பக்தி என்பது நாம் பகவானிடம் நம்பிக்கை வைத்து அவர் பாதம் சரண் அடைவது. பக்தியினால்தான் மனிதன் தனது ஜனன, மரணம் என்கின்ற பிறவிக்கடலில் இருந்து கரையேற முடிகிறது. பக்தி, பரமாத்மாவின் தத்துவத்தை மனிதன் புரிந்துகொள்ள முயற்சிக்க செய்கிறது. முன்னோர்கள் பக்தியை முக்கியமானதாகக் கருதியது மட்டுமின்றி, வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் என்றும் வாழ்ந்து காட்டினர். பகவானிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்பது அவசியமில்லை.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இறைவனைக் குழந்தையாகவும், தோழனாகவும், தாசனாகப் பாவித்து தனது பக்தி கொள்வார்கள். மேலும் சிலர் இறை நாமத்தைச் செவிகளில் கேட்டுக்கொண்டும், நாவினால் பாடியும் தனது பக்தியை வெளிப்படுத்துவர். இதைத்தவிரத் தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பவரும் உண்டு.
“நவதா பக்தி"
“ஶ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்.”
ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி பக்தி ஒன்பது வடிவங்கள் உள்ளன; இவை "நவதா பக்தி" என்று அழைக்கப்படுகின்றன.
பகவானிடம் செய்யப்படவேண்டிய பக்தி ஒன்பது விதமானது.பகவானது மஹிமையை ஶ்ரத்தையுடன் கேட்பது;
அதை வாயாரச் சொல்வது; அவரை மனதில் நன்கு நினைப்பது; அவரது திருவடிகளில் சேவை செய்வது ; அவரை அர்ச்சிப்பது; சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது; செய்யும் கர்மாக்களை அவருக்கே அர்ப்பணம் செய்வது; அவரிடம் நட்பு கொண்டாடுவது ;தன்னையே அர்ப்பணிப்பது. ( அவரையே சரணடைந்து தன்னைப்பற்றி கவலையில்லாமல் இருப்பது ).
நவதா பக்தியின் ஒன்பது செயல்முறைகள்:
ஶ்ரவணம் - இறைவனின் நாமங்களையும் மகிமைகளையும் கேட்பது. உதாரணமாக, வால்மீகி முனிவர் 'நாரதர்' மூலமாக ஸ்ரீ ராமனைப் பற்றி அறிந்ததைக் கேட்டு பக்தியுற்றதை சொல்லலாம். அதே போலப் பக்தன் பிரகலாதனின் பக்தியைச் சொல்லலாம்.
கீர்த்தனம் - அவரது மகிமைகளைப் பாடுதல். உதாரணம், ஸ்ரீ தியாகராஜர் எழுதிய தியாக ராஜ கீர்த்தனைகளைச் சொல்லலாம்.
ஸ்மரணம் - இறைவனை நினைவு கூர்தல். உதாரணமாக, வடக்கே மீரா பாய் மற்றும் தெற்கே ஆண்டாள் 'கண்ணன்' மீது கொண்ட பக்தியைச் சொல்லலாம்.
பாதஸேவனம் - இறைவனின் பாதங்களைச் சேவித்தல். உதாரணமாக, இராமாயணத்தில் பரதன் ஸ்ரீ ராமனின் திருவடிகளைப் பூஜித்ததைச் சொல்லலாம்.
அர்ச்சனம் - பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது. உதாரணமாக, பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில் பிரசித்தி வாய்ந்து, இறை அருள் பெற்றவர்.
வந்தனம் - பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது. கண்ணனை வணங்கித் தனிப் பெருமையை
கண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.
தாஸ்யம் - இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணி விடை செய்தல் "தஸ்யம்" ஆகும். அப்பர் செய்த உளவாரப் பணியை உதாரணமாகச் சொல்லலாம்.
ஸக்யம் - இறைவனைத் தோழனாக நினைத்துப் போற்றுவது - சுந்தரர்
ஆத்ம நிவேதனம் - இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல். வள்ளலார் ஒளி வடிவாய் இறைவனைச் சேர்ந்ததைச் சொல்லலாம். எனினும், இது எல்லோருக்கும் சாத்தியம் அற்றது. யோகத்தின் மூலமாகவே இதைச் செய்ய இயலும்.
இராமாயணத்தில் ஒன்பது வகையான பக்திக்குச் சிலர்:
ஶ்ரவண பக்தி - ஆஞ்சநேயர் - எப்பொழுதும் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.
கீர்த்தன பக்தி - வால்மீகி மகரிஷி - ஸ்ரீராமனின் வாழ்க்கையைக் கோகிலமாய்க் கீர்த்தனம் செய்து ராம காவியத்தை அளித்தவர்
ஸ்மரண பக்தி – சீதா பிராட்டி – ஸ்ரீராமனையே நினைவில் நிறுத்தித் துதி செய்து. அசோக வனத்தில் அமைதியாகத் தவம் இருந்தார்
பாதஸேவன பக்தி - பரதன் - ஸ்ரீராமனின் பாதுகைகளையே இராமனாக நினைத்து அவரின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தார்
அர்ச்சன பக்தி – சபரி – பல ஆண்டுகளாகத் தினமும் ஸ்ரீராமனுக்காகக் காத்திருந்து, நல்ல பழங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பழத்தையும் தானே கடித்துப் பார்த்து அளித்தவர்.
வந்தன பக்தி – விபீஷணன் – இராவணனின் தம்பியானவன், சரணாகதித் தத்துவத்தை மேற்கொண்டு ஸ்ரீராமனின் அடி பணிந்து வணங்கியவர்.
தாஸ்ய பக்தி – லக்ஷ்மணன் – ஸ்ரீராமனுக்குத் தொண்டு புரிவதே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு பணிவிடை செய்து அவரது சொற்படி நடந்தவர்.
ஸக்ய பக்தி – சுக்ரீவன் – ஸ்ரீராமனுடன் நட்பு கொண்டு, சேது அணைக் கட்டி , பல்லாயிரக்கணக்கான வானரப் படையுடன் பக்தி பூர்வமாய் போர் புரிந்தவர்
ஆத்ம நிவேதன பக்தி - ஜடாயு - இராவணனிடம் இருந்து சீதையைக் காப்பாற்ற முயன்று, பின்னர் இராமனிடம் தனது உயிரையே ஈந்து ஆத்ம சமர்ப்பணம் செய்தவர்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதி: -பகவத்கீதை
பகவான் நம்முடைய ஆத்மார்த்தமான பக்தியை மட்டுமே விரும்புகிறார். உள் அன்புடன் பகவானுக்கு ஒரு பூவையோ, பச்சிலையோ அல்லது தண்ணீரையோ சமர்ப்பித்தால் மட்டும் போதும். நம் கோரிக்கைகளைப் பகவான் ஏற்றுக் கொள்வார்.
நாம் பலவிதமான பக்தியை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் மனதார பகவானை நினைத்து அவர் அருளினை பெறுவோம்!!
Leave a comment
Upload