தொடர்கள்
தொடர்கள்
போகிற போக்கில் - 2 -ஊர் சுற்றி

20180313175150833.jpg

‘கிக்’ மேட்டரை தேடி நான் ஆதம்பாக்கம் போய் சேர்ந்ததும், நண்பர் அந்தக் கோவிலின் வாசலருகே நின்றுகொண்டு கையசைத்தார். நான் வண்டியை அவசரமாய் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரை நெருங்கினேன்.

“என்ன விஷயம்?”

என்னுடைய பரபரப்பை கண்டதும், “வாயை துடைங்க. நான் சொன்னது நீங்க நினைக்கிற மாதிரியான மேட்டர் இல்லை. இது வேற...”

“அட... பீடிகை எல்லாம் போதும் பாஸ் விஷயத்துக்கு வாங்க...”

“ஓகே... இது என்ன தெரியுதா?” அவர் கை நீட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன். ஆதம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்.

“இதை காட்டத்தான் இந்த வேகாத வெய்யிலில் என்னை இங்கே வர வச்சீங்களா?” எரிச்சலாய்க் கேட்டேன்.

“அதுக்குள்ளேயும் அவசரப்பட்டால் எப்படி? இதிலிருந்து பத்து கட்டடம் தள்ளித்தான் விஷயம் இருக்கு. என் பின்னாடி வாங்க” என்றபடி நடக்க ஆரம்பித்தார்.

நான் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்தேன். பத்து பனிரெண்டு பில்டிங் தாண்டியதும், தனது நடையை மெதுவாக்கியவர் என்னை நெருங்கி காதருகே கிசுகிசுத்தார். “இது தான் நான் சொன்னது”

இடதுபுறம் இருந்த அந்த கட்டிடத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன்.

டாஸ்மாக் பார் என்கிற கொட்டை எழுத்துக்கள் மின்ன, வெளியே தகரத்தடுப்புகளோடு அந்த பில்டிங் தெரிந்தது. இருவரும் உள்ளே நுழைந்தோம். ஜிம் பாய் சைஸில் நின்றிருந்த இரண்டு நபர்கள் எங்களை பார்வையால் அளந்தனர். அதைக் கண்டும் காணாமல் சற்றே விசாலமான பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நடந்தோம்.

நேரே சென்று இடதுபுறம் திரும்பியதும் அந்த பார் கண்ணில்பட்டது. கிட்டத்தட்ட மினி திரையரங்கம் சைஸ். நான் பிரமித்துப்போய் நண்பரின் பக்கம் திரும்பினேன்.

அவரோ ‘இங்கே எதுவும் பேசவேண்டாம்’ என்பதுபோல் கண்ஜாடை காட்டிவிட்டு ஒரு ஓரமாய் அமர்ந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமர்ந்திருந்த ஆட்கள் கருமமே கண்ணாய் இருந்தனர்.

நண்பர் பேரரை கூப்பிட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு, என்பக்கம் திரும்பி “உங்களுக்கு?” என்றார். “ஒரு கூல் ட்ரிங்க்ஸ் போதும்” என்ற என்னை மேலும்கீழும் பார்த்துவிட்டு நகர்ந்தான் பேரர்.

“இனி நாம ப்ரீயா பேசலாம். அவன் வர அரைமணி நேரம் ஆகும். இங்கே டாஸ்மாக் கடை கிடையாததால் பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய்தான் வாங்கிட்டு வருவான். இது அரசு அனுமதியே பெறாமல் நடத்தப்படும் பார். சில வருடங்களாக இந்த கூத்து நடக்குது. மேலே ஏசி பாரும் இருக்கு. நாலைந்து வருடத்துக்கு முன்னால் இந்த கட்டிடத்துக்குள்ளேயே டாஸ்மாக் கடை இருந்தது. அப்புறம் என்ன காரணத்தாலோ அதை இதே தெருவில் வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. அத்துடன் இந்த பாருக்கான ஒப்பந்தமும் காலாவதி ஆயிடிச்சு. ஆனாலும் இவுங்க, கவனிக்க வேண்டியவுங்களை கவனிச்சு பிசினஸ் நடத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. மாதாமாதம் பெரும் தொகை ஒன்று அதிகாரிகளுக்குப் போய்ச் சேருது. அதனால் யாரும் இதை கண்டுகொள்வதில்லை.”

“பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் இருக்கே. அவுங்களுக்கு தெரியாமலா நடக்கும்?”

“ஒண்னும் ஒண்னும் ரெண்டுன்னு கணக்கு போடத்தெரியாத அவ்வளவு அப்பாவியா நீங்க?” என்றவரிடம் கையெடுத்து கும்பிட்டேன்.

“அய்யா சாமி... ஆளை விடுப்பா... நான் வேறு ஏதோ கிக்கான மேட்டர்னு நினைச்சு வந்தால், உண்மையாவே என்னை ‘கிக்’ வாங்க வச்சிடுவீர் போல. நான் கிளம்புறேன்... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” வியர்த்துப்போயிருந்த முகத்தை துடைத்துக்கொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன்.

ஆதம்பாக்கத்தில் ஸ்டார்ட் ஆன என் வண்டி அடுத்து நின்ற இடம் அசோக் பில்லர். அங்கிருந்த டீக்கடையில் ‘ஸ்ட்ராங்கா ஒரு டீ’ சொல்லிவிட்டுத் திரும்பினால் அந்த சினிமா நிருபர் வாயில் கசியும் புகையோடு நின்றிருந்தார். பல கூட்டங்களில் அவரை சந்தித்திருப்பதால் நன்கு பரிச்சயமானவர்.

“என்ன சார்... எப்படி இருக்கீங்க..?” அருகில் சென்றேன்.

பாதி உயிரோடிருந்த சிகரெட்டை போட மனமில்லாமல் பரிதவித்து “ஹலோ” என்றார்.

எங்களது பேச்சு சினிமாவை வட்டமிட ஆரம்பித்தது. அப்பொழுது அவர் சொன்ன தகவலால், ‘இவரு’மா இப்படி? என்று ரொம்பவும் ஆச்சர்யப்பட்டேன்.

நண்பர் சொன்ன விஷயம் இதுவே...

‘முருகனின் அடிமை’யான அந்த இயக்குனர் கதை சுடுவதில் வல்லவராம். அவரிடம் துணை இயக்குனர்களாகச் சேர வரும் நபர்களிடம் கதை கேட்க ஒருவரை நியமித்துள்ளாராம். கதை கேட்கும் அந்த நபர், ‘இக்கதை இந்த படத்தில் இத்தனையாவது சீனில் வெளிவந்தது’ என்பது போன்ற விவரங்களை நெற்றியடியாய் அடிப்பாராம். தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரையான அனைத்து விவரங்களையும் கரைத்துக்குடித்து ‘ஏவ்’ என ஏப்பம் விட்டவராம் அவர். வாய்ப்புக்காக வருபவர்களிடம் கதைகளை கேட்டுவிட்டு ஏதாவது காரணம் சொல்லி திருப்பி அனுப்பிவிடுவாராம். அப்புறமென்ன... புதுமையான ‘கரு’க்களை ‘முருகனின் அடிமை’யிடம் கொண்டு சேர்க்க, தனது அடுத்த படமாகவோ அல்லது அதில் ஒரு சீனாகவோ வைத்துவிடுவாராம் அந்த டபுள் இனிஷியல் கொண்ட ‘அடிமை’. கொளுத்தும் வெயிலுடன் சேர்ந்து இந்த செய்தியும் என் மண்டையை சூடாக்க ‘பை’ சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

வயதான காரணத்தால், முன்பு போல் அடிக்கடி ஊர் சுற்ற முடிவதில்லை. இதனாலேயே இரண்டு நாட்கள் வீட்டில் அருமையாக ஓய்வெடுத்தேன். அன்றைய தினம் மாலையில், நான் அடிக்கடி செல்லும் நங்கைநல்லூர் – தில்லைகங்கா நகர் நரசிம்மர் கோவிலுக்கு சென்றேன்.

அப்பப்பா... என்ன ஒரு தரிசனம். நேரில் வந்தது போன்ற ஒரு தோற்றத்தோடு தாயாரை இடது பக்கத்தில் இருத்தி அருள் வழங்குகிறார் ‘நாளை என்பதே இல்லை’ என்று சொல்லும் நரசிம்ம பெருமான். பிரம்மாண்டமான நரசிம்மரை இவ்வளவு அருகில் எங்குமே தரிசிக்க வாய்ப்பில்லை. தீர்த்தம், சடாரி, துளசி அனைத்தையும் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தேன். மனதில் இருந்த பாரங்கள் குறைந்தது போன்ற உணர்வு மேலோங்கி இருந்தது.

வெளியில் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு நிமிர்ந்தேன். அந்த பெரியவர் மெதுவாக என்னை கடந்து சென்றுகொண்டிருந்தார்.

அட... இவர்...?!

நான் ஆச்சர்யப்பட்டு “சார்...” எனக் குரல் கொடுத்தேன்.

சட்டென நின்று திரும்பிப்பார்த்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன.