
கீதா கைலாசம்
“இன்னிக்கு நாட்டுல ஒரு பெண் தான் மனசுல நினைக்கும் எண்ணங்களை, தன் விருப்பத்தை, ஆசையை, கனவை, பயத்தை, பரிதாபத்தை.. கோபத்தை எல்லாம் நினைச்ச மாத்திரத்துல எல்லார்கிட்டயும் அப்படியே சொல்ல முடியுதா?.. அது மாதிரியான வாய்ப்பு இங்கே எத்தனை பெண்களுக்கு கிடைக்கும்?! திடீர்னு அப்படி ஒரு சில பல நிமிடங்கள் ஒரு பெண்ணோட வாழ்க்கையில் வாய்த்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு சந்தர்ப்பம்தான் என் கதாநாயகி லதாவுக்கு கிடைக்குது. அவ அதை எப்படி யூஸ் பண்ணிக்கிறான்னு தெரிஞ்சுக்கணும்னா நீங்க என் 'ஒரு சில பல நிமிடமும் பேச்சும்' நாடகத்தை பார்க்க இந்த ஏப்ரல் 20ம் தேதி சாயந்திரம் சென்னை நாரத கான சபாவுக்கு வரணும்!” என்று நீளமாய்ப் பேசி அழைப்பு விடுத்தார் அந்த நாடகத்தை எழுதி இயக்கும் கீதா கைலாசம்.

காலம் சென்ற இயக்குநர் சிகரம் பாலசந்தரின் மருமகள் இவர். மிக இளம் வயதில் அகாலமாய் மறைந்த சிகரத்தின் மகன் கைலாசம், கீதாவின் கணவர். கைலாசம் மிகச் சிறந்த சிந்தனையாளர். சின்னத்திரை உலகில் `மின்பிம்பங்கள்` எனும் நிறுவனம் துவங்கி பல புதிய விஷயங்களை.. கதைகளை.. நிகழ்ச்சி வடிவங்களை முயற்சித்தவர். தமிழ் சின்னத்திரை உலகில் சாதித்த புரட்சியாளரான கைலாசத்திற்கு அன்று அவரது நிறுவன நிர்வாகத்தில் உடனிருந்து உழைத்தவர்தான் கீதா கைலாசம்.
ஆனால் அப்போதெல்லாம் கீதா கணக்கு வழக்கு நிர்வாகத்தோடு நின்றுவிட்டிருந்தார். படைப்பின் உருவாக்கத்தில் அவர் தலை நீட்டியதேயில்லை.

“ஏன் அன்று தள்ளியிருந்தீர்கள்?!” – கீதா கைலாசத்திடம் கேட்டோம்.
“காரணம் பிரத்யேகமாக எதுவும் இல்லை. நிர்வாகப் பணியே கழுத்து மட்டும் இருந்தது. தவிர நான் எழுதத் தொடங்கியதே சற்று லேட்டாகத்தான். உயர் படிப்பு, திருமணம், நிறுவன நிர்வாகப் பொறுப்பு என அடுத்தடுத்து நிகழ்ந்ததில் எனக்குள் இருக்கும் படைப்பாற்றலை நான் உணர தாமதமாகி விட்டது. அதை நான் உணர்ந்ததே ஒரு வெறுமையில்தான். 2008 வாக்கில் என் அம்மா திடீரென இறந்து போக..அதையொட்டிய என் நினைவுகளை நான் எழுத்தில் வடிக்க அதனுள் ஒரு கதை இருந்த மாதிரி தோன்றியது. உடனேயே என் கணவரிடமும் மாமனாரிடமும் தந்து அது பற்றிய கருத்து கேட்டேன். மாமனார் சட்டென படித்துவிட்டு `நீ எழுதுவது நல்லதொரு முயற்சி.. இதைத் தொடர்வாயாக` என வாழ்த்து கூறி தன் கைப்பட வாழ்த்துக்கடிதமே தந்துவிட்டார். என் கணவர் என் எழுத்தைப் படிக்க வைக்கத்தான் நான் சற்று சிரமப்பட வேண்டியதாயிற்று. ஆனால் படித்ததும் பிரமித்துவிடார். என் மீது மரியாதை கூடிவிட்டதாகச் சொன்னார். எனக்கு ஆனந்தத்தில் அழுகையே வந்துவிட்டது. காரணம் அத்தனை சுலபத்தில் அவர் எந்த படைப்பையும் அங்கீகரித்து நான் பார்த்ததில்லை. இதன் பிறகுதான் என் எழுத்தின் மீது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. பிற்பாடு இந்த காத்திருக்கும் அவஸ்தையை வைத்து கல்கி வாரப் பத்திரிகையில் `நீ எழுதிய நான்!` எனற பெயரில் கடிதம் ஒன்று தன் அவஸ்தையை சொல்வதாக ஒரு சிறுகதையே எழுதிவிட்டேன்!” என்று கூறி புன்னகைக்கிறார் கீதா கைலாசம்.
“சரி.. நாடகம் எழுதும் ஐடியா எப்படி வந்தது?”
“பொதுவாகவே என் சிறுகதை எழுத்தில் வர்ணனைகளை விட வசனங்களும் காட்சியமைப்பும்தான் அழுத்தமாக வருகிறது என உணர்ந்தேன். அதையே என கதைகள் படித்தவர்களும் சொன்னார்கள். கூடவே என் எழுத்தில் ஒருவித நகைச்சுவையும் இழைந்தோடுவதாக சொன்னது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. அப்போதுதான் நாடகம் எழுத முடிவு செய்தேன். முதலில் இந்த நாடகத்தினை ஒரு அமைப்புக்காக குறு நாடகமாக எழுதித்தான் இயக்கினேன். அது நன்றாக வந்த தெம்பில் இப்போது அதையே முழு நீள நாடகமாக்கி பெரிய மேடையில் இயக்குகிறேன்!” என மகிழ்கிறார் கீதா கைலாசம்.
இந்த நாடகத்தில் லதா என்கிற நாயகியின் பாத்திரத்தை ஏற்றிருப்பவர் பிரபல மாடலும் நடிகையுமான மேகா ராஜன் (ப்ரூ விளம்பரத்திலும் ஹமாம் விளம்பரத்திலும் நடிப்பாரே அவரேதான்!) அவர் தன் கொஞ்சும் ஆங்கிலத்தில் தனது FB அக்கவுண்ட்டில் இந்த நடகத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை இங்கே காணொலியில் பாருங்கள்!
“அத்தோடு நின்றுவிடாமல் நாடகத்திற்கும் வரலாம். ஆடியன்ஸுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்!” என முடித்தார் கீதா கைலாசம்.

Leave a comment
Upload