தொடர்கள்
தொடர்கள்
இருக்காங்க இப்படியும் - 7 - சரவணக்குமார்

சுழல் விளக்கோடு சுற்றிவர ஆசை..

20180425143035640.jpg

சார்... நீங்க ஷூட்டிங் ஆர்டர் கொடுத்தீங்கன்னா அந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்திடலாம்விறைப்பாய் சொன்னார் எஸ்.பி.

நோ... நோ... யாரோட உயிரையும் பறிக்கிறதுக்காக இந்த பதவிக்கு நாம வரலை. ஸோ... அதெல்லாம் இல்லாமல் கண்ட்ரோல் பண்ணுங்க...நான் ஸ்ட்ரிக்டாக சொல்லியதும் முகம் தொங்கிப்போய் எஸ்.பி. எழுந்து போனார்.

அதன் பிறகு வந்த ப்ரமோஷன்களில் சீஃப் செக்ரெட்டரி, கேபினெட் செக்ரெட்டரி என ஒரு சீட் விடாமல் அனைத்திலும் நான் அமர்ந்தேன்.

-இப்படிப்பட்ட கனவு ஒன்று எனக்குள் ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. மூன்று முறை சிவில் சர்விஸ் தேர்வுகள் எழுதியும், முதல் கட்டத்தை கூட என்னால் தாண்ட முடியவில்லை. இன்னும் இருக்கும் கடைசி வாய்ப்பில் தேறினால் மட்டுமே சுழல் விளக்குஎன்கிற சூழல். வந்தது வரட்டும் என்கிற நோக்கில் பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, சென்னை மண்ணை மிதித்தேன்.

இங்கேயோ, வீக் எண்ட் நேர டாஸ்மாக் கூட்டம் மாதிரி ஏகப்பட்ட ஐ.ஏ.எஸ். அகாடமிகள். இவற்றில் எது உண்மை என்பதை அலசி ஆராய்ந்து இறுதியில் நான் போய் நின்றது, தி.நகரில் உள்ள அந்த கோச்சிங் சென்டர் முன்பு.

உள்ளே நுழைந்து ஹாலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அந்த மனிதர் வந்தார்.

சார்... இந்த கோச்சிங் சென்டரின் எம்.டியை பார்க்கணும்...

என்ன விஷயமா..?”

க்ளாஸில் ஜாயின் பண்ண வந்திருக்கேன்

வெரி குட்... வெரி குட்... நல்லா பார்த்துக்கோங்க...இப்படி அவர் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மிகவும் சிம்பிளாக இருந்தார். நாற்பதிலிருந்து நாற்பத்தைந்திற்குள் ஒரு எண்ணை கண்ணை மூடி தொட்டால் அதுவே அவரது வயதாக இருக்கலாம்.

இந்தாங்க ப்ராஸ்பெக்டஸ்

முதல் ஆச்சர்யமே முடிந்து போகாத நிலையில் அடுத்த ஆச்சர்யம் என்னை பலமாய் தாக்கியது. அதில், செல்வம் என்கிற அவரின் நான்கெழுத்து பெயருக்கு கீழே நாற்பது டிகிரிகள் குட்டி பாராவாக அணிவகுத்து நின்றன.

எப்படி சார் ஒரு யுனிவர்சிட்டியையே உங்க பேருக்கு பின்னால் வெச்சிருக்கீங்க!

என்ன தம்பி நம்ப முடியலையா? என் சர்டிபிகேட்ஸ் பார்க்கிறீங்களா?

ஐயையோ அதெல்லாம் வேண்டாம்...

அப்புறம் அந்த பாராவின் கடைசி லைனை நீங்க சரியாக கவனிக்கலைன்னு நினைக்கிறேன்

நான் உடனே ப்ராச்பெக்டஸைப் பார்த்தேன். கடைசி வரிகளில் ரிடையர்ட் ஐ.ஏ.எஸ் என்றிருந்தது.

இதையும் நம்ப முடியலைதானே?” அவர் கேட்டார்.

எவ்வளவு பெரிய மனிதர் முன்னால் நாம் நிற்கிறோம்’. பேச்சு வராமல் தவித்தேன்.

எதை எடுத்தாலும் ஊழல், லஞ்சம்னு ஒரே கரப்ஷன். இதில் அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடிச்சு, கார் கதவு திறந்துவிட்டு... என்னால் முடியலை. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு வந்துட்டேன்.

க்ரேட் சார்நான் ஆணி அடித்த தினுசில் நின்றிருந்தேன்.

ஓகே... அப்ளிகேஷனை நிரப்பிக் கொடுங்க. இதோடு சேர்த்து ஒரு அட்வான்ஸ் டிக்ஷ்னரி, இங்க்லீஷ் கோர்ஸ், ஸ்போக்கன் ஹிந்தி எல்லாமே ஃப்ரீ. ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் கிட்டத்தட்ட பத்து எக்ஸ்பெர்ட்ஸ் இருக்காங்க. அவுங்கதான் வந்து க்ளாஸ் எடுப்பாங்க

அவருடைய வார்த்தைகள் என் மனதில் பால், மோர், தயிர் என அனைத்தையும் வார்த்தன.

அடுத்த நாளில் இருந்து வகுப்பிற்கு சின்ஸியராக செல்ல ஆரம்பித்தேன். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அங்கே சேர்ந்திருந்தாலும், அதில் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு சேர்ந்தது நான் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் வேறு போட்டித் தேர்வுகளுக்கு வந்தவர்கள்.

நித்தமும் நடக்கும் வகுப்பில், அக்பரின் அப்பா யார்? ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தது எப்போது? என்பது மாதிரியான ஆறாம் வகுப்பு கேள்விகளே அதிகம் இருக்கும். அட்வான்ஸ்டு ஆங்கிலம் சொல்லித் தருவதிலும் ஏ பார் ஆப்பிள், பி பார் பால் கதைதான்.

பொறுத்துப் பார்த்த நான், ஒரு கட்டத்தில் என்னங்க இது... ஒன்னாவதிலிருந்து ஆரம்பிச்சு எப்போதான் காலேஜுக்கு வருவீங்க?” என்று கேட்டுவிட்டேன்.

தம்பி... பேஸ்மென்ட் ஸ்ட்ராங்கா இருந்தால் தான் வீடு ஜம்முனு வரும்...என்றார் கூலாக.

அடுத்து வந்த நாட்களிலும் இதே பாடத் திட்டம் தொடர்ந்தது. தனி ஒருவனாக இருந்து அவரே அனைத்து வேலைகளையும் அங்கே செய்து வந்தார்.

ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் வேறு வேறு ஆட்கள் சொல்லித்தருவாங்கன்னு சொன்னாரேபக்கத்தில் இருந்த இளைஞனின் காதைக் கடித்தேன்.

நான் வந்து சேர்ந்த நாளில் இருந்து, இவரைத் தவிர ஒரு காக்கா, குருவியையும் பார்த்ததில்லைஎன்றான் அவன்.

முதன்முறையாக பயம் ஒன்று எனக்குள் எட்டிப்பார்த்தது. என் எண்ணங்களைப் படித்தவராக நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. உங்களை பாஸ் பண்ண வைக்கவேண்டியது என் பொறுப்பு. ஆனால் அதுக்கு கொஞ்சம் செலவாகும்அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மெதுவாக கூறினார்.

இன்னும் எவ்வளவு பீஸ் கட்டணும் சார்..?” கவலையோடு கேட்டேன்.

எனக்கு கட்டவேண்டாம். மேல் மட்டத்தில் இருக்கறவுங்களுக்கு இரண்டு லட்சம் கொடுத்தால் ப்ரிலிமினரியை ஈஸியாக முடிச்சிடலாம்.

அப்படி பாஸ் பண்ணுவதில் எனக்கு விருப்பமில்லை சார்சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

அடுத்தநாள் நடந்துகொண்டிருந்த வகுப்புக்கு நடுவே ஒரு கட்டு லெட்டர்களை போட்டார் செல்வம்...

என்னோட பலம் தெரியாமல் இங்கே பல பேர் இருக்காங்க. இந்த லெட்டர்கள் எல்லாம், என்மேல் பொறாமை பிடிச்ச பலரும் சி.எம் செல்லுக்கு எழுதினது. இதெப்படி என் கைக்கு வந்ததுன்னு ஆச்சர்யமா இருக்கா? அதுதான் இந்த செல்வம் ஐ.ஏ.எஸ்-ஸின் பவர்.அட்டகாசமாய் சிரித்தார்.

நான் ஆர்வம் தாங்காமல் ஒரு கவரை எடுத்துப் பார்த்தேன். முதலமைச்சரின் தனிப்பிரிவு முகவரி எழுதப்பட்டு ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் மீது முத்திரை குத்தப்பட்டிருந்தது.

சந்தேகமாக இருந்தால் கவரை பிரிச்சு படிச்சுப்பாருங்கஎன்றபடி லெட்டரை பிரித்து அனைவரின் முன்னாலும் உயர்த்திக் காட்டினார். அதில் ரிசீவ்டு சீலுடன் பச்சை மையால் ஏதோ குறிப்புகளும் எழுதி இருந்தன.

அந்த அறை முழுவதும் கனத்த மௌனம் நிலவ, அனைவரும் பிரமிப்பு மாறாமல் அமர்ந்திருந்தோம்.

இவ்வளவு பவர்ஃபுலான மனிதராக இருக்கிறாரே, பணம் கொடுத்து காரியத்தை முடிச்சிடுவோம். இல்லை இல்லை... இது ரொம்ப தப்பு. லஞ்சம் கொடுத்தால், பதவிக்கு வந்த பிறகு வாங்கத்தோணும்எனக்குள் பாரதி பாஸ்கரும், ராஜாவும் மாறி மாறி பேச ஆரம்பித்தார்கள். மதில் மேல் மனிதனாக மாறிப்போனேன்.

அடுத்தடுத்த நாட்களில் பலரும், செல்வத்திடம் கட்டுக்கட்டாய் நோட்டுகள் கொடுப்பதையும் கவனித்தேன்.

நீங்க மட்டும்தான் பாக்கி கலெக்டர் சார்...என்றார் செல்வம்.

அன்றைக்கு இரவு, மணி ஒன்பதை நெருங்கி இருந்தது. அத்தனை பேரும் ஜூட் விட்டிருக்க, நானும் புறப்பட தயாரானேன்.

என்ன தம்பி படிச்சே பாஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?” கேட்டபடியே வந்தார் செல்வம்.

இல்லை சார்... நாளைக்கு பணத்தோட வர்றேன்...

வெரிகுட்... வாழ்த்துக்கள்அவர் சொல்லிக்கொண்டிக்கும் பொழுதே நான்கு பேர் உள்ளே தபதபவென நுழைந்தனர். கைகளில் உருட்டுக்கட்டைகள் இருந்தன.

ஒருவன் சட்டென க்ரில் கேட்டை இறக்கிவிட்டான். செல்வத்திற்கு மூர்க்கத்தனமாக அடி விழ துவங்கியது. நான் தடுக்க முற்பட்டேன்.

இதோ பார்... ஒதுங்கிப்போயிடு...அந்த இளைஞன் என்னை மிரட்டினான்.

ஒரு ரிடையர்ட் கலெக்டரை அடிச்சீங்கன்னா என்ன ஆகும் தெரியுமா?” கோபமாய்க் கத்தினேன். இதைக் கேட்டதும் இன்னும் வேகமாய் செல்வத்திற்கு அடி விழுந்தது.

இந்த பொறம்போக்கு நாயா ஐ.ஏ.எஸ். ஆபீஸர்... சரியான ஃப்ராடு இது. பணத்தை எட்றா...பளார் என அறை விழுந்தது. பதறிப்போன செல்வம், ட்ராயரைத் திறந்து பணக்கட்டுகளை அள்ளிக்கொடுத்தார். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

ஒருவன் என்னிடம் வந்தான்.

உன்னை பாஸ் பண்ண வைக்கிறேன்னு பணம் எதுவும் கேட்டானா?”

மௌனமாய் தலை அசைத்தேன்.

கொடுத்திடாதே... சத்தியமா இவனால் ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது. நாங்களும் உன்னை மாதிரி இங்கே வந்து ஜாயின் பண்ணி இவன்கிட்டே பணம் கொடுத்து ஏமாந்தவுங்கதான். இவன் மேல் கம்ப்ளெயின்ட் ஏதும் வந்தால் காசைக் கொடுத்து கவனிச்சிடுவான். இவனே லெட்டர் எழுதி, சீல் போட்டு தனக்கு பவர் இருக்குன்னு பீலா விட்டிருப்பானே... பத்தாயிரம் டிகிரி படிச்ச மாதிரி போலி சர்டிபிகேட்ஸ் வச்சு ஏமாத்துறதே இந்த பொறம்போக்குக்கு பொழப்பு. இந்த மூஞ்சியை பார்த்தா கலெக்டர் மாதிரியா தெரியுது. அவர் வீட்டில் கால் படக்கூட தகுதி இல்லாத நாய்.சொல்லிவிட்டு அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காணாமல் போனார்கள்.

செல்வம் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருக்க, “த்தூ... இத்தெல்லாம் ஒரு பொழப்பு”, அந்த முகத்தில் காறித் துப்பிவிட்டு வெளியே வந்தேன்.

அப்புறம் வந்த சிவில் சர்விஸ் தேர்வில் மட்டுமில்லை, அதன் பிறகு எழுதிய க்ரூப் ஒன் எக்ஸாமில்கூட நான் தேர்வாகாதது தனிக்கதை.