தொடர்கள்
இசை
முக்திக்கான பாதை - ரஞ்சனி காய்த்ரி இசை நிகழ்ச்சி - லண்டனிலிருந்து கோமதி

20260227152101254.jpeg

Darbar Arts Culture Heritage Trust என்பது London-ல் அமைந்துள்ள இலாப நோக்கமற்ற (non-profit) ஒரு கலாச்சார நிறுவனமாகும். இது இந்திய பாரம்பரிய அடையாளங்களான கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.மார்ச் 19ஆம் தேதி, புகழ்பெற்ற பார்பிகன் அரங்கில், ரஞ்சனி காயத்ரி சகோதரிகளின் கர்நாடக இசை நிகழ்ச்சி, " இசையின் மூலம் தியாகராஜரின் முக்திக்கான பாதை" என்னும் தலைப்பில் அரங்கேறியது.

தியாகராஜர் என்றாலே அவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் நம் நினைவில் தோன்றாமல் இருக்காது.இந்த ஐந்து பாடல்களும் கன ராகங்கள் எனப்படும் ஆழமான, கம்பீரமான மற்றும் பாடுவதற்கு கடினமான ராகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிருதிகள் கர்நாடக இசையில் ராமனைக் போற்றும் வகையிலும், ராகத்தின் முழு பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும், நாட்டை, கௌளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ ராகம் என்ற ராகங்களின் அடிப்படையில் பாடப்படுகிறது.

20260227152202605.jpeg

ரஞ்சனி காயத்ரியின் கச்சேரி, ஆரபியில் அமைந்த சாதிஞ்சேனே ஓ மனசா என்ற அருமையான பஞ்சரத்ன கீர்தனையோடு ஆரம்பமானது. காம்பீரமான குரலில் ராக ஆலாபனைகளோடு பாடிய விதம் அருமை. தியாகராஜர் சிவனைப் பற்றி பாடி இருப்பதை குறிப்பிட்டு பந்துவராளி ராகத்தில் "சிவ சிவ சிவயன" என்னும் பாடலை பாடினார்கள். இந்தப் பாடல் கச்சேரியின் தலைப்புக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்ததோடு, கேட்கும் ரசிகர்களையும் மெய் மறக்கச் செய்தது. கச்சேரியின் முக்கிய அங்கமாக "நகுமோமு" என்னும் தியாகராஜர் க்ரித்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக காயத்ரி குறிப்பிட்டதும், அரங்கம் கரவொலியால் நிரம்பி வழிந்தது. "ஜக மேலெ பரமாத்ம எவரிதோ மொரலிடுது" என்னும் வரியை அவர்கள் நெரவலில் பாடிய விதம், இந்தத் துறையில் அவரகளது ஆளுமையை தெளிவாக வெளிக்கொணர்ந்தது. டெல்லி சாய்ராம் மிருதங்கத்திலும், கிரிதர் உடுப்பா கடத்திலும் தனியாவர்தனத்தில் போட்டி போட்டுக்கொண்டு அசத்தினார்கள்.

20260227152229860.jpeg

இதைத் தொடர்ந்து ஹரிதாஸ சம்பிரதாயத்தை போற்றும் விதத்தில் "ஹரிதாசலு வெடலே" என்னும் பாடலை புதுமை கலந்து மனமுருக பாடிய விதம், ஒரு தவம் என்றே கூறலாம். தமிழ்ப் பாசுரம், கன்னட சுலோகம் மற்றும் மராத்தி அபங் ஆகியவற்றோடு இந்த க்ரித்தியை இணைத்த விதம் அருமை. நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான, அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் மிகவும் நெருக்கமான "எந்தரோ மகானுபாவுலு" பாடல் லண்டனில் இசை பயிலும் மாணவர்களோடும், அரங்கத்தில் இருந்த இசை கலைகர்களோடும் இந்த பாடல் பாடப்பெற்றது, தியாகராஜ ஆராதனையை லண்டன் பார்பிகன் அரங்கத்தில் கண்முன்னே கொண்டு நிறுத்தியது என்றே கூற வேண்டும்.இறுதியாக உத்சவ சம்பிரதாயத்தை போற்றும் விதத்தில் இரு பாடல்களோடும், ராம நாமத்தோடும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ரஞ்சனி காயத்ரி தியாகராஜரின் பாடல்கள் மூலம், அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் முக்திக்கான வழியை நிச்சசயம் கண்முன் கொண்டுவந்து உணர்த்தினர்.சென்னையில் டிசம்பர் கச்சேரி கேட்க முடியவில்லையே என்று ஏங்கும் பல கலை ரசிகர்களின் தாகத்தை இந்த இசை நிகழ்ச்சி தணித்தது நிஜம்.

கச்சேரி சாம்பிள் 1

கச்சேரி சாம்பிள் 2