தொடர்கள்
அழகு
டாக்டர் உ வே வெங்கடேஷ் சுவாமிl - பால்கி

20260303125946521.jpeg
ஸ்ரீராம நவமியில் முக்கியமாக இடம் பெறுவது ராமாயணம் பற்றிய சொற்பொழிவு.

கிராமங்களில் தெருக்கூத்தும் ஒரு வாரம் முன்பேயே ஆரம்பித்துவிடும்.

மும்பையில் பக்தர்களுக்காகவே மாலை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உபன்யாசங்கள் விமரிசையாக நடக்கும்.

மும்பை கோரேகாவ்(ன்) பங்கூர் நகரில் இருக்கும் ஸ்ரீ ராம் மந்திரில் 27 மார்ச்சிலிருந்து ஏப்ரல் 6 வரை இந்த ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டங்கள் நடை பெறுகின்றன. வால்மீகி ராமாயணத்தை டாக்டர் உ வே வெங்கடேஷ் சுவாமி உபன்யாசம் செய்து வருகிறார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், சமஸ்கிருதத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர். ஆதலால், இவ்விரு மொழிகளில் வார்க்கப்பட்ட நூல்கள், குறிப்பாக ஆழ்வார்களின் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், ராமாயணம், மகாபாரதம், மற்றும் ஸ்ரீபாஷ்யம் போன்ற தத்துவ நூல்களை கற்று அறிந்தார்.

20260303130203334.jpeg

ஸ்ரீரங்கம் சிறுபுலியூர் அண்ணன் சுவாமி, மற்றும் டாக்டர் ஸ்ரீ உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி ஆகியோரிடம் ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத் விஷயம் போன்ற பாரம்பரிய நூல்களைக் கற்றுக்கொண்டார்.

2010-ல் தனது 20-வது வயதிலேயே நாச்சியார்கோயில் கல் கருட சேவையில் முதல் உபன்யாசத்தை நிகழ்த்தினார்.

இவரது முக பாவனைகள், உணர்ச்சி ததும்பும் பேச்சு, சொற் பிரயோகங்கள், சொற்களுக்குரிய பாசத்தோடு கூடிய வசன உச்சரிப்பு இவரின் சொத்து. கேட்ப்போரைத் தன் உபன்யாசத்தில் கட்டிப்போட்டு விடுகிறார். காலத்திற்கேற்ற உவமைகள் தருவது இவரது கலை.

20260303130244441.jpeg

டாக்டருக்குப் படித்தவர், இளம் வயதினர் என்பதால் இளைஞர்களிடையேயும் ரொம்ப பாப்புலர்.

20260303130350393.jpeg

கடந்த ஒரு வருட காலமாக நாலாயிர திவ்ய பிரபந்தப் பாசுரங்களின் விளக்கத்தை தினந்தோரும் திவ்யபிரபந்தம் என்ற நிகழ்ச்சியை தினமும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் இந்த திருநூலை முடித்திட இன்னும் பத்து வருடங்களாகும்.

20260303130432216.jpeg

இதற்கு முன் அதே தொலைக்காட்சியில் ஆயிரம் நாமங்களும் ஆயிரம் கதைகளும் என்று ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அவை 100 நாமாக்களின் கதைகளுக்கு ஒரு புத்தகமென என்ற ரீதியில் ஐந்து தொகுதிகளாக வெளி வந்துள்ளன. மீதமுள்ளவையும் விரைவில் வரும்.

அவரது மொழிப்புலமை, சொல்லும் விதம் எடுத்துக்கொள்ளும் தலைப்பில் அந்த தலைப்பில் வந்த பல நூல்கள், உரைகள் யாவற்றையும் தொகுத்து எளிய தமிழ் நடையில் வழங்கி வருவது தான் அவரது தனித்துவம்.

சாம்பிளுக்கு சில,

மாய மான் பின்னால் சென்ற ஸ்ரீராமனின் கூக்குரல் கேட்டு லக்ஷ்மணனை சீதா தேவி அனுப்புகையில் லக்ஷ்மண் ரேகா என்ற கோடு போட்டுவிட்டுப் போனது ஆதி காவிய வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்று பக்தரை நினைவூட்டுகிறார்.

மிகவும் முக்கியமாக, மறைந்திருந்து வாலியை ஸ்ரீராமன் தாக்கியது தவறா சரியா என்று களம் களமாக இன்றும் ஸ்ரீ ராமன் செய்தது தவறே என்று நடுவர் கூற்று அவர் ஆதி காவியத்தைக் கற்றறியாதவர் என்பதையே காட்டுகிறது என்றும் நமது டாக்டர் அறுவை சிகிச்சை செய்கிறார், ஐ மீன், சாடுகிறார்.

வாலி சுட்ட ஆறு கேள்விகளும் அதற்கு ஸ்ரீராமன் தந்த பதில்களும், அதன் பின்னர் வாலியும் இசைந்தது என்ற சம்பவங்களால் இந்த சம்பவம் அன்றே முடித்தும் வைக்கப்பட்டுவிட்டது. இருந்தும், இந்த கலியுகத்தில் இதை பொழுது போகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே பட்டி மன்றங்களில் என்று அங்கலாய்க்கிறார் டாக்டர்

20260303130638170.jpeg

[எல்கேஜி படித்துக்கொண்டிருக்கும் மகள், ஷ்ரத்தாவுடன்]

சுமார் எட்டரை லட்ச வருடங்களுக்கு முன்னால் நடந்த காதையயினும் இன்றும், இந்த கலியுகத்திலும் எந்த துறையிலும் – இறையாண்மை, அரசியல், வாழ்வு நெறி, குடும்பம், குடும்ப உறவு, சுய கட்டுப்பாடு, மேலாண்மை கோட்பாடுகள், பொது மக்களின் உரிமைகள் கடமைகள் முதலியன போன்றவற்றைக் கையாளும் முறைகளை அன்றே சொல்லிவிட்டது என்பதை மிகத் தெளிவாக சொல்லிவிட்டார் டாக்டர் வெங்கடேஷ்.