# இது புதுசு

'விகடகவி' ஆன் லைன் வாடிக்கையாளர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் வணக்கம். வாழ்க்கை பயணத்தின் அடுத்த கட்டத்தில் நிற்கிறேன். விகடகவி மூலம் கான மயிலாடப்போகிறேன். கூவத் துடிக்கும் குயில் குஞ்சாக இருந்த நாளிலிருந்து எனது மேடை அனுபவங்களை ஆடையாக தர இருக்கிறேன். ஒரு சொற்பொழிவாளன் எதிர் கொள்கிற சவால்கள், சங்கடங்கள் தாண்ட வேண்டிய தடைகள், கடக்க வேண்டிய தூரங்கள், உரையாற்றுவதற்கு வேண்டிய செய்திகளை சேகரிப்பதற்கு அவன் தேட வேண்டிய தேடல்கள், இந்த நெடிய பயணத்தில் அவனது பாதையில் வீசப்படும் முட்கள்... எல்லாவற்றையும் பதிவு செய்வதற்கு விகடகவி ஆன் லைன் மேகஸின் முன்வந்ததற்கு நன்றி. இது என் வாழ்வில் நான் பெற்ற பேறு.
வீடியோ : ராஜசேகர்
வானம் அதிர நான் முழங்கிய முழக்கங்களை ‘விகடகவி’யில் பந்தி வைக்கிறபோது பல அதிர்வேட்டுகள் கேட்கும். பல ஆச்சர்யங்கள் உங்கள் கண்ணுக்குள் விரியும். பல பித்தலாட்ட பேர்வழிகளின் ‘புனிதர்’ நாடகம் தோலுரித்துக் காட்டப்படும். ஆஷாடபூதிகளின் அட்டகாசங்கள் அவிழ்த்து விடப்படும். நரிகளின் நாட்டாமை நடுத்தெருவுக்கு வந்து சேரும். நான் இந்த எத்தர் கூட்டத்தை எள்ளளவும் விடப்போவதில்லை. வெள்ளாட்டின் தலையை காட்டி, ஓநாயின் கறியை விற்ற கள்ளிமுள் நெஞ்சம் கொண்ட கயவர்களின் முகமூடியை கிழிக்கப் போகிறேன். இந்த நாட்டில் அப்பாவிகளுக்கு மட்டுமே வலி சொந்தமா? முகமூடி மனிதர்களுக்கு முழுநாளும் பஞ்சு மெத்தையா?
இனி வருகிற இளம் தலைமுறை சொற்பொழிவாளர்களுக்கு என் அனுபவம் பாடமாக இருக்கும் என நம்புகிறேன். இப்படியும் நடக்குமா என்று நீங்கள் நினைத்து நெகிழும், கோபப்படும் அளவிற்கு உங்கள் காதுகளுக்கு செய்திகள் எட்டும்.
ஒரு வழிகாட்டுதல் இல்லாமல் நானாகவே வளர்ந்து, தமிழ்நாட்டின் மேடைகளை ஆட்சி செய்த என் மாட்சிமையை விகடகவி மூலம் பந்தி வைக்கப் போகிறேன். பசியார காத்திருங்கள். எதிரிலும் வருவேன். சமயத்தில் எழுத்திலும் வருவேன்.
அடுத்த வாரம் முதல் நாஞ்சில் சம்பத் எழுதும் "என்னடா அரசியல் இது?" -புதிய விறுவிறுப்பான தொடர் ஆரம்பம்!

Leave a comment
Upload