தொடர்கள்
பொது
கிறிஸ்துவர் கட்டிய மசூதி!

20180424180451184.jpg

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள பியூஜைரா எனும் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம், காயங்குளத்தை சேர்ந்த ஷாஜி செரியன் (56) என்பவர் கார் டிரைவர் வேலைக்காக வந்தார்.


கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் படிப்படியாக பல்வேறு தொழில்களை மேற்கொண்டு, தற்போது ஐக்கிய அரபு எமிரேட் பகுதிகளில் பலகோடிகளுக்கு அதிபதியாக திகழ்ந்து வருகிறார்.


இந்நிலையில், பியூஜைரா நகரில் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களின் முஸ்லிம் தொழிலாளர்கள் வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் பல மைல் தூரம் நடந்து சென்று மசூதிகளில் தொழுகை நடத்துவதை ஷாஜி செரியன் கண்டறிந்தார். மேலும், இதுபோன்ற தொழுகைகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு 20 திர்ஹாம் (இந்திய ரூபாயில் ₹400) செலவாகிறது எனத் தெரியவந்தது.


இதையடுத்து, தனது சொந்த செலவில் பியூஜைரா நகரிலேயே தொழிலாளர்களுக்கென தனியாக ஒரு மசூதி கட்டித் தர ஷாஜி செரியன் தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, அந்நகரில் சுமார் இரண்டு கோடி மதிப்பீட்டில் புதிய மசூதி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.


இதுகுறித்து தகவலறிந்ததும் உள்ளூர் அதிகாரிகள், மசூதிக்கு தேவையான மின்சாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் செய்து தந்துள்ளனர். இங்கு ஒரே வேளையில் சுமார் 950 பேர் தொழுகை நடத்தும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


இந்திய கிறிஸ்தவரான ஷாஜி செரியனின் தன்னலமற்ற பொது சேவையைப் பார்த்து உள்ளூர் அரேபிய வியாபாரிகளும் வர்த்தக நிறுவனங்களும் நிதியுதவி அளிக்க முன்வந்தன. எனினும், அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஷாஜி, தனது சொந்த பணத்திலேயே மசூதியை பிரமாண்டமாக கட்டி முடித்துள்ளார்.


ஷாஜி செரியன் கட்டியுள்ள புதிய மசூதியில், ரம்ஜான் நோன்பு துவங்கிய கடந்த வாரம் முதல் பியூஜைரா நகர முஸ்லிம் தொழிலாளர்கள் 3 வேளையும் தொழுகை நடத்தி வருகின்றனர்.மேலும், அம்மசூதியின் முதல் ரம்ஜான் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கும் திட்டமிட்டு வருகின்றனர். அந்நிகழ்ச்சியில் மசூதி கட்டிக் கொடுத்த ஷாஜி செரியனை கௌரவப்படுத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.