தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை - சொல்லோடும் பொருளோடும் உறவாடும் சுகம் - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20260114091208762.jpg

அவன் ஒரு பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை பாடத்திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தபோது, அந்தத்துறை மாணவ மாணவிகளுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘நீங்கள் பத்திரிகைத் துறைக்கு வராமல், ஆங்கிலப் பேராசிரியராகவே இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என்று மாணவி கேட்டார்.


அவன் சொன்னான் ‘அப்போது சொற்பொழிவு என் தொழில், இப்போது எழுதுவது தொழில். அப்போது இலக்கியம் முக்கியம், இப்போது சமூகம் முக்கியம். எப்படியிருந்தாலும் ஆங்கிலம்தானே என் தொழில் மொழி-? அதனால் வேலை மாறியதில் வித்தியாசத்தைப் பார்க்கவில்லை.’’
இன்னொரு மாணவி கேட்டார், ‘நீங்கள் பத்திரிகைத் துறைக்கு சென்றதன் மூலம் கல்வித்துறை நல்ல பேராசிரியரை இழந்துவிட்டது என்றாரே எங்கள் பேராசிரியர், அதுபற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?’ அவன் சொன்னான், ‘நான் பத்திரிகையாளன் ஆனது எதிர்பாராத சம்பவம். ஆனால் அது விதியல்ல, ஒரு வரம். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகத் தொடர்ந்திருந்தால் இப்போதுள்ள சுதந்திரத்தை அனுபவித்திருக்க மாட்டேன். மாணவர்கள் ஸ்டிரைக் செய்வார்கள், வாசகர்கள் ஸ்டிரைக் செய்ய மாட்டார்களே? ஒரு மாணவன் சொன்னான், ‘சார் இப்படி வைத்துக் கொள்வோம், உங்களை யாரும் பத்திரிகைத்துறைக்கு அழைக்கவில்லை, நீங்களும் பத்திரிகையாளன் ஆகவில்லை என்றால், ஆங்கிலப் பேராசிரியராக என்ன செய்திருப்பீர்கள்?’ ‘நல்ல கேள்வி, நானும் இதுபற்றி அவ்வப்போது யோசித்ததுண்டு. கல்லூரிப் பல்கலைக்கழக நிர்வாகக் குழுக்களில் இடம் பெற்றிருப்பேன். அவ்வப்போது சில கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழங்களுக்கும் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறேன். அப்படிப்பட்ட என் சொற்பொழிவுகளை ஹிண்டு பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. ஒரு பத்திரியாளன் சொற்பொழிவு அதே பத்திரிகையில் வெளியிடப்படுவதில்லை. ஆனால் எனக்கு அந்த கௌரவம் கிடைத்தது.


நான் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தபோது திட்டமிட்டவை இரண்டு புத்தகங்கள். ஒன்று ஜாஃப்ரே சாசர் முதல் டி.எஸ்.எலியட் வரை ஆங்கிலக் கவிதைகளின் வரலாற்றை எழுத விரும்பினேன். ஆங்கிலக் கவிதையின் தந்தை என்று போற்றப்படும் கவிஞர் சாஸர் ‘இனிய மழைப்பொழிவு கொண்ட ஏப்ரல்’ என்று தன் காவியத்தின் முதல் வரியைத் தொடங்கினார். 600 வருடங்களுக்குப் பிறகு நவீன கவிதைகளின் தந்தை என்று போற்றப்பட்ட ஜி.ஷி.எலியட் ‘மாதங்களிலேயே கொடுமையானது ஏப்ரல்’ என்று எழுதினார்.

இந்த இரண்டு ஏப்ரல்களுக்கிடையே பிறந்த கவிதைகளின் இலக்கிய நயத்தை Betwixt to Aprils என்ற தலைப்பில் எழுதியிருப்பேன். புதிய தொழிலில் அதற்கான ஓய்வும் மன அமைதியும் கிடைக்கவில்லை.
இன்னொரு புத்தகம், ஆங்கில இலக்கணத்தை எளிய முறையில் கற்றுத் தருவது’ என்று அவன் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவி குறுக்கிட்டாள், ‘இலக்கணம்தான் சார் எல்லோருக்கும் கஷ்டம்.’ அவன் சொன்னான், ‘இலக்கணம் பிடிபடாமல் யாரும் எழுத்தாளராகவோ, சொற்பொழிவாளராகவோ, பத்திரிகை யாளராகவோ இயங்க முடியாது. இப்போது இலக்கணம் கற்றுக் கொடுக்கப்படும் முறை சரியல்ல. அதை நாம் ஜேம்ஸ் நெஸ்ஃபீல்ட்டு, ரென் அண்ட் மார்ட்டின் ஆகியோர் எழுதியுள்ள புத்தகங்களின் மூலம் இலக்கண வகுப்புகளை நடத்துகிறோம். அப்படியில்லாம் மொழியியல் வழியில் நடத்த ஒரு புத்தகம் எழுத விரும்பினேன். அதன் அணுகுமுறை stylistics மொழிநடை. அதாவது நல்ல இலக்கியப் பகுதிகள் மூலம் வாக்கியங்களில் இலக்கண அமைப்பை எடுத்துச் சொல்லி இலக்கணத்தை புரிய வைப்பது. அதாவது இலக்கியம் மூலம் இலக்கண வகுப்புகள். ஆங்கிலப் பேராசிரியராகத் தொடர்ந்திருந்தால், நிச்சயம் அந்தப் புத்தகத்தை எழுதியிருப்பேன். இதுதான் அழகி கிளியோபாட்ராவின் எலும்புக்கூடு என்று காட்டுவது பழைய இலக்கணம் கற்பித்தல் முறை. நான் யோசித்த புதிய முறை, இலக்கியத்தை அதாவது ஒரு அழகியைக் காட்டி, கிளியோபாட்ரா இவளைவிட அழகியாக இருப்பாள் என்று சொல்வது.’ இலக்கண எலும்புகளுக்கு சதை பிடிப்புத் தரும் முறை அது.


அரங்கில் இருந்த ஒரு பேராசிரியர் அப்போது குறுக்கிட்டார், ‘சார் நீங்கள் பத்திரிகையாளராக இருந்து கொண்டே அந்தப் புத்தகத்தை எழுதியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?’ அவன், ‘அதற்கு கல்விக் களச் சூழல் தான் பொருத்தம். பத்திரிகைக் களம் ஏற்றதல்ல. ஓய்வான மனநிலையில்தான் அப்படிப்பட்ட புத்தகத்தை எழுத முடியும். பத்திரிகையாளனுக்கு அப்படி ஓய்வு கிடைப்பதில்லை. அப்போது வாரத்திற்கு 10 மணி நேரம் ஆங்கில வகுப்புகள் நடந்தன. இப்போது 6 மணி நேரம்தான். ஷேக்ஸ்பியருக்கு பாடத்திட்டத்தில் இடமில்லை. கற்பித்தல் முறையும் கேள்வி கேட்கும் முறையும் மாறிவிட்டது. இந்தக்கால கல்விமுறைக்கு ஏற்ற பேராசிரியராக நான் இருந்திருக்க முடியாது.’


‘மாணவப் பருவத்தில் உங்களது ஆங்கில மொழி ஈடுபாடு எப்படி இருந்தது?’ என்று அதே பேராசிரியர் கேட்டார். அவன் சொன்னான், ‘சரியான வார்த்தைகளில் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாணவப் பருவத்தில் மனம் சரியான சொற்களை தேடிக்கொண்டே இருக்கும். ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்தில் உள்ள வில்லன் இயாகோ ‘நான் நானல்ல’ என்று சொல்லும் பாத்திரம். அவன் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவான் என்பதை ஆங்கிலத்தில் எழுத முயன்றேன். மற்ற மாணவர்களைவிட சிறப்பாக எழுதியிருப்பேன். ஆனால் எனக்குத் திருப்தியில்லை. தேர்வை 1964இல் எழுதி முடித்ததும் மனம் சரியான சொற்களை எழுதவில்லையே என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. மறுவருடம் பட்டப் படிப்பை முடித்ததும், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் Betwixt His Heart and lips there is enough space to cover any amount of hupocrazy என்ற வாசகத்தைப் படித்தேன். அது இயாகோவுக்கு பொருத்தம் என்றாலும், இன்னும் சுருக்கமாகச் சொல்லலாமே என்று மனம் யோசித்துக் கொண்டேயிருந்தது. எத்தனை வேலைகளுக்கு இடையிலும் ஐந்து வருடங்கள் மனதின் மூலையில் அந்தத் தேடல் உணர்வு தொடர்ந்து கொண்டேயிருந்தது. எதுவும் தட்டுப்படவில்லை. பின்னர் 1969இல் ஷேக்ஸ்பியரின் Measure for Measure என்ற நாடகத்தில். Tounge far from the Heart என்ற சொற்களைப் படித்தேன். ஆஹா, இதுதான் நான் தேடியது என்று உணர்ந்தேன். அப்படி இருக்கவேண்டும் சொற்கள் மீதான ஆர்வமும், தேடலும். சொல் வளம் பத்திரிகையாளனுக்கு அதிகம் தேவை.

20260114091009565.jpg
‘அப்படியா? சார் சரியான சொற்களைத் தேடினீர்கள்?’ என்று மாணவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, சொற்களின் நாட்டம் கொண்ட ஒருவரின் மனப்போக்கு அப்படி. யாருக்குமே இது சாத்தியம்.’’ மனதைப் பிறாண்டும் இந்தத் தேடல்தான் நல்ல சொல்லாட்சிக்கு வழி என்று சொன்ன அவன், காளிதாஸனின் ரகுவம்சம் காவியத்தின் தொடக்கச் செய்யுளைக் கூறி தன் உரையை நிறைவு செய்தான்.

என்ன அந்தச் செய்யுள்? ’சொல்லும் பொருளும் இணைந்திருப்பது போல், பார்வதியும் பரமேஸ்வரனும் இணைந்திருக்கிறார்கள்.’ சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தெய்வீக உறவை விளக்க இதைவிட வேறு ஸ்லோகம் தேவையா? இதையே குமரகுருபர ஸ்வாமிகளும் ‘சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றம், சொல் விற்பனமும் அவதானமும் கல்வி சொல்ல வல்ல நல்வித்தையும் என்கிறார்.

இதை மாணவப் பருவத்திலேயே மனதில் வரித்துக் கொள்பவர்கள் நல்ல ஆசிரியர்களாகவும், நல்ல எழுத்தாளர்களாகவும், சிறந்த பத்திரியாளர்களாகவும் உருவாக முடியும். இதையே பாரதியார் ‘எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றார். எழுத்தை தெய்வீகப் பணியாகவே கருதி அவன் எழுதுகிறான், எழுதுகிறான், எழுதிக் கொண்டே இருக்கிறான்.