தொடர்கள்
சினிமா
வித் லவ் - குலசேகர்

20260228001233857.jpg

பால்ய காலத்தில் விட்டகுறை தொட்ட குறை என ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் தொக்கி நிற்கிற நினைவலைகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஒரு நிறைவை தேடி பயணிக்கிற ஒரு ஜோடியின் காதல் கதை இது. எல்லோர் வாழ்க்கையிலும் உள்ள அந்த கதையை சொல்ல நினைத்திருப்பது புதிய அனுபவத்தை தருவதாக இருக்கிறது.

அபிசன் ஜீவிந்த் நாயகன். இவர் தான் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்கியவர். அனஷ்வரா ராஜன் நாயகி. இவர் மலையாளத்தில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பே இந்த படத்தை வேறு ஒரு தளத்தில் தூக்கி நிறுத்தியிருக்கிறது.இரண்டு பேரை சுற்றித் தான் இந்தக் கதை நகர்கிறது. நாயகனின் கதாபாத்திரத்தில் ஆங்காங்கே தடுமாற்றம் தென்படுகிறது என்றாலும், நாயகியின் கதாபாத்திரம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர் தான் இந்தப்படத்தில் நாயகன், நாயகி இரண்டும். அந்த கதாபாத்திரத்தை அனஷ்வரா அநாயாசமாக ஊதித்தள்ளியிருக்கிறார். கதாபாத்திரத்தின் சூட்சுமத்தை கச்சிதமாக உள்வாங்கி அசால்ட்டாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசை நிறைவாக இருக்கிறது. பாடல் தான் யுவன் பாணியில் பழைய பாடல்களை திரும்ப கேட்பது போல இருக்கிறது. அவர் அதை தவிர்த்திருக்கலாம்.பைசனில் இவரது இசை குறிப்பிடுகிற விதத்தில் வந்திருக்கிறது என்பதாலேயே இந்த ஆதங்கம்.அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். நாயகன் கதாபாத்திரத்தில் சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் முதல் அரை மணி நேர காட்சிகள் சுவாரஸ்யமான பிரதேசத்தில் பயணித்தாலும், ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு வருகிற அனஷ்வரா ஃபிளாஷ்பேக் காட்சியிலிருந்து வேகம் பிடிக்க ஆரம்பிக்கிறது. அதன் பிறகு இறுதிவரை ஜெட் வேகம்.திரைக்கதையில் இன்னுங்கொஞ்சம் நேர்த்தியாக பயணித்திருந்தால் ஒரு காதல் காவியமாகவே உருமாறியிருந்திருக்கும். ஆனாலும், இந்தப் புதிய முயற்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் தான் இருக்கிறது.

நாயகன், நாயகியை பெண் பார்க்க ஒரு ஹோட்டலுக்கு செல்கிறான். அவள் ஒரு இன்ஸ்டா பிரபலம். அதிலேயே மார்க்கிடமிருந்து நிறைய சம்பாதிக்கிறாள். கூடுதலாக ஐ.டி பணியும் வைத்திருக்கிறாள். அவளை ஒரு ரசிகன் நெடுநாட்களாக இன்ஸ்டாவில் விடாமல் தொடர்ந்து கொண்டிருப்பதும் நாயகனுக்கு அப்போது தான் தெரிய வருகிறது. அங்கே அவர்கள் ஒருவரை பற்றி ஒருவர் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அப்போது தான் அவர்கள் இரண்டு பேரும் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் சமகாலத்தில் படித்திருக்கிறார்கள் என்கிற விசயம் தெரிய வருகிறது. இரண்டு பேருக்குமே சொல்லப்படாத ஒரு காதல் அந்த பருவத்தில் அரங்கேறியிருக்கிறது. அவர்கள் சொல்கிற விசயம் அவர்களை அந்த கடந்து வந்த வாழ்க்கைக்குள் மறுபிரவேசம் செய்ய வைக்கிறது. அவர்களின் அந்த சந்திப்பு ஒருவரை பற்றி ஒருவருக்கு நல்ல அபிப்பிராயத்தை தந்தாலும், பழகிப்பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

அதற்கிடையே அவர்களுக்குள் ஒரு ஐடியா. இரண்டு பேரும் சொல்லாமல் விட்ட காதலை, அந்த காதலுக்குரியவர்களை சந்தித்து, இப்போது பகிர்ந்து அதற்கொரு நிறைவை கொடுக்கலாமா என்று பரஸ்பரம் கேட்டுக்கொள்கிறார்கள்.அதற்கிடையே அவர்களுக்குள் ஒத்திசைவான மின்சாரம் இரண்டு பக்கமும் உணர்கிறபட்சம் இந்த உறவை பற்றி அதன்பிறகு யோசிக்கலாம் என்று முடிவெடுக்கிறவர்கள்.தங்கள்தங்கள் பால்ய கால சொல்லப்படாத காதலுக்குரியவர்கள் குறித்த தகவலை சேகரிக்க துவங்குகிறார்கள்.

இந்த அசைன்மெண்ட்டை செவ்வனே நடத்துவதற்காகவே நாயகி நாயகன் தனியாக தங்கியிருக்கிற வீட்டிற்கு வந்து அங்குள்ள இரண்டு அறைகளில் ஒன்றில் தங்கிக்கொள்கிறாள்.

அந்த சொல்லப்படாத காதலை சொல்வதற்கான தருணங்கள் அவர்களுக்கு எப்படி அமைகின்றன. அப்போது என்ன நடக்கிறது? அதன் பிறகு அவர்கள் மனநிலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது? என்பதை நோக்கி இந்த திரைக்கதை நகர்கிறது. என்றாலும், நிகழ்காலத்தில் நடக்கிற அவர்களின் அந்த ரெஸ்டாரண்ட் சந்திப்பிலிருந்தே ஒருவர் மீது ஒருவர் ஒரு நல்ல அபிப்பிராயம் விழுந்து விடுகிறது. அது ஒரு வகையில் இந்த பயணிப்பின் சுவாரஸ்யத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தக்கூடிய விசயம் தான். அவர்களுக்குள்ளான டிரான்ஸ்ஃபர்மேஷனை படிப்படியாக நிகழ்த்தி இறுதியில் ஒரு ஆச்சர்யபுள்ளியில் அதை நிகழ்த்தி இருக்கலாம் தான்.

ஆனாலும், இந்த திரைக்கதையில் அவ்வப்போது நிகழும் சில பரவச தருணங்கள் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றன. நாயகன் பள்ளிக்காலத்தில் காதலித்த அனிஷா வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு திருச்சி வந்திருக்கிற சேதி அறிந்து இவர்கள் இருவரும் ரயிலில் திருச்சி செல்கிறார்கள். அப்போது அவள் தற்செயலாக செயின் ஸ்மோகக்ராக இருந்த தன் தந்தை நுரையீரல் புற்றுநோயால் அவஸ்தைப்பட்டு மரித்துப்போனதை சொல்கிறாள். அந்த நொடியிலேயே நாயகன் புகைபிடிப்பதை நிறுத்திவிடுகிறான் என்பது பின்னால் தெரிய வருகிறது. பசியோடு பயணிக்கிற அவர்களுக்கு, ஏதேச்சையாக அதில் பயணிக்கும் நடிகர் சசிக்குமார்(இந்தப்படத்தின் நாயகன் இயக்கிய தனது முதல் படத்தின் நாயகன்) வந்து, ஒரு குறியீட்டுச் செய்தி போல, தன் மனைவி செய்திருந்த கிச்சடியில் கூடுதலாக இருந்த ஒரு பொட்டலத்தை சாப்பிட தந்துவிட்டுச் செல்வார். முன்பு படித்த பள்ளிக்கு அனிஷாவின் விலாசத்தை வாங்குவதற்காக தான் இந்த பயணம். அங்கே அவனின் ஜுனியர் பள்ளியில் தலைமையாசிரியராக உட்கார்ந்திருப்பான். நாயகன் தான் படித்த வகுப்பறையை மறுபடி பார்க்க ஆசைப்படுகிறான்.அவன் மனது அந்த காலவெளிக்குள் மறுபடி ஒரு முறை பயணித்து வர ஆசை கொள்கிறது. பரிட்சை நடந்து கொண்டிருக்கிறது. முடியட்டும் என்கிறான் ஜுனியர். பெல் அடித்ததும் வேகவேகமாக ஓடிப்போய் தான் பிளஸ் டூவில் படித்த வகுப்பறையை பார்க்கிறான். அவனுக்குள் அனிஷாவோடான பழைய தருணங்கள் அத்தனையும் மின்னல் கீற்றுகளாய் மிளிறிப்போகின்றன.

நாயகன் தன் முன்னாள் காதலியை சந்திக்கிற தருணத்திற்கு முன்பாக நாயகியின் கிளாஸ்மேட் ஒருவனின் திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த நிகழ்விற்கு அவர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் சாமிநாதனும் வந்திருப்பது தான். முன்பொரு சமயம் இவரை நாயகன் எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் அறைந்து இருக்கிறான். அதற்கு மன்னிப்பு கேட்க வைக்கவேண்டும் என்பதற்காகவே நாயகி அவனை இந்த நிகழ்விற்கு அழைத்து வந்து, அவர்களை சந்திக்க வைக்கிறாள். நடந்தது இது தான். கண்டிப்பான ஆசிரியராக அந்நாளில் அவர் இருந்திருக்கிறார். ஒரு சமயம் நாயகியின் தோழி ஒருத்தியை இன்றைய மணமகனான அன்றைய வகுப்புத்ததோழன் ஸ்டாக் அறியாப்பருவத்தில் ஆம்பளை திமிரில் ஸ்டாக் செய்ய முற்பட, அதை கவனித்துவிடும், சாமிநாதன் அந்த மாணவனின் ஃபோனில் உள்ள கவர்ச்சிகரமான அந்த பெண்ணின் ஸ்டில்களை அழிக்க வைக்கிறார். பிற்பாடு அவளுக்கு ஆறுதல் சொல்கிறார். அவள் தேம்பிதேம்பி அழ ஆரம்பிக்க, நாயகன் தவறாக புரிந்துகொண்டு ஆசிரியரை அறைந்துவிடுகிறான். அதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவன் மன்னிப்பு கேட்கவே நாயகி அவனை இங்கே அழைத்து வந்திருக்கிறாள்.உண்மை தெரிந்ததும், அவன் தனியாக அந்த ஆசிரியரை அழைத்துக்கொண்டு வந்து தன்னை ஆசை தீர அடிக்கும்படி சொல்கிறான். அவர் செல்லமாக கன்னத்தின் தட்டிவிட்டு, அப்படியொரு சம்பவம் ஏன் நடந்தது? நான் உங்களோடு அன்பாக பழகவில்லை. அதனால் தானே? அந்த சம்பவம் நடந்ததால் தான், கறாராக இருந்த நான், மென்மையான ஆசிரியராக மாறிப்போனேன். அதற்கு உனக்கு நான் நன்றி தான் சொல்ல வேண்டும். நீ கொண்ட அந்த ரௌத்திரம் நியாயமானது. அறத்திற்காக அப்படித்தான் நிற்க வேண்டும்.ஆனால், அதற்கு பிறகு அதன் பின்னால் உள்ள உண்மைகளை தெரிந்து கொள்ள நீ பரிவோடும், கனிவோடும் முயற்சித்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது மட்டுந்தான் வருத்தம் என்கிறார்.அற்புதமான காட்சி அது. இப்படியான சிலிர்ப்பான தருணங்கள் வழிநெடுகிலும் கொட்டிக்கிடக்கிறது.

மறுநாள், நாயகி அவன் அனிஷாவை சந்திக்க சர்பிரைஸாக ஒரு ரெஸ்டாரன்டில் ஏற்பாடு செய்திருப்பாள். நாயகனால் மீளுருவாக்கம் செய்துதரப்பட்டிருக்கிற அந்த தருணத்தின் சாத்தியத்தை நம்பவே முடியாது. அவன் அந்நாளில் அவள் பிறந்த நாளுக்கு தருவதற்காக ஒரு நினைவுப்பரிசை தயார் செய்து வைத்திருந்திருப்பான். அதை எடுத்து அவள் முன் நீட்டுகிறான். அதில் அவன் இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் அனிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பான். அதில் பிரைல் லெட்டரிலான வாழ்த்தும் அடக்கம். அவள் சிலிர்த்துத்தான் போவாள். உடனே சொல்லுங்க என்பாள் பரவச புன்னகையோடு. அவளும் நொடியில் கடந்த கால பயணம் மேற்கொண்டு அந்த கணங்களுள் கரைந்து நிறைந்து போயிருப்பாள். என்ன சொல்லச் சொல்ற? என்பான். சொல்ல நெனச்சதை தான் என்பாள் அவள். அவன் தீர்க்கமாக அவளை பார்த்தபடி, ஐ லவ் யூ அனிஷா என்பான். அவள் தாளமுடியாத நாணத்தோடு,‘ஸாரிடா. ஐ‘ம் மேரிட் நவ்’ என்பாள் ஏக்கம் தொனிக்கும் குரலில். அவன் வாழ்க்கை அந்த நொடியில் ஜென்மசாபல்யம் அடைந்து விடுகிறது. அனிஷா அப்போது சொல்லுவாள். நீ என்னை காதலித்துக்கொண்டிருப்பது எனக்கு அப்போதே தெரியும் என்பாள். அவன் புருவம் உயர எப்படி என்கிறான்.அவள், ‘நான் பொண்ணுங்க’ என்கிற இரண்டு வார்த்தைகள் தான் சொல்கிறாள். அதில் தான் எத்தனைஎத்தனை அர்த்த செறிவுகள். அப்பப்பா.அவள் தொடர்கிறாள். நீ தைரியமாக முன்வந்து காதலை சொல்வாய் என்று காத்திருந்தேன்.உள்ளுக்குள்ளயே வைத்துக்கொண்டுவிட்டாய். அதில் இத்தனை பரவசங்களை ஒளித்து வைத்திருந்திருக்கிறாய்.இதை அப்போதே நீ வெளிப்படுத்தியிருந்தால், என் வாழ்க்கையில் வேறு மாதிரி என்னென்னவோ நடந்திருந்திருக்கும் தான் என்று சொல்லி மையலாக ஒரு புன்னகை பூப்பாள் அதில் அவளின் வாழ்வும் ஜென்ம சாபல்யம் அடைந்து விடுகிறது.

அந்த கண்கொள்ளா காட்சியை வெளியே இருந்து நாயகி பார்க்கிறதில் அவளுக்குள் அப்படியொரு நிறைவு. நாயகியின் கதாபாத்திரம் திருத்தமாக எழுதப்பட்டிருக்கிறதை இதன்மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்கு காதலின் பக்குவம் வசப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக, நாயகி பள்ளியில் காதலித்த பாலாஜி கிளாஸ் ஃபஸ்ட். பயந்த சுபாவம். எந்த அளவு பயந்த சுபாவம் என்றால், பரிட்சையின்போது அருகில் அமர்ந்திருக்கும் நாயகி அவன் பேப்பரை பிடுங்கி காப்பி அடித்துவிட்டு திருப்பித் தருவாள்.அப்போது அவன் மாட்டிக்கொள்ள, அந்த தருணத்திலும் அவன் நாயகியை காட்டிக் கொடுப்பதில்லை.

அடுத்து நாயகனின் மூலம் பாலாஜியை தேட ஆரம்பிக்கிறார்கள். நாயகி துடுக்கானவள் தான். அவள் அவனிடம் அப்போதே காதலை சொல்லியிருந்திருப்பாள்.எதிர்பாராமல் நாயகன் அனிஷாவை ஜுனியர் ஒருவன் ரூட்விட பின்தொடர்வதை அறிந்து அவனோடு கட்டி உருள, அப்போது பார்த்து நடந்து செல்லும் நாயகியிடம் பாலாஜி, ஏதோ சண்டை நடக்கிறது. வேகமாக வீட்டுக்கு போய்விடு என்று சொல்லிவிட்டு சைக்கிளில் பறந்துவிட, அந்த விசயத்தை நாயகி தன்னுடைய ஹாஸ்டல் மேட்டிடம் குறிப்பிடும்போது அவன் ரொம்ப பயந்த சுபாவம் என்று சொல்லி வைக்க, அவள் அவனை பார்க்கிறபோது கலாய்ப்பதாக நினைத்துக்கொண்டு, ஆசிரியர் விளையாட்டு தினம் பற்றி பேசும்போது, பாலாஜியை ரன்னிங்ல போடுங்க சார். சூப்பரா ஓடுவான் என்றதும் அவன் முகம் சுருங்கிப்போய் விடுகிறது. அதனாலேயே சொல்ல வந்த காதலை சொல்லமுடியாமல் அப்போது நாயகி தள்ளித்தள்ளி போட வேண்டி ஆகிறது.

இப்போது அவன் இருக்கிற இடம் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது. நாயகியை, நாயகன் பாலாஜியை சந்திக்க அவனுடைய அபார்ட்மெண்டிற்கு அழைதுச் செல்கிறான்.அப்போது இருவரும் அன்போடு தழுவிக்கொள்கிறார்கள்.அங்கே அவன் இப்போதும் நாயகியின் நினைவிலேயே வேறு கல்யாணம் எதுவும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவது தெரிய வருகிறது. அதை வெளியிலிருந்து அவதானிக்கும் நாயகன் வழக்கம் போல பொறாமையாலும், பொஸசிவ்னெஸாலும் புழுங்க ஆரம்பிக்கிறான். ஓடிப்போய் வழக்கம்போல ஒரு ஃபுல் அடித்துவிட்டு அனைவருக்கும் ஃபோன் போட்டு புலம்பிவிட்டு மட்டையாகி விடுகிறான்.

நாயகி என்ன செய்வதென்று சற்றே தடுமாறுகிறாள். ஒரு பக்கம் முன்னாள் காதலன். மறுபக்கம் இந்நாள் காதலன். அவர்கள் உரையாடல் மூலமாக ஒரு ரசிகன் ஃபேக் ஐடியில் நாயகியை தொடர்ந்து பின்தொடர்ந்து கொண்டு இருந்தான் அல்லவா அந்த நபரே இவன் தான் என்பது தெரிய வருகிறது. அதனால் அவள் நீ பாஸ்ட். நாயகன் தான் என்னுடைய பிரஸன்ட் என்று சொல்லித் திரும்புகிறாள். வழக்கம்போல நாயகன் நிபந்தனையற்ற மன்னிப்பை வாயால் கேட்கிறான்.நாயகனோடு, நாயகி சேருகிறாள். இதன் கதையமைப்பில் சில இடங்களில் தடுமாற்றங்கள் இருந்தாலும், ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த படைப்பில் பல அற்புதமான காதலின் தருணங்கள் இருக்கின்றன. அவை கொண்டாடத்தக்கவை.