தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - மே 22 - கறுப்பு நாள்..

20180425114141204.jpg

மக்களாட்சி நடக்கும் நாட்டில், ஏதேனும் ஒரு பிரச்னைக்காக போராடுகிறவர்களுக்கு, துப்பாக்கிக் குண்டுகளை அரசு ‘பரிசாக’ அளிப்பது, ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போன்றது. போராடும் மக்களின் உடல் உயிரிழந்து பூமியில் விழுவதும், ரத்தத் துளிகள் மண்ணில் சிந்துவதும், நடப்பது ஜனநாயகமா என்ற கேள்வியை எழுப்பும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 20 ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடக்கிறது. தூத்துக்குடியில் இப்போது நடந்துவந்த தொடர் போராட்டத்தில் 100வது நாளாக மே 22 அன்று வெடித்த மாபெரும் கிளர்ச்சியை, அடக்குமுறையின்றி சமாளித்திருக்க வேண்டும். போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்ததே! தடியடி, கண்ணீர்புகை, நீர்ப்பீய்ச்சி அடிக்கும் சாதனம், எச்சரிக்கை விடுப்பது எல்லாம் எங்கே போயிற்று? நவீன ரக தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியதாம் போலீஸ். இந்த துப்பாக்கியில் இருந்து புறப்படும் குண்டு 800 மீட்டர் வரை பாய்ந்து தாக்குதல் நடத்துமாம்! இதுவரை ராணுவம் பயன்படுத்திவந்த துப்பாக்கி! அது என்ன எதிரிகளை சந்தித்த யுத்தகளமா? ஏன் இந்த ஆவேசம்?

ஸ்டெர்லைட் ஆலை முதலில் மராட்டிய மாநில ரத்தினகிரியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்திலேயே அது கக்கிய புகை, புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழ மரங்களை பதம் பார்த்துவிட்டது. விவசாயிகள் கொதித்து எழுந்து, ஆலையை தாக்கினார்கள். முதல்வர் சரத்பவார் அன்று உடனடியாக ஆலையை மூட உத்தரவிட்டார். குஜராத், கோவாவில் கூட ஆலைக்கு அனுமதி இல்லை. தமிழகத்தில் வெற்றிகரமாக ஸ்டெர்லைட் ஆலை நுழைந்தது எப்படி?

தூத்துக்குடியை சுற்றி உள்ள பகுதியில் மக்கள் புற்றுநோய் உட்பட பல நோய்களால் பாதிகப்படுவதால்தான் கிளர்ச்சி ஆரம்பமானது. அது எளிய மக்களின் கிளர்ச்சியே!

ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த மாணவர் கிளர்ச்சியில், ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. அன்றைய ஐ.ஜி., துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கேட்டார். அண்ணா அனுமதி தர மறுத்துவிட்டார். ‘ஒரு ரயில் பெட்டி எரிந்தால் மீண்டும் உருவாக்கலாம். ஒரு உயிர் போனால் மீட்டு தர முடியுமா?’ என்றார் அண்ணா!

இது அண்ணா தி.மு.க. ஆட்சியாம்!

13 பேர்கள் கொடூரமாக சாய்க்கப்பட்ட மே 22 - ஒரு கறுப்பு நாள்.


காமராஜர் கண்ணீர்

20180425114803256.jpg

தமிழக அரசு 800க்கு மேற்பட்ட பள்ளிகளை இழுத்து மூடப்போகிறதாம்! அவற்றில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாம்! ஆரம்பித்த நோக்கம் என்ன? ஏன் இந்த கதி ஆயிற்று?

ராஜாஜி முதல்வராக இருந்தபோது சிக்கனம் கருதி, பள்ளிகளை மூடினார். அதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ‘ஷிஃப்ட்’ முறையில் பள்ளிகளை இயங்க வைத்தார். எதிர்ப்பு கிளம்பியது. காமராஜர் முதல்வரான உடன் அந்த மூடிய பள்ளிகளை திறந்தார்... வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். கல்விக்கு செலவழிப்பது - ஒரு செலவே அல்ல என்றார்.

‘ஓர் ஆசிரியர்’ பணியாற்றும் பள்ளிகள் கூட கிராமத்தில் துவக்கப்பட்டது. எல்லோரும் படிக்க வேண்டும் - அதிக செலவில்லாமல்! இந்த நோக்கம் இன்று பாழாகிப் போனதே!

காமராஜர் பிறந்த நாளில், சிலைக்கு மாலை போடும் அமைச்சர்களின் கைகளில் அவர் சிந்தும் கண்ணீர் துளிகள் விழலாம்.