தொடர்கள்
கதை
தேவை -கவிதாஇராஜகோபாலன்

20250512152834578.jpg

' என் ப்ரெண்ட் ரமாவோட பாஸ்டன் கஸின் வீட்ல தோஸா மேகிங் மிஷின் இருக்காம்' செய்தி வாசிப்பு தொடங்கிவிட்டது சந்துருவின் வீட்டில்... தட்டில் சுடசுட தோசையோடு.. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயண்ஸ்வாமீ.. ஸாரி... சாரதா சந்திரன்...
போனுக்குள் மூழ்கி தோசையை பிய்த்தவன்,' அதற்கு என்னவாம்?' என்பது போல் பார்த்தான்.
' இங்க பட்டர்ப்ளைலயே கெடைக்கறதாம்... இப்படி நின்னு கால் வலிக்க வேணாம்'...
' சரி தான நான் சொல்றது'
' மெஷினே மாவு ஊத்திக்குமா' வாய் வரை வந்ததை தோசையோடு விழுங்கினான்.

கிச்சனுக்கு போய் அடுத்த தோசையோடு திரும்பியவள், ஆலாபனையை தொடர்ந்தாள்,
'அந்த அப்பார்ட்மெண்ட்காரங்க எதிர சாக்கடகிட்ட சாப்பாட கொட்றாங்களே... குப்ப, சாப்பாடு எல்லாம் அடச்சிகிட்டா? மழக்காலம் வந்தா தான் தெரியும்' பொருமலோடு ஜன்னல் வழியாக பார்த்ததற்கான ஜர்னலிச ரிப்போர்ட்.
போனும் தோசையுமாய் தலையை ஆட்டி வைத்தான்.
' என்ன தலையாட்டறீங்க?' தலையாட்டல் போதவில்லை அவளுக்கு.
'சரி'
' என்ன சரி'
' நீ சொன்னது'
போன வாரமே சிஎம் செல்லில் தான் இதை பற்றி கம்ப்ளெயிண்ட் செய்ததை பற்றி வாயே திறக்கவில்லை.
( திறக்க விட்டால் தானே!?)
யூடியூபில் ஸ்க்ரோலினான்..
நடந்தபடி ஓரக்கண்ணில் பார்த்தவள்,' சசிதரூரர அவர் பையனே பேட்டி எடுக்கறான், இதெல்லாம் பப்ளிஸிட்டி ட்ரெண்டிங்'
'சசிதரூரையுமா?' பரிதாபமாய் நிமிர்ந்தான்.. அவள்பாட்டுக்கு கிச்சன்சென்றவள் யூடெர்ன் அடித்தாள்,
'நேத்து ரம்யா வாலிபால்ல கப் வின் பண்ணத க்ரூப்ல போட்டா, உங்க சித்தி பொண்ணு ஜெயந்திவெறும் லைக் போட்டிருக்கா... அந்த சித்ரா ரியாக்ட் கூட பண்ணல.. வாழ்த்துக்கள்னு போட்டா என்னவாம் இவங்களுக்கெல்லாம், என்ன நான் சொல்றது'
' யாருக்கு என்ன அவசரமோ' சொல்லத்தான் வந்தான் சந்துரு,' ஒண்ணும் சொல்றதுக்கில்ல' மாற்றி சொல்லிவிட்டு நகர்ந்தான்.
வதங்கும் கோவைகாய்க்கு கடலை பொடி தூவி இறக்க போய்விட்டாள் சாரதா.

அறிவிப்பின்றி அடுத்த சுனாமி வருவதற்குள் முகத்தை மறுமுறை கழுவி, .
ட்ரெஸ் செய்து டைனிங் டேபிளுக்கு வந்தான்.
சின்ன வெங்காயம் சாம்பார், கோவக்காய் பொரியல், சாலட், முறுக்கு வத்தல் எல்லாம் டப்பாக்குள் அடைந்து, அவனுக்காய் காத்திருப்பில்.
எல்லாம் முடித்த ஆஸுவாசத்தில் கையில் ரெண்டாம் காபியோடு போனை எடுத்தபடி சாரதா.
ஹாட்பேக்கை அவன் கையில் குடுத்து போனை பார்த்தவள்,' அட, கோவர்தன் மாமா வாழ்த்துக்கள்னு போட்டிருக்கார் பாருங்க' குரூப் சாட்டை பார்த்து குதிக்கும் சிரிப்போடு சாரதா.
' எதுக்கும் சித்ராக்கு நானே கால் பண்றேன், என்ன பிஸியோ என்னவோ' சொல்லிக் கொண்டே ஸோபாவில் அவளும், ஷூ போட்டபடி அவனும்.

டேபிளிலிருந்த போனை எடுத்து கையில் குடுத்தாள்,' அந்த பேட்டிய முழுசா பார்த்தீங்களா, பையன் கேக்கற கேள்வியும், அவர் பதிலும்.. ஸிம்ப்ளி சூப்பர்'
' முழுசா பார்க்க விட்டாதானே' உள்ளே புலம்பலோடு வெளியே தலையாட்டினான், போய்ட்டு வரேன் என்பதற்கும் சேர்த்து....
படியிறங்க தொடங்கினான்,
' எந்த மெஷின் இருந்தாலும் தோச நடந்தா டேபிளுக்கு போகும்?'
தனக்கு தானே பேசிக் கொண்டு உள்ளே செல்லும் அவளை சற்றே திரும்பிப் பார்த்தான்.
வண்டியருகே வந்ததும் மெஸேஜ் டோன்.
ஸ்க்ரீன் ஸேவரில் சாரதா.
' பேசாம சி எம் செல்லுல சாக்கடைக்குகம்ப்ளெயிண்ட் பண்ணிடுவோம், ஓகே தான'
பாப்அப்பில் பார்த்ததும் சிரித்தே விட்டான்.
' தீர்வுகள் தெரியாமலில்லை அவளுக்கு, தேவை "காதுகள்".
அவன் காதுகள் நிரம்பிக் கொண்டிருந்தது தலையாட்டல்களோடு.