
இன்று காலை நண்பர் சுந்தர்ஜியுடன் அலைபேசியில் உரையாடிய போது, சங்க இலக்கியம் குறித்துப் பேச்சு வந்தது. குறுந்தொகையில் ஏதும் எழுதுங்களேன் எனக் கேட்டார். அப்போது சொன்ன பாடல் இது;
தன் மனதைக் கொள்ளைகொண்ட ஆரணங்கு தன்னை நிலையிழக்க வைக்கும் செய்தியை, தலைவன் தன் தோழர்களுக்கு விவரிக்கும் அழகை இப்பாடல் சொல்கிறது.
குறிஞ்சித்திணையில் சத்தியநாதனார் இயற்றிய 119ஆம் பாடல்
.
சிறு வெள்ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.
பொருள்:-
உடலில் அழகிய வரிகளுடைய வெண்ணிறப் பாம்பின் சிறிய குட்டி எதிர்ப்படும்போது, காட்டுயானை மிரட்சி கொள்வது போலே, முளைவிட்டதே போலும் ஒளிவீசும் பல்வரிசையுடன், கைகளில் வளைகளை அணிந்திருக்கும் அந்தக்கன்னி என்னை மருட்டி வதைக்கிறாள்.
பதவுரை:-
வெள்ளரவு - வெண்ணிற நாகம்
அவ்வரிக் குருளை- அழகிய வரிகள் கொண்ட குட்டி
கான யானை - காட்டுயானை
அணங்கியாஅங்கு- மருட்டுவதே போல
இளையள் - இளம் கன்னி
முளைவாள் எயிற்றள்- முளைவிட்டது போலும் ஒளிவீசும் பற்களுடையவள்
வளையுடைக் கையள் - கைகளில் வளையல்கள் அணிந்தவள்
எம் அணங்கியோளே- என்னை நிலைதடுமாறவிட்டு வதைக்கிறாளே
இதில் சிறிய இளம்கன்னியாகிய தலைவிக்கு பாம்பின் சிறிய குட்டி உவமையாகவும்;
தலைவியின் கைகவளையல்களுக்கு பாம்புக்குட்டியின் உடல்வரிகள் உவமையாகவும்;
பலங்கொண்ட வீரனான தலைவனுக்கு காட்டுயானை உவமையாகவும் கொள்ளலாம்.

அந்தக் காலத்திலிருந்தே நிலைதடுமாறி மிரள்வது ஆண்களுக்கு தலையெழுத்தாய்ப் போச்சு!

Leave a comment
Upload