தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

20250206162620767.jpg

விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ படங்களின் சில காட்சிகளில் புரூக்ளின் நகரின் தொங்கு பாலத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அந்தப் பாலத்தைக் கட்டி முடித்தது ஒரு பெண் என்பதும், அவர் முறையாக பொறியியல் படிக்காதவர் என்பதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அவர்தான் உலகின் முதல் பெண் தள பொறியாளராக சாதனை படைத்தவர் எமிலி வாரன் ரோபிலிங் ( Emily Warren Roebling ).

உலகத்திலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட, எஃகு கம்பியிலான நீண்ட தொங்குபாலமான புரூக்ளின் பாலத்தை மிகவும் பாடுபட்டு கட்டி முடித்தவர்

நியூயார்க் நகரத்தின் இரு பெரிய நகராட்சிகளான மன்ஹாட்டன்( Manhatten ) மற்றும் புரூக்ளின் ( Brooklyn ), கிழக்கு நதியின் (East River) இரண்டு பக்கங்களில் அமைந்துள்ளது.

இந்த இரண்டு நகராட்சிகளையும் புகழ்பெற்ற புரூக்ளின் பாலம் இணைக்கின்றது. 1869 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1883 ல் முடிக்கப்பட்டது.

இந்த பாலம் 1834 மீட்டர் நீளமுடையது. இதனுடைய கிரானைட் கோபுரம் மற்றும் தடிமனான எஃகு கம்பிகள், காண்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது .

20250206162659805.jpg

முதலில் புரூக்ளின் பாலத்தின் கட்டுமான வேலைகள் ஆரம்பித்த போது, அதன் தலைமைப் பொறியாளராக (Chief Engineer) இருந்தவர் வாஷிங்டன் ரோபிலிங் ( Washington Roebling).

பால வேலைகள் நடக்கும் போதே வாஷிங்டன் நோய்வாய்ப்பட்டதால், அவருடைய திட்டங்களை பொறியியல் படிப்பு படிக்காத அவருடைய மனைவி எமிலி, சிறப்பான முறையில் செயல்படுத்தி, பாலம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார்.

எமிலி,1843 ல் மேல் நடுத்தர வர்க்கத்தில் பிறந்தார். தன் பெற்றோருக்கு 12 குழந்தைகளில் ஒன்றாக இருந்தார். அவர், பதின்ம பருவத்தில் வாஷிங்டனில் புகழ்பெற்ற ஜார்ஜ்டவுன் அகாடமியில் வரலாறு, வானவியல், பிரெஞ்சு, அல்ஜீப்ரா ஆகியப் பாடங்களை படித்தார். 1865 ல் கட்டட பொறியாளர் வாஷிங்டன் ரோபிலிங் (Washington Roebling) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எமிலி திருமணத்திற்கு பிறகு தன் கணவருடன் ஐரோப்பா சென்றார்.அங்கு இருவரும் நவீன பொறியியல் நுட்பங்களை, முக்கியமாக நீருக்கடியில் அடித்தளம் போடுவதை பற்றிய படிப்பை படித்தனர்.

இருவரும் கட்டுமானம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, அதனைப் பற்றிய ஆராய்ச்சி செய்து, விவரங்களை தெரிந்து கொண்டு அமெரிக்கா திரும்பினர்.இவை பின்னர் புரூக்ளின் பாலத்தை அவர்கள் வெற்றிகரமாக முடிக்க உதவின.

20250206162755645.jpg

உண்மையில் புரூக்ளின் பாலம், எமிலியின் மாமனாரான ஜான் ஆகஸ்டஸ் ரோபிலிங் (John Augustus Roebling) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அவர், கட்டுமான பணியின் ஆரம்ப காலத்திலேயே பாலம் கட்டும் இடத்தில் ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதற்குப்பிறகு அவருடைய மகன் வாஷிங்டன் ரோபிலிங் தலைமை பொறியாளராக (chief engineer) இருந்தார். அவர், சில வருடங்களில் கட்டுமான பணியில் உள்ள சிக்கல்களால் பாதிக்கப்பட்டு, ரத்த அழுத்த நோயால் படுத்த படுக்கையாக ஆனார்.

இந்த நேரத்தில் எமிலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. எமிலி தன் கணவரின் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த விரும்பினார்.கணவர் சொல்லும் குறிப்புகளை குறிப்பெடுத்துக்கொண்டு, அதனை மற்ற பொறியாளர்கள் மற்றும் வேலை செய்பவர்களிடம் எடுத்துரைப்பார்.

கட்டுமான பணி சரியாக நடக்க, தினமும் அந்த இடத்திற்கு நேரில் சென்று அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.

இதற்காக, அவர் கணவரிடமிருந்து பொறியியல் அறிவுடன் கட்டட பொறியியல், கட்டுமான பொருட்களின் தன்மை,கணிதம், கேபிள் கட்டுமானம் ஆகிய பொறியியல் பாடங்களை தானே படித்தும் தெரிந்து கொண்டார்.

இவற்றால் அவர் கணவர் சொன்ன திட்டங்களை முழுமையாக புரிந்துகொண்டு,கட்டுமான வேலை செய்யும் குழுவுக்கு தெளிவாக விளக்க முடிந்தது. அவருடைய கருத்துப் பரிமாற்றத்திறன் (Communication skills) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது.

கட்டுமானப்பணியில் இருந்த சிரமங்களால் கணக்கில் அடங்கா விபத்துக்கள் ஏற்பட்டன. இவை அனைத்தையும் எமிலி சமாளித்து, தொய்வில்லாமல் வேலை தொடர வைத்தார். கட்டுமான பணியில் ஊழல் புரியும் அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற ஒப்பந்தக்காரரால் இடையூறுகள் ஏற்பட்டன.

அவருடைய கணவரை இந்த திட்டப்பணியில் (Project) இருந்து நீக்க இருந்த நிலையில், புத்திசாலித்தனமாக செயல்பட்டு அதனை தக்க வைத்துக் கொண்டார்.

பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், நகர அதிகாரிகள் மற்றும் நிதியாளர்களுடன் நடந்த கூட்டங்களில், அவருடைய கணவரின் சார்பாக எமிலி கலந்து கொண்டு, தொழில்நுட்ப கேள்விகளுக்கான பதில்களை தெளிவாக எடுத்துச் சொன்னார். நாளடைவில், அவருடைய தலைமை பண்பு மேல் அதிகாரிகளுக்கு திட நம்பிக்கை வந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமிலி உலகின் முதல் பெண் தளப் பொறியாளராக விளங்கினார் அந்நாளில் உறுதியான மனதுடன் தனித்துவமான சிந்தனையுடன் அவர் இயங்கியதால், இப்பெரும் சாதனையை செய்ய முடிந்தது. வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் கணவரை கவனித்துக்கொண்டே , கட்டுமான பணி சிறப்பாக நடக்க பாடுபட்டார்.ஒரு தலைமைப் பொறியாளர்க்குரிய தலைமைப் பண்புடன் செயல்பட்டார்

14 ஆண்டுகளில் புருக்ளின் பாலம் கட்டி முடிக்கப்பட்டது எமிலியின் கணவர் வாஷிங்டன் ரோபிலிங், கட்டி முடிக்கப்பட்ட புரூக்ளின் பாலத்தை, தன் படுக்கை அறையின் ஜன்னல் முன்னால் தொலைநோக்கி வழியாக பார்த்து மகிழ்ந்தார். எமிலி,அவருடைய கண்ணாகவும் காதாகவும் இருந்து, அவருடைய எண்ணப்படி சிறப்பாக முடித்ததை பெருமிதத்தோடு பார்த்தார்.

20250206162913457.jpg

எமிலியின் சாதனைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், பாலத்தின் திறப்பு விழா அன்று, அவரை முதல் நபராக பாலத்தை கடக்க வைத்தார்கள்.

வெற்றியின் அடையாளமாக கருதப்படும் சேவலை எமிலி கையில் எடுத்துக் கொண்டு,வண்டியில் அந்த பாலத்தை கடந்தார். அன்று, வான வேடிக்கைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாலத்தை கடந்தனர். அந்த நிகழ்வு அனைவரையும் புல்லரிக்க வைத்தது.

அன்று ஆண்கள் மட்டுமே பொறியியல் துறையின் தலைமைப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். எமிலி அந்த எல்லைகளை உடைத்தெறிந்து, தன் மேல் நம்பிக்கை வைத்து, தலைமைப்பணி ஏற்று பொறியியல் பணியை சிறப்பாக முடித்தார் அது, உலகமக்களுக்கு பெண்களின் திறன் மேல் இருந்த கண்ணோட்டத்தையே மாற்றியது.

அமெரிக்க அரசாங்கம் எமிலியை மேலும் கௌரவப்படுத்தும் விதத்தில், பாலத்தில் உலோகத் தகட்டில் அவர் பெயர் உட்பட கணவர் மற்றும் மாமனாரின் பெயரை பொறித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கீழே இருக்கும் வாசகத்தையும் அதில் காணமுடிகின்றது.

“Back of every great work, we can find the self-sacrificing devotion of a woman”

ஒவ்வொரு சிறப்பான பணிக்கு பின்னால், சுய தியாகத்துடன் அர்ப்பணிப்பு செய்யும் பெண் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.

உண்மைதான். அன்று முதல் இன்றுவரை பெண்கள் தன்னலம் பார்க்காமல் பல தியாகங்களை புரிந்து கொண்டு அதிகம் பாராட்டப் படாமல் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த பெண்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சல்யூட்.

ஒரு பெண் தன்னுடைய வலிமையை உணர்ந்தால், யாராலும், எதனாலும் தடுக்க முடியாத பேராற்றலாக அவள் உருமாறுகிறாள் என்பதற்கு எமிலி ஓர் எடுத்துக்காட்டு.