(இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கும் போது எடுத்த படம்)
ட்ரம்ப் நல்லவரா கெட்டவரா? இதற்கான விடை போக போகத்தான் தெரியும். ஆனால் பல சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் அவரை ஒரு 'சைக்கோ' என்றே அழைக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும், அமெரிக்காவிற்கும் தற்போது ஒரு ஒற்றுமை நிலவுகிறது.
அமெரிக்கர்களின் உரிமையை காப்போம் என்று டிரம்ப் அங்கே சர்வதேச நாடுகளை எதிர்த்து அரசியல் நடத்துகிறார். 'தமிழ்நாடு தமிழர்களுக்கே' என்று ஒரு காலத்தில் இங்கே அறைகூவல் விட்டது போல, 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்று இப்போது ட்ரம்ப் கூச்சலிடுகிறார்.
உலக நாடுகள் இதுவரை தங்கள் நலனுக்காக அமெரிக்காவை வர்த்தகரீதியாக சுரண்டிக்கொண்டிருந்ததை இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டு விட்டு அதன் தொடர்ச்சியாக பலமுனை வர்த்தக தாக்குதல்களை தொடங்கியுள்ளார் டிரம்ப்.
இதற்கு முன்னோடியாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அதிரடியாக அவரவர்கள் நாட்டிற்கே வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி கொண்டிருக்கிறார். இதில் இந்தியர்களும் அடக்கம்.
இதுவரை 332 இந்தியர்கள் அமெரிக்க விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 2,20,000 இந்தியர்கள் அங்கே சட்ட விரோதமாக குடியிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்களால் அமெரிக்கர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்து இருக்கிறார்.
ட்ரம்பின் மிகப்பெரிய அஸ்திரம் Tariff என்று அழைக்கப்படும் இறக்குமதி வரி. இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அமெரிக்காவின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்காவிலும் பல தரமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன தரை வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், ரசாயன பொருள்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பல இயந்திரங்கள், மருத்துவ சாதனங்கள், மருந்து வகைகள் மற்றும் உணவுப் பொருள்கள் உட்பட பல பொருள்கள் அமெரிக்காவில் தயாராகின்றன.
அமெரிக்காவை நாம் ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். பல பொருள்கள் தரமான முறையில் தயாரிக்கப்பட்டாலும் எல்லா பொருள்களையும் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வாய்ப்பையும் அமெரிக்கா அளித்தது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தயாரிப்பு செலவு குறைவாக இருப்பதால் அமெரிக்கா அவர்களிடம் விற்பனையில் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டு அமெரிக்காவின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரம் பெரிய சரிவை வருடக் கணக்கில் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இறக்குமதியை ஏன் அமெரிக்கா அனுமதித்தது? அமெரிக்கர்களுக்கு குறைந்த விலையில் பலதரப்பட்ட சர்வதேச பொருள்களும், சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால் தான் தாராள இறக்குமதி கொள்கையை அமெரிக்கா கடைபிடித்தது. இதில் குறிப்பாக மெக்சிகோ (50,000 கோடி) சைனா (462,000 கோடி) கனடா (420 00 கோடி) டாலர்கள் மதிப்புள்ள பொருள்களை கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா வெறும் 91 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த வருட புள்ளி விவரம்.
அமெரிக்காவும் தங்கள் தயாரிக்கும் பொருள்களை உலகில் 200 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்கிறது. இருந்தாலும் அமெரிக்காவின் ஏற்றுமதி குறைவாக இருப்பதால் கடும் பற்றாக்குறையை அமெரிக்கா தற்போது சந்தித்து வருகிறது. குறிப்பாக சைனா மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் மூலமாக அமெரிக்காவுக்கு பெரும் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக பற்றாக்குறையில் 41% இந்த மூன்று நாடுகளினால் மட்டுமே ஏற்பட்டுள்ளது ட்ரம்பின் கொலை ' வரி' த் தாக்குதலுக்கு இதுவே முதல் காரணம்.
இந்த வருடம் இந்த மாதம் இரண்டாம் தேதி ட்ரம்ப் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். ஏப்ரல் 5ம் தேதி முதல் எல்லா இறக்குமதி பொருள்களுக்கும் 10% வரி விதிக்கப்படும். ஏப்ரல் ஒன்பதாம் தேதியிலிருந்து 57 நாடுகளுக்கு 11 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் உடனே ஒரு அந்தர் பல்ட்டி அடித்து இந்த வரி விதிப்பு அமல்படுத்துவதை சைனா தவிர மற்ற எல்லா நாடுகளுக்கும் நிறுத்தி வைத்தார். சர்வதேச நாடுகள் இதை கடுமையாக எதிர்க்கவே உலக பங்கு சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கிறது.
இப்போது ஒரு வர்த்தக யுத்தம் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இது ஒரு நீயா? நானா? பிரச்சினையாகி விட்டது. அமெரிக்காவிலிருந்து சைனாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 34 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என சைனா அறிவித்துள்ளது 'ஓ! அப்படியா இந்தா புடி...' என்று சைனாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் பொருள்களுக்கு இனி 104 சதவீதம் வரி என்று அறிவித்தார் ட்ரம்ப்.
உடனே இதோ என்னுடைய புதிய அஸ்திரம் என்று சொல்லி இனி அமெரிக்க பொருள்களுக்கு 84 சதவீதம் இறக்குமதி வரி என கிடுக்கிப் பிடி போட்டது சைனா.
அமெரிக்கா சைனா வர்த்த யுத்தம் இத்துடன் நிற்கவில்லை. இனி சைனா பொருள்களுக்கு 125 சதவீதம் வரி என்ற நாகாஸ்திரத்தை ரிலீஸ் செய்தார் ட்ரம்ப்.
ஐரோப்பாவிலும் ட்ரம்புக்கு எதிர்ப்பாலை கிளம்பியுள்ளது. இதைத்தவிர கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளும் அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பை ஏற்றி தங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கின்றன. ஆனால் சில நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக சமாதான பேச்சை தொடங்கியிருக்கின்றன. ஜப்பான், வியட்நாம், தெற்கு கொரியா போன்ற நாடுகள் பேரம் பேச தொடங்கி இருக்கின்றன.
மீண்டும் சீனா உலோக ஏற்றுமதியை நிறுத்தி வைக்க, தற்போது 245% சீனாவிற்கு வரி விதித்திருக்கிறார் டிரம்ப். 245 நாட் அவுட். இந்த இதழ் வலையேறும் வரை....
ட்ரம்பின் அதிரடி தாக்குதலை இந்தியாவிற்கு சாதகமாக திருப்பிக் கொண்டிருக்கிறார் மோடி. முதலில் இந்திய பொருள்களுக்கும் 26 சதவீதம் வரிவிதிக்கப்பட்டு பின் இது 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இந்திய பொருள்களுக்கு 10% வரிவிதிக்கப்படுகிறது அமெரிக்காவில் பெருமளவில் இறக்குமதியாகும் 30 பொருள்களில் 10 பொருள்கள் இந்தியாவினால் சகாய விலையில் ஏற்றுமதி செய்யப் பெரும் வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவின் ஆடை பொருட்கள் இறக்குமதியில் 25 சதவீதம் சைனாவில் இருந்து இறக்குமதியாகிறது. இந்தியா 3.8% தான் அமெரிக்க இறக்குமதியில் பங்கு வகிக்கிறது. கடும் வரி உயர்வு இருப்பதால் இந்தியா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயனடையலாம்.
ஆனால் நம்ம ஏற்றுமதியாளர்கள் அரைகுறை ஊடகத்தின் உதவியோடு அட, இனிமே நமக்கு வரி குறந்து விட்டது என்று குதூகலிக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர்களுக்கு புரியவைப்பதற்குள் டிரம்பே தோற்று விடுவார். 10 சதவிகிதம் என்பது ஏற்கனவே இருக்கும் சுங்க வரிக்கு கூடுதல் வரி. இனி 10 தான் என்றில்லை. எனவே இது சாதகமான விஷயமல்ல.
பக்கத்து வீட்டிலும் கரண்ட் போனால் சந்தோசம் போல அடுத்த நாடுகளுக்கு நம்மை விட அதிக வரி என்னும் போது வரும் சந்தோசம் மட்டுமே தற்காலிக நிம்மதி.
இதேபோல் 90 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மின்னணு பொருள்களை சைனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இது அமெரிக்க மின்னணு இறக்குமதியில் 50% ஆனால் இந்தியாவின் பங்கு வெறும் ஏழு சதவீதம் தான். இந்த சந்தர்ப்பத்தையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். இதைத் தவிர ஜெம்ஸ், தங்க நகைகள், இரும்பு மற்றும் ஸ்டீல் பொருள்கள் ஏற்றுமதி அதிகரிக்கவும் இந்தியாவிற்கு வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவின் சீன எதிர்ப்பு கொள்கை தொடர்ந்தால் இந்தியா மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் ஆனால் ட்ரம்ப் நாளுக்கு நாள் தன் உத்தரவுகளை தானே மாற்றிக் கொண்டிருக்கிறார் ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்குமா என்றால் அது சந்தேகத்திற்குரியது.
மற்ற நாடுகளிலிருந்து வரும் பொருள்களின் விலை இந்த வரிவிதிப்பினால் கடுமையாக உயரலாம். இதுவரை குறைந்த விலையில் வாங்கிய பொருள்களுக்கு அமெரிக்க மக்கள் கூடுதலாக டாலர் கொடுக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக எல்லா இறக்குமதி பொருள்களுக்கும் வரி விதித்திருப்பதால் அமெரிக்காவில் தயாராகும் பொருட்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்றாலும் எல்லா பொருள்களையும் அமெரிக்கா உடனடியாக தயாரிக்க முடியாது. சைனா, மெக்ஸிகோ மற்றும் கனடாவை பணிய வைப்பது டிரம்பின் நோக்கமாகத் தெரிகிறது இந்த வர்த்தக யுத்தம் தொடர்ந்தால் அது உலக நிதி நிலைமையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
டிரம்ப் இன்னும் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
தன் உத்தரவுகளை தானே அடிக்கடி மாற்றுவது, அண்டை நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வது, பல ஆண்டுகளாக அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருந்த அயல் நாட்டு மக்களின் குடி உரிமையை மறுபரிசீலனை செய்வது என்று எல்லா நடவடிக்கைகளுமே அள்ளித்தெளித்த அவசர கோலமாகவே தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்...
Leave a comment
Upload