தொடர்கள்
கதை
கருப்பே துணை - சிறுகதை - பா. அய்யாசாமி

20241127231739930.jpeg

கருப்பே துணை - பா. அய்யாசாமி

கல்யாணத்திற்கு நாள் நெருங்கி வருது, வங்கிக்குப் போய்ப் பார்த்து பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். வெளியூரில் வேலைப் பார்க்கும் தன் மகனிடம் எப்படியாவது தோது செய்து ஒரு லட்ச ரூபாயாவது அனுப்பி வையுடா, மீதி செலவை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லியும் பய சல்லிக் காசு அனுப்பலை. பெண்ணின் திருமணச் செலவிற்கு தொகை குறைவால் மனம் வெதும்பி இருந்தார், என்னாவாக இருந்தாலும் இரண்டாம் தாரத்து மகதானே, நம்ம சொந்த தங்கை இல்லை நாம ஏன் செலவு செய்யனும் என்று நினைக்கிறான் போல என நினைத்து தினமும் வங்கிக்குச் செல்வதும் வராத பணத்தை எண்ணி தன் வறுமையினால் இயலாமையை நினைத்து ஏமாந்து மனத் தளவில் ஏங்கிப் போயிருந்தார் மணியன். இன்றும் வழக்கம் போல் வங்கி வந்து ஏமாற்றத்தோடு திரும்பி வரும் வழியில், கருப்பு நிறத்தில் லெதர் பேக் ஒன்று சாலையில் கிடந்ததைக் கண்டு கையில் எடுத்தார்.

அதன் ஜிப் திறந்தே இருந்ததைப் பார்கையில் அதில் ஒன்றுமில்லை. ஜிப் போட்டுமூடியிருந்த நடுப்பகுதி்யை திறந்துப் பார்த்தபோது இரண்டு புத்தம் புதிய ஐநூறு ரூபாய் கட்டுகள்.அவற்றைப் பார்த்ததும் வியரத்தது மணியனுக்கு சுற்றும் பார்க்கையில் ஓரிருவர் தூரமாக சென்றுக் கொண்டிருந்தனர், யாருதோ தெரியலையே,என்ன தேவைக்கு வைத்திருந்தார்களோ, இதை யாரிடம் கொடுப்பது வங்கியிலா ? போலீஸிடமா ?என யோசித்தது நேர்மையான ஒரு மனம், தானே வைத்துக் கொண்டால் என்ன ? என யோசித்தது வரியவனாக ஒரு மனம்.

குளத்தில் எறிந்த கல் போன்று கலங்கியது மணியனின் மனம், அறிவுக்கும், ஆசைக்கும் நடந்தப் போராட்டத்தில் சராசரி மனிதானான மணியத்தின் மனத்தில் எழுந்தஆசையே வென்றது. அது துன்பத்தை தரப்போகிறது என அறியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு கைப்பையை அங்கேயே விட்டெறிந்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். ஐயா, என்னோட கைப்பையை காணலை, வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில் எங்கோ வண்டியிலிருந்து விழுந்திருக்கு திரும்பவும் போய் தேடிப்பார்த்தும் கிடைக்கலை என்று காவல் நிலையத்தில் புகார் செய்துக் கொண்டிருந்தார் நெல் வியபாரி முத்தையா.
எங்கே,எப்பொழுது எவ்வளவு என விபரமாக சொல்லுங்கள் என விசாரித்த காவல் ஆய்வாளர், என் கூட வங்கிக்கு வாங்க என அழைத்துப்போனார். சென்ற இடத்தில் விசாரித்துவிட்டு சிறிது தூரத்தில் உள்ள CCTV புட்டேஜ் பதிவுகளை ஆராய்ந்த போது தரையிலிருந்து குனிந்து கைப்பையை எடுக்கும் மணியனை கச்சிதமாக அடையாளம் காட்டியது அது. யார் என விசாரித்து மணியத்தை தேடிப்பிடித்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள்.


அதிலிருந்து எடுத்தப் பணமான இரு ஐநூறு ரூபாய் கட்டுகளான ஒரு லட்ச ரூபாயை ஆய்வாளரிடம் ஒப்படைத்தவர், “ஆசப்பட்டுஅதனை அடையனும்னு நினைத்தது என் தப்புதான்” என தன் தவறை ஒப்புக் கொண்டார். பெண்ணின் திருமணம் தடை படக்கூடாதே என நினைத்தேன் சபலத்தால் இப்படி ஒரு தீயச் செயலைச் செய்து விட்டேன். என்ன விட்டு விடுங்கள். அடுத்த வாரம் என் பெண்ணிற்கு கல்யாணம் வெச்சு இருக்கேன் அது இத்தனை அவமானங்களை அழைத்து வரும் என்று அப்போது யோசிக்க வில்லை ஊரிலே அவமானமாகி விடும் என கெஞ்சினார் மணியன்.

அப்போது அங்கே வந்த நெல் வியாபாரி முத்தையா மொத்தம் மூன்று லட்சம் ரூபாய். மீதி எங்கே என விசாரியுங்கள் சார் என ஆய்வாளரின் சூட்டை அதிகப்படுத்தினார். ஐயா, எனக்குத் தெரியாதுங்க அதில் இருந்தது அவ்வளவுதான் என குலதெய்வம் மீது சத்தியம் செய்தார் மணியன்.

“இதெல்லாம் நம்பாதீங்க சார் எனக்கு என் பணம் வேண்டும் என முரண்டுப் பிடித்தார் முத்தையா.

நீ பணத்தைக் கீழே தவறவிட்டுவிட்டு கொண்டு வந்து கொடுக்கிறவனை குறை சொல்லிகிட்டு இருக்கே என நெல் வியாபாரியை அதட்டினார் ஆய்வாளர்.

“ யோவ் உன்னைப் பார்த்தால் பாவமா இருக்கு, பேசாமல் எடுத்து வச்சியிருந்தால் முழுவதையும் கொடுத்து விடு உன்னை விட்டு விடுகிறேன் என்றார ஆய்வாளர். இல்லை என எத்தனைமுறை சொன்னாலும் ஏழையில் சொல் ஏறாத அம்பலம் போல என வருந்தினார். திரும்பக் கொடுத்தால்தான் உன்னை விடமுடியும் என்ற ஆய்வாளரின் நெருக்கடி வார்த்தையை நம்பி, அவமானத்திற்குப் பயந்து திருமணச் செலவிற்காக சிறுக சிறுக சேர்த்த அவரது பணம் இரண்டு லட்ச ரூபாயைக் கொண்டு வந்துக் கொடுத்தார் மணியன்.
திருமணம் என சொல்வதால் உன் மீது கேஸ் கீஸ் போடாமல் வெளியே விடுகிறேன் என எச்சரித்து அனுப்பிய ஆய்வாளருக்கு ஏதோ ஒன்று மணியனைப் பார்த்தபின்பு மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்பட்ட ஒரு தீய செயலால் மதிப்பு இழந்து மானம் இழந்து,மரியாதை இழந்து, தான் சேர்த்து வைத்த பணத்தையும் சேர்த்து இழந்து விட்டோமே என மனம் வருந்தியபடி வீடு வந்து மேற்கொண்டு செய்வதறியாமல அங்கிருந்த கயிற்றையும் மேற் கூரையை பார்த்தபடி சோகமாய் உட்கார்ந்து குலதெய்வத்திடம்

“கருப்பா இது என்ன சோதனை ?“ என வருத்தத்துடன் வேண்டியபடி இருந்தார் மணியன்.
அந்த நேரத்தில் நெல் வியாபாரியும் அவரது நணபரும் மணியனின் வீடு் தேடி வந்தனர். “ஐயா, என்னை மன்னிக்கனும்,பெருந்தன்மையாக நீங்க ஒத்துக்கொண்டு தொகையை திருப்பிக் கொடுத்தீங்க. ஆனால் நான் சந்தேக புத்திகாரன், தீர விசாரிக்கச் சொல்லாமல் நீங்கதான் மொத்தப் பணத்தையும் எடுத்ததாக நினைத்து ஆய்வாளரிடம் சொல்லி அழுத்தம் கொடுத்தேன். என் பணத்தை திருடியவனை ஆய்வாளர் பிடித்து விட்டார்கள் என்னை மன்னியுங்கள் எனச் சொல்லி கையில் அவரின் பணம் இரண்டு லட்சமும், இவரின் தொகை ஒரு லட்ச ரூபாயையும் சேர்த்து மூன்று லட்சமாக கொடுத்துவிட்டு இதை வைத்து நீங்கள் கல்யாணத்தை சந்தோஷமாக நடத்துங்கள், என்னை மன்னித்துவிடுங்கள் என கூறிவிட்டு கிளம்பினர்.

இருவரையும் அனுப்பவிட்டு CCTV பார்த்த இடத்திற்கே திரும்பச் சென்ற ஆயவாளர், மணியன் குனிந்து எடுத்த அந்த கறுப்பு பேக் திறந்த நிலையில் இருப்பதையும், நடுவில் உள்ள ஜிப்பைத்தான் திறந்துதான் பணம் எடுக்கிறார், என்றறிந்து பணத்தை எவ்வாறு வைத்தீர்கள் என நெல் வியாபாரியிடம் விசாரித்ததில்,புது நோட்டு ஐநூறு ரூபாய் கட்டுகளை நடுவிலும்,

பழைய பணத்தை வெளி புறத்திலும் வைத்ததாக வியாபாரி சொல்ல இந்த இடத்திற்கும் வங்கிக்கும் இடையே உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுச் செய்தார். அதில் வேறு இரு நபர்கள் அதே பையை எடுத்துப் பார்த்து அவசரத்தில் வெளியே உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு பையை தூக்கி வீசி விட்டுப்போவதை பதிவு செய்திருந்தது.

வண்டி எண்ணைக் கொண்டு இருவரையும் மடக்கி பிடித்து வியாபாரியிடம் பணத்தை ஒப்படைத்ததும் வியாபரியின் மனசு தாளாமல் மணியன் பணத்தை திருப்பிக் கொடுக்க ஆய்வாளரையும் அழைத்தார். நீங்களே அவரிடம் சென்று சீக்கிரமாக கொடுத்து விடுங்கள் விபரீதமாக ஏதாவது நடப்பதற்குள் என்றார் ஆய்வாளர் கருப்பைய்யா.