப் பயணம் அது. பாலைப் பெருவெளியில் பயணக் களைப்பைப் போக்க, தோழர்களை உற்சாகமூட்டும் கவிதையை ஒருவர் பாடிக்கொண்டே செல்கிறார். இதனைக் கண்ட உமர் எனும் நபித்தோழர் அவரது அங்கியைப் பிடித்து இழுத்து ‘என்ன காரியம் செய்கின்றீர்?, புனித பூமியிலே இறைத்தூதர் முன்னிலையில் கவிதை பாடுகின்றீரா?’என்று அதட்டுகின்றார். இந்தக் காட்சியைப் பார்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ‘உமரே...! அவரை விட்டுவிடும். கவிதை அம்பைவிட வேகமாகத் தாக்கும்’ என்று கூறினார்கள்.

கவிதை எதிரிகளின் உள்ளத்தில் கலக்கத்தை ஏற்படுத்தும், நம்பிக்கையாளர்களுக்கு உரமூட்டும். கவிதை எழச்செய்யும், எதிர்படையைச் சிதறடிக்கும். அதனால்தான் கவிதை அம்பை விட வேகமாகத் தாக்கும் என்றார்கள் நபிகளார். சொன்னதோடு மாத்திரமல்லாமல் போர்க்களத்தில் கவிதையும் பாடியுள்ளார்கள். யுத்தகளத்தில் சமர் புரிந்த பொழுதொன்றில் ஒரு கல் நபி(ஸல்) அவர்களின் விரலில் பட்டு இரத்தம் வடிந்தது. அந்த விரலைப் பார்த்த வண்ணம் ‘இது இறைவனின் பாதையில் கிடைத்த வெகுமதி. இரத்தத்தால் தோய்ந்த விரலே உனக்கு நற்கூலி’ என்று கவிதை பாடினார்கள்.

ஹஸ்ஸான் பின் தாபித் என்ற நபித்தோழருக்கு கவிதை பாட ஒரு மேடை அமைத்துக் கொடுக்குமாறு அண்ணலார் கூறினார்கள். ஒருமுறை கவிஞர் ஒருவரை கவிதை பாடச் சொல்லி நபிகளார் கேட்டார்கள். அவர் கவிதை பாட, மீண்டும் ஒரு கவிதை பாடுங்கள் என்றார்கள். இவ்வாறு நூற்றுக்கும் அதிகமான கவிதையை பாடச் சொல்லிக் கேட்டார்கள். கவிதையைப் பாடச் சொல்லிக் கேட்க ஒரு கவிமனம் வேண்டும். அந்த மனம் அண்ணல் நபிகளாருக்கு வாய்த்திருந்தது.

‘அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழிந்துவிடும்’என்ற லபீத் எனும் கவிஞனின் கவிதையே கவிதைகளில் சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நபிகளாரின் துணைவியார் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபிகளார் கவிதை பாடுவார்களா? என்று தோழர்கள் வினவியபோது ‘ஆம்..! லபீத் எனும் கவிஞரின் கவிதையை நபி(ஸல்) அவர்கள் மேற்கோள் காட்டுவார்கள்’ என்று கூறினார்கள்.

‘எதிரிகளின் கவிதைகளை நீங்கள் மேற்கோள் காட்டலாமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் தோழர்கள் வினவியபோது ‘அவர்கள்தாம் இறைநிராகரிப்பாளர். அவருடைய கவிதை ஈமான்( நம்பிக்கை) கொண்டுவிட்டது’ என்றார்கள். இத்தனைக்கும் நபி(ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர். கவிதை இயற்றுவது அவருடைய பணி அல்ல என்று இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

கவிதை என்ற பெயரில் எல்லாவற்றையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆபாசம், இறைவனுக்கு இணை கற்பிக்கும் வார்த்தைகள், தனிமனிதத் துதி, பிறரை இழிவுபடுத்துதல், வெறுப்பை விதைத்தல் போன்றவற்றை கவிதை என்ற பெயரில் பாடுவதற்கும், எழுதுவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ‘தீய கவிதைகளால் ஒரு மனிதனின் உள்ளம் நிரம்பியிருப்பதை விட சீழ், ஜலத்தால் நிரம்பியிருப்பது மேல்’என்றார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.

திருக்குர்ஆன் அன்றைய அரபுக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான காரணங்களில் ஒன்று அதன் சொற்சுவையும், இலக்கிய நயமும்தான். கவிதையை இஸ்லாம் வெறுக்கவில்லை. கவிதை எது என்பதுதான் இஸ்லாம் எழுப்பும் அடிப்படை வினா!