காதல் சரித்திரம்
ஆசிரியர் : முகில்
எந்த சரித்திரமாக இருந்தாலும் அதை ஆசிரியர் முகில் சுவாரஸ்யமாக எழுத கூடியவர். அப்படி இருக்கையில் காதல் சரித்திரம் என்றால் கேட்கவா வேண்டும், இந்த நூலில் படு ஜோரான பனிரெண்டு காதல் கதைகளை ஆசிரியர் நம்முடன் பகிர்கிறார்.
அநேகமாக வாசிப்பு பழக்கமுள்ள காதலிகளுக்கு காதலன் அளிக்கும் சிறப்பான பரிசாக இந்த நூல் இருக்கும். காதல் மாதத்திலேயே வாசித்து முடித்ததை மிக மகிழ்வாக உணர்கிறேன். அழகழகான படங்களுடன் கூடிய விறுவிறுப்பான நூல் இது.
முதலில் ஏழாயிரம் மயில் கடந்து காதலித்த மகாநந்தியா மற்றும் சார்லோட் தம்பதிகளின் காதல் கதை. ஒடிஸாவை சேர்ந்த சாதாரண ஓவியனான மகாநந்தியாவை சுவீடனை சேர்ந்த சார்லோட்டிற்கு எப்படி பிடித்தது ?
சுற்றுலாவிற்கு வந்த சார்லோட் காதல் வயப்பட்டு தன்னுடன் மகாநந்தியாவை அழைக்க, நந்தியா தானே அவளை தேடி வருவதாக வாக்களிக்கிறார்.
தன்னுடைய ஒரே சைக்கிளை மட்டுமே நம்பி சுமார் ஏழாயிரம் மயில் பயணித்து சார்லோட்டை சென்று சந்திக்கிறார், போகும் வழியில் செலவு செய்ய அவரிடம் கையில் காசு கிடையாது, மாற்றிக் கொள்ள அதிகமான உடைகள் கிடையாது காதல் ஒன்றே அவரை வழி நடத்துகிறது.
ஒரு ஜிப்ஸியை போல பயணத்தை தொடர்கிறார். பிரிந்தவர் மீண்டும் சேர்க்கின்றனர். அந்த நெகிழ்வை காதலை அற்புதமாக எழுதுகிறார் முகில்.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் இளமை பருவத்தில் இருந்த போரிஸ் - அன்னா தம்பதிகள் காதலிக்க தொடங்குக்கிறார்கள், யுத்தத்தால் பிரிந்து பின் பல வருடங்கள் கழித்து வயோதிகத்தில் ஒன்று சேர்க்கின்றனர். அவர்களின் மகிழ்ச்சியான புகைப்படம் நம்மையும் மகிழ்விக்கிறது.
ரிச்சட் லவ்விங் - மைல்ட்ரேட் தம்பதிகள் அமெரிக்காவின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள். வெள்ளையரும் -கருப்பரும் கலப்பு மணம் செய்து கொள்ள கூடாது என்ற சட்டத்தை மீறி கோர்ட்டில் கேஸ் போட்டு வெற்றி கண்டவர்கள்.
பல தடைகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு உரிமையுடன் உள் நுழைந்த புரட்சிக்காரர்கள்.
பகவான் சிங் மாய்னி மற்றும் ப்ரீத்தம் கவுர் இருவரும் இந்தியா பாகிஸ்தான் பிரிவின் போது குடும்ப உறவுகளால் காப்பாற்றப்பட்டு ரயிலில் தப்பி முகாம்களில் அகதியாக வாழ்க்கையை தொடங்கி உயர்ந்தவர்கள், அந்த கொடூரமான நாட்களிலும் அவர்களின் காதலை அவர்கள் தக்கவைத்துக் கொண்டது மிக பெரிய ஆச்சர்யம் தான்.
ரூத் வில்லியம்சுடன் காமாவுக்கு உண்டான காதல் கவித்துவமானது. காமா தன்னுடைய நாட்டின் சுதந்திரத்திற்காக போராட வேண்டி இருந்தது, லண்டன் அரசி காமாவிற்கு அவரது நாட்டை ஆளும் உரிமையை வழங்கவில்லை, பல போராட்டங்களுக்கு பிறகு காமா தன்னுடைய மாகாணத்தை தானே ஆளும் உரிமையை பெறுகிறார், அவரோடு உறுதுணையாக கூடவே இருந்து பலம் சேர்க்கிறார் ரூத்.
இவர்களின் கதை காதல், போராட்டம், பிரிவு, தன்னம்பிக்கை என்று எல்லாம் கலந்த கதை.

சிகப்பு தாஜ்மகாலின் கதையும் ஒரு அற்புதமான காதல் கதை தான், சற்றே வித்யாசமான ஒன்று. பேனி கோயன் என்ற ஒலிம்பிக் வீராங்கனை சாதாரணமாக ஒன்றும் சாதித்து விடவில்லை,
அவருடன் அவரது காதல் கணவர் ஜேன் கூடவே துணை இருந்து அவரை ஊக்குவித்திருக்கிறார்.
இவர்கள் சந்தித்த தடைகள் ஒன்று இரண்டல்ல. சத்யஜித் ரேவின் திரைப்படங்களை தெரியும் என்றாலும் அவரின் காதல் வாழ்வை பற்றி ஒன்றுமே தெரியாது, பிஜோயா மீது இளமை பருவத்தில் ஏற்பட்ட காதல் பின்னாளில் அலைபாயுதே ஸ்டைலில் மணந்து அதை பெற்றோரிடம் கூறி ஒருவழியாக வாழ தொடங்கி படங்களை எடுத்து வெற்றி பெரும் வரை தொடர்கிறது.
ரேவை பெரிய படைப்பாளியாக ஆக்க பிஜோயா செய்த தியாகங்கள் அளப்பரியவை. அவருடைய சாருலதா திரைப்படத்தில் நடித்த மாதவி முகர்ஜி மேல் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்ட போது கூட பிஜோயா அவருடன் சண்டை போடவில்லை, பின்னாளில் பிஜோயாவின் அன்பு உணர்ந்து அவரே திரும்பி வந்தார் என்கிறார் ஆசிரியர்.
ஹிட்லரின் வதை முகாமில் இருந்து கொடும் வதைகளுக்கு பிறகு தப்பி வந்த பெண்ணான ஜெர்டாவை காப்பாற்றி கரம் பிடித்த கர்ட் க்ளெய்ன் ஒரு சிறப்பான மனிதர், ஜெர்டா உயிர் தப்பிய கதை ஒரு த்ரில்லரை போல நமக்குள் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது, அவரை காப்பாற்றும் க்ளெய்ன் ஒரு கதாநாயகனாக நம் மனதில் அமர்கிறார்.
ஜெர்டா இன்று பல தலைமுறைகளை கண்டு வாழ்ந்த புகைப்படம் மிக பெரிய ஆறுதலாக இருக்கிறது. உயர்ந்த தம்பதிகளாக மார்ட்டின் பேட்ஸ் மற்றும் அன்னா சுவானின் கதை பலருக்கு உத்வேகம் அளிக்க கூடியது, அவர்களுக்கான உலகத்தை அவர்களே சிருஷ்டித்து கொண்டார்கள் என்பதே அழகு. ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் தான் காதலிக்க வேண்டுமா என்ன இரு பெண்கள் காதலிக்க கூடாதா என்று தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே போராடியவர்கள் ரூத்தும் செசெலினும்.
பல போராட்டங்களும் புரட்சிகளும் செய்து தங்களுடைய வாழ்வை கடந்திருக்கிறார்கள் எனினும் இணைபிரியாமல் அன்போடு இருந்திருக்கார்கள். ஏன் மனுஷங்க மட்டும் தான் காதலிப்பாங்களா நாங்க எல்லாம் என்ன சும்மாவா என்று நம்மை ஆச்சர்ய படுத்துகிறது பென்குயின்களின் காதல், அதிலும் ஆண் பென்குயினின் அர்ப்பணிப்பு நம்மை ஆச்சர்ய படுத்தும்.
சிறப்பான வாசிப்பனுபவம். வாசிப்பை விரும்பும் இணையருக்கு கொடுக்க உகந்த சிறப்பான பரிசாக இந்த நூல் இருக்கும்.
பதிப்பகம் : சிஸ்க்த் சென்ஸ்
பக்கங்கள் : 208

Leave a comment
Upload