தொடர்கள்
வலையங்கம்
ஏனோ தானோ கணக்கெடுப்பு வேண்டாம்

20250410081933999.jpeg

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. . இந்த அறிவிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பெருமை பேசுகின்றது ஒரு புறம் இருந்தாலும் எப்போது மக்கள் தொகை கணக்கு எடுப்பு என்று இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

அரசியல் கட்சிகள் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டுமென்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதில் உள்ள முக்கிய பிரச்சினைகளை கவனிக்க தவறிவிட்டது. உதாரணமாக ஒரு மாநிலத்தில் ஓ பி சி பிரிவில் இருப்பவர் இன்னொரு மாநிலத்தில் ஓசி பிரிவில் இருப்பார். ஒரு மாநிலத்தில் ஓபிசி பிரிவில் இருப்பவர் இன்னொரு மாநிலத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் இருப்பார். எனவே இது போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன செய்வது என்று தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பிறகு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இட ஒதுக்கீடுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பை பயன்படுத்தினாலும் இப்போதைய சூழ்நிலையில் தமிழகம் போன்ற சில மாநிலங்கள் 69 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியும். அப்போது இதுவரை இட ஒதுக்கீடு பெறாத ஜாதிகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. அரசியல் அவசரங்களுக்காக ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று மத்திய அரசு ஏனோ தானோ என்று செய்யக்கூடாது. கடினம் தான். ஆராய்ந்து செய்ய வேண்டும்.