தொடர்கள்
ஆன்மீகம்
இராமாயணத்தில் கேள்விகளுக்கு பதில் தருகிறார் டாக்டர். உ.வே. வெங்கடேஷ் ஸ்வாமி :1 - பால்கி

20260323133644543.jpeg

கடந்த 4 ஏப்ரல் 2026 இதழில் டாக்டர் உ. வே. வெங்கடேஷ் ஸ்வாமியைப் பற்றிய கட்டுரை நமது விகடகவியில் வெளி வந்தது. இதோ அந்த கட்டுரைக்கான லிங்க்.

https://www.vikatakavi.in/magazines/472/15797/with-Dr-U-V-Venkatesh.php

இராமாயணத்தில் நமக்கெழுந்த கேள்விகளைக் கேட்டிருந்தோம். அதற்கு அவரது பதில்கள் இந்த வாரம் முதல் வெளி வரும்.

  1. கேள்வி : ராமர் பாலத்தை ஏன் பாதுகாக்கவோ அல்லது முக்கியப்படுத்தவோ நாம் செய்வதில்லை?

பதில் : ராமர் பாலம் காலப் போக்கில் இயற்கை மாறுபாடுகளால் கடலுக்கு அடியில் அழுந்திப் போனது, இயற்கைச் சீற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. எல்லாம் இறைவன் திருவுள்ளம். ஆனால் இன்றும் சேது தரிசனம் செய்பவர்க்கு எல்லாப் பாபங்களும் நீங்கும். அதில் ஐயமில்லை.

அடியேனின் பரமகுரு வில்லூர் ஸ்ரீநிதி ஸ்வாமிகள் தமது மஞ்சு ராமாயணத்தில் சொன்ன கருத்து: ராமன் திருவடியின் ஒரு சிறு துகள் அகலிகை சாபத்தைப் போக்கியது. நாம் செய்த மொத்தப் பாபங்களையும் போக்கும் பொருட்டு ராமன் திருவடி பட்ட கடற்கரை மண்ணைக் கொண்டு வானரர்கள் சேது பாலத்தை அமைத்தனர். எனவே அதன் தரிசனமே நமக்கு எல்லா நன்மைகளையும் தரும்.

எனவே திருப்புல்லாணி சேது கரை தரிசனம், சேது ஸ்நானம் இவற்றின்‌மூலம் நாம் நிச்சயம் ராமனின் நல்லருளைப் பெறலாம்

  1. கேள்வி : ராம ராஜ்யத்தின் உண்மை தத்துவம் என்ன?

பதில் : ராம ராஜ்ஜியத்தில் மக்கள் அனைவரும் தர்மப்படி வாழ்ந்தார்கள் என்பதை முக்கியமாகக் குறிப்பிடுகிறார் வால்மீகி

அதாவது, மக்கள் அறவழியில் வாழத் தொடங்கினால், தலைமையும் அதற்கேற்றபடி அமைந்துவிடும்

நம்‌மனதில் வேறு விதமான எண்ணங்கள் உண்டாக உண்டாக, அதற்கேற்ற ஆட்சி தான் அமையும்

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைத் தானே திருத்திக் கொண்டு, அறவழியில் வாழ்ந்து, ஆன்மீகத்தில் முன்னேறுகையில், அரசும் ராம ராஜ்யமாக ஆகிவிடும்.

  1. கேள்வி : ஆதிகாவியம் வால்மீகி ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 8.70 லட்ச வருஷங்களாயிற்று.

அதனால் தான் இந்த கலியில் தோன்றிய ராமாயணங்களில் இடைச் செருகலும் உத்தர காண்டம் போன்றவை...

பதில் : நம் இதிஹாஸ புராணங்களை உபதேச முறையில் பத்ததியாகப் பெரியோர்கள் சொல்லி வந்துள்ளார்கள், அந்த ஒலி வடிவைப் பாதுகாத்து வந்துள்ளார்கள்

எனவே நடுவில் யாரும் இடைச்செருகல் நுழைக்க முடியாது

வால்மீகி சுலோகத்துக்கு என்று ஒரு பாணி உண்டு, அதுபோல் வேறு‌யாரும் இயற்ற முடியாது, இயற்றிச் சேர்த்தால் கண்டுபிடிப்பதும் எளிது

முன் காலத்திலிருந்து ராமாயணத்துக்குப் பெரியோர்கள் செய்த வ்யாக்யானங்கள் உள்ளன, அந்த வ்யாக்யானங்களில் உள்ள சுலோகங்களின் வரிசையையே இன்றும் பின்பற்றி வருகிறோம்

வால்மீகியே சுலோகங்கள் எண்ணிக்கை, ஸர்க எண்ணிக்கை எல்லாம் ராமாயணத் தொடக்கத்தில் தந்து விட்டார்

எனவே இடைச்செருகலுக்கு வேலை இல்லை

உத்தர காண்டமும் வால்மீகி செய்ததே

  1. கேள்வி : ராமன் தன் கணையாழியை சரியாக எப்படி ஆஞ்சனேயர் கையில் கொடுத்தார்? தெய்வச்செயலா...வேறு காரணமா?

பதில் : ராமாயணத்தில் சொல்லப்பட்ட காரணம்: சுக்ரீவன் அனுமன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்தார் ராமன். எஜமானனின் நம்பிக்கைக்குப் பாத்திரம்க ஒரு சேலகன் இருக்கிறான்‌ என்றால், அவன்‌நிச்சயம் சாதிப்பான் என்று நம்பினார்.

மேலும், அனுமனின் திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றை ராமனும் கவனித்து மெச்சி இருக்கின்றார்

வேதாந்த ரீதியில் பார்த்தால், மோதிரம் என்பது ஒருவித அனுமதி. ராமன் பரமாத்மா, சீதை ஜீவாத்மா, ராமதூதன் அனுமான் தான் குருவாகிற ஆசார்யன்.

இறைவன் குருவுக்கு அனுமதி தந்து அவரைத் தன் பிரதிநிதி ஆக ஆக்கி, ஜீவாத்மாவை நோக்கி அனுப்பி வைத்து, தன் செய்தியை குரு மூலம் தெரிவிக்கிறார்.

இன்னும் வரும்.....