சுயக் கட்டுப்பாடே சுகம்!
இன்று தற்கட்டுப்பாடு (Self discipline) எனும் மந்திரக்கோல் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இந்த மந்திரக்கோல் மாயங்கள் செய்யவல்லது. வெற்றியாளர்களுக்கும்; திறமைகள் இருந்தும் வெற்றிகனியை பறிக்க இயலாது துவள்பவர்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை சுய கட்டுப்பாடே தீர்மானிக்கிறது.
அது என்ன நமக்கு கட்டுப்பாடுகள்? எதனால் நம்மீதே அவற்றை நாம் சுமத்திக் கொள்ள வேண்டும்? நினைத்த வண்ணம் வாழும் சுகத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் தடையாகாதா? அவை தேவைதானா? இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில்:
‘ஆம்! சுய கட்டுப்பாடு மிக அவசியத் தேவை’ என்பதே!
இயல்பாகவே நம் மனமும் குணமும் எப்போதும் சொகுசான நிலையில் இருக்கவே ஏங்குகிறது. வெற்றிகளும் பலன்களும் எந்தவித பிரயத்தனமுமின்றி தாமே நம் மடியில் வந்து விழ வேண்டும் என விழைகிறது.
நம் செயல்பாடுகளில், குறுக்கு வழிகளையும் சுலபமான முறைகளையும் மட்டுமே மேற்கொண்டுவிட்டு நம்மைத் தளர்த்திக் கொண்டு விடுகிறோம். முனைப்புடனான செயலூக்கம் என்பது, நம்மை வருத்திக் கொள்வதாக நாமே ஈடுபடுவது என்று கற்பிதம் செய்து கொள்கிறோம்.
குறைந்த அளவே உழைப்பைச் செலுத்தி, குறுக்கு வழியில் முனைந்து, மனம் களிகொள்ளும் விஷயங்களையே தூக்கிப் பிடித்து வாழ்தல் எவ்வளவு தூரம் நம்மை முன்னேற்றும்? இதற்காக தாற்காலிக திட்டங்களை மட்டுமே மேற்கொண்டு செயல்படுதல் எவ்வளவு தூரம் பயன் தரும்?
ஆனால், வெற்றியாளர்களின் ராஜபாட்டையோ வளைவுகள் அற்றது. தீவிரமான முனைப்பையும் தொடர் உழைப்பையும் கோருவது. ஒவ்வொரு கல்லாக, கல் மேல் கல் பொருத்தி நிர்மாணிக்கப்படும் கோட்டையது.
தொலைநோக்குடன் நீண்ட கால பயன்கருதி நன்கு திட்டமிட்டு நாமே மேற்கொள்வது.
‘அய்யே மெத்தக்கடினம்’ என்று மனம் தவிர்க்கப் பார்க்கும் வழி பிந்தைய வழிதான். ஆனால் அது ஒன்றுதான் நீடித்த பலன் தரவல்லது.
இவ்வாறான நீண்ட காலப் பயன் தரும் தொலைநோக்கு பார்வையை மேற்கொள்ள எது நம்மை தடுக்கிறது?
கட்டுப்பாடுகளற்ற நம் செயல்முறைகள் தான்! ஒரு ஒழுங்கில் செயல்பட முனையாமல், சுகம் கருதி மரவட்டை போல் சுருண்டு கொள்ளும் நம் மனநிலை தான்!
நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள முதல் வழி..... என்ன விதம் செயல்பட வேண்டும் என முதலில் உறுதி கொள்வது தான்.
ஒரு சின்ன பூஜைக்கு கூட, இந்த பலன் கருதி, இன்னின்ன மந்திரங்கள் சொல்லி, இந்த தெய்வத்தை இந்த விதம் உபாசிக்கிறேன்’ என்று தெளிவுடன் சங்கல்பம் என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டு பூஜை தொடங்குகிறோமே......
நம் எல்லா செயல்களிலும் அவ்விதமான சங்கல்பத்தால், செய்யப்போவதை நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்வதில் தொடங்க வேண்டும்.
ஒரு செயலை செய்து முடிக்க தினம் அதிகாலை 5 மணிக்கு எழுந்துகொண்டு அதில் ஈடுபட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
நம் மனதிற்கு பழகிய துயிலெழும் நேரம் Early Morning 8 O’CLOCKஎன்று இருந்தால், நாம் சீக்கிரம் எழும் உறுதியுடன் படுத்து, முயன்று காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து செய்ய வேண்டிய வேலையைப் பார்க்க வேண்டும்.
ஆனால் நம் மனம் கெஞ்சும். இன்னும் கொஞ்ச நேரம் உறங்குகிறேன் என தாவங்கட்டையைப் பிடித்துக் கொண்டு இறைஞ்சும். நாளை முதல் அதிகாலை எழலாமே எனச் சலுகை கேட்கும்.
இந்தக் கட்டமே பலவீனமான தருணம். நான் சற்று தளர்ந்து மனதின் மாய்மால விண்ணப்பங்களைச் செவிமடுத்தால், கண்டிப்பாக நாம் மேற்கொள்ள நினைத்த செயலை நாம் செய்யப் போவதில்லை!
இவ்வாறன்றி, சட்டென அந்த எண்ணங்களை உதறிவிட்டு, மனதை ’உனக்காச்சு எனக்காச்சு’ என்று ஒரு கை பார்ப்பவர்களே வெற்றியின் முதல் படியில் கால்களைப் பதிக்கிறார்கள்.
சில நாட்கள் உறுதியுடன் இவ்விதம் செயல்படுவதில், மனமும் இதையே தன் வழக்கமாக்கி கொண்டு விடும்.
‘இதுதான் நான்!’ என்று சுருண்டு கிடந்த மனம், ‘இதுவும் நான் தான்!’ என்பதைப் புரிந்து கொள்கிறது.
‘இனிமேல் நான் இப்படித்தான்!’ என்று உறுதியும் கொள்கிறது. நல்லதோர் முன்னேற்றத்துக்கான கட்டியம் இவ்விதம் முரசறையப் படுகிறது.
நீண்டகாலப் பயன்களுக்கான திட்டமிடலில், சுயக் கட்டுப்பாடு தவிர்த்து வேறேது வேண்டும்? நம்மிடம் இருப்பதைக் கொண்டு, நம்மாலியன்றதை முழுமூச்சுடன் செய்யும் மனவுறுதியே ஆரம்பம்.
எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் உழைப்பும், சறுக்கல்களும், அவமானங்களும், வலிகளும் இருக்கவே செய்கின்றன. வெற்றியை எய்தியபின், இவையாவும் ஒரு பொருட்டாக எஞ்சுவதில்லை.
தொடங்கிய செயலைச் செய்து முடிக்கும்வரை சுணக்கம் கொள்வது கூடாது.
நம் நேரத்தை வீணடிக்கும் கேளிக்கை களியாட்டங்களைத் தவிர்த்தல் அவசியம்.
பெரிதினும் பெரிது கேட்கும் ஆர்வம் கொள்ள வேண்டும். பெரியனவற்றை அடைய, நம் செயலும் முனைப்பும் பெரியதாக அல்லவா இருக்க வேண்டும்?
திறந்த மனதுடன், நேர்மறை சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும்.
நாம் நாமாக இருத்தலும், நம்மேல் நம்பிக்கை கொள்ளலும் முக்கியம். இயற்கையின் நியதி தெளிவானது. எந்தப் பூட்டும் சாவியின்றி தயாரிக்கப் படுவதில்லை. எந்த நெடிய இரவும் விடியாமல் போவதில்லை. தீர்வுகளற்ற பிரச்னைகளென்று எதுவும் இல்லை.
செப்பனிடப்படாத பாதையில் பயணம் செய்ய வேண்டிவந்தால், அங்கு ஒரு சாலை அமையும் வரையில் காத்திருக்க வேண்டுமா என்ன? தரமான செருப்பணிந்து கவனமாகப் பயணம் துவங்கினால் போதுமே?!
தீர்க்கமுடிந்த பிரச்னைகளைப் பற்றி கவலை கொள்வது அவசியமில்லை. அதே விதம், தீர்வேயில்லாத பிரச்னைகளுக்காக மனம்மறுகி அங்கேயே நிற்பதும் அறிவுடையோர் செயல் அல்லவே? எதிர்கொள்ளும் சோதனைகளே நம்மைப் புடம்போடும்.
சிந்தனையில் தெளிவு அவசியத் தேவை.
‘நாம் இப்போது எங்கிருக்கிறோம்?
எங்கு செல்ல விழைகிறோம்?
எப்படி அங்கு சென்று சேரப்போகிறோம்?’
இவ்வளவே முடிவு செய்ய வேண்டுவன.
விரும்புகின்ற உயர்ந்தநிலை கடுமையான உழைப்பைக் கோரலாம். புதிய இலக்கை நோக்கி முன்னேற, உடனிருப்பவர்கள் தயங்கலாம். செயல்முறைகளை அடியோடு மாற்றிக் கொள்ளவேண்டி வரலாம். அதற்கான சூழலை உருவாக்க சிரமங்கள் இருக்கலாம். இருக்கட்டும்… விடாது முயல்வோம். தளராது சுயக்கட்டுப்பாடுடன் முன்னேறுவோம். புதிய இலக்கை மட்டுமே சந்தித்திருப்போம்.
‘எந்தேரமும் நம்மை எதுவாக எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்’ என்பார் Dr D.J. ஸ்க்வார்ட்ஸ்.
நினைத்தவை நினைத்தபடியான நிலை வந்தெய்தும் பராபரமே!
Leave a comment
Upload