
மணிரத்தினத்தின் `காற்று வெளியிடை` படப் பாடலுக்காகவும் ஸ்ரீதேவி நடித்த `மாம்` படத்தின் பின்னணி இசைக்காகவும் தேசிய விருதுகள் இரண்டை பெற்றுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தமிழர்களை மீண்டும் பெருமைப்பட வைத்துள்ளார்.
`என்னுயிரே.. என்னுயிரே`, `அழகே சுகமா`, `மாங்கல்யம் தந்துனானே` உட்பட இசைப்புயலின் பல பலாச்சுளை பாடல்களுக்கு குரல் தந்தவர்.. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரகுமானுடன் பயணிப்பவர் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ்.

இங்கே அவர் தனது இசை குருநாதரின் வெற்றி பற்றிப் பேசுகிறார்.
"ரொம்ப சந்தோஷமா இருந்தது. உடனே போன்ல கூப்பிட்டு வாழ்த்து சொன்னா, காஷுவலா சிரிச்சுகிட்டே தாங்க்ஸ் சொல்றார். எந்த பரபரப்போ படபடப்போ இல்லை. அதுதான் ரகுமான். இப்போன்னு இல்லை. `ஜீன்ஸ்` காலத்துலேருந்து அப்படித்தான் இருக்கார். எனக்குத் தெரிஞ்சு அதுக்கு மிகப்பெரிய பக்குவம் வேணும். கடவுள் மேல் முழுமையான சரணாகதி தத்துவத்தை வைத்திருக்கிறவர்கள் அப்படி இருப்பார்களோ என்னவோ..
நான் கோயம்புத்தூரில் மார்க்கெட்டிங்கில் இருந்த காலத்தில் எனக்கு எம்.எஸ்.வி., மகாதேவன் அப்புறம் ராஜா சாரைத் தவிர மத்தவங்களோட சினிமா பாட்டுக்களே தெரியாது. கிட்டத்தட்ட ராஜா பைத்தியமாகவே இருந்தேன். அப்போதுதான் `ஒரு வெள்ளை மழை..`, `சின்னச் சின்ன ஆசை..` பாடல்களை சி.டி.யில் கேட்டுவிட்டு இவ்வளவு ஃப்ரெஷ்ஷா, இவ்வளவு புதுசா யாருடா இது என்று பிரமிச்சு போனேன். சினிமா ஆசையில் இருந்த எனக்கு ரகுமான் இசை என்னமோ பண்ண... லெதர் Bagஐ தூக்கிப் போட்டுவிட்டு சென்னைக்கு ரயில் ஏறினேன். கோடம்பாக்கம் சுப்புராயன் நகருக்கு சென்று அவரைப் பார்த்து பேசியதெல்லாம் நேற்றைய இனிப்பான கதை. இன்னிக்கும் நெஞ்சில் சுமக்கும் காவியம்.

“`காற்று வெளியிடை`க்கு இப்போது வருவோம். `வான் வருவான்.. வருவான்` என்று அந்த பாடல் ஆரம்பிக்கிறபோதே சிலிர்ப்பா இருக்கும். தும்பைப் பூ மாதிரி வெள்ளை வெளேர்னு அந்த வானம். அதுக்கேத்தபடி ரம்மியமான டியூன். மென்மையான இசைக் கருவிகள்.

அப்புறம் பாடகி ஷா ஷா திருப்பதியோட கொஞ்சும் குரல். கண்ணமூச்சி காட்டற புல்லாங்குழல் இசை.. லயிச்சுப் போகலேன்னா அப்படியெல்லாம் இசையமைக்க முடியாது. அதேமாதிரி `டாங்கோ` பாடல் ஒண்ணு இருக்கும். புது மாதிரியான கற்பனை.

`மாம்` பட பேக்ரவுண்ட் ஸ்கோரில் அவ்வப்போது பாடல் வரிகளையே அழகா வச்சிருப்பார். அந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ் மியூஸிக். ஸ்ரீதேவியே இதை பல முறை மனம் விட்டு சொல்லியிருக்கார். ரகுமானிடம் நான் வியந்த விஷயம் அவருடைய இன்வால்வ்மெண்ட். கடனுக்கு மாரடிக்கிறதுன்னு ஊர்ப்பக்கம் சொல்வாங்களே.. அதெல்லாம் சுத்தமா கிடையாது. சின்ன பட்ஜெட்.. பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் விடிய விடிய உழைப்பார். நிறைய யோசிப்பார். ரீ-ரிக்கார்டிங்கில் அவர் கூட இருக்கும்போது சட்டுன்னு நம்மகிட்ட ஆலோசனைகள் கேட்பார். நாம் சொல்றது லாஜிக்கலா இருந்தா உடனே மாற்றிடுவார். புது குரல்கள், புதிய வாத்தியக் கருவிகள், புதுமையான இசை வடிவங்கள் என்று எதையோ எப்பவும் தேடிக்கொண்டே இருப்பார். திருப்தி அடையவே மாட்டார் இசையில். இப்படிப் பல அதிசய குணங்கள்தான் அவரை இவ்வளவு பெரிய இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. அவரது இறை நம்பிக்கையைப் பற்றி பேச எனக்கு ஒரு நாள் போதாது. அவர் தமிழகத்தின், இந்தியாவின் பொக்கிஷம் மட்டுமல்ல... ஆசியாவின் மிகப்பெரிய பொக்கிஷம்” என்று கூறி முடித்தார் பாடகர் ஸ்ரீநிவாஸ்.

Leave a comment
Upload