தூங்கும் டெல்லி !!

தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பு மனு தாக்கல் ,தேர்தல் பிரச்சாரம் என்று படு ஜோராக நடக்கிறது.
தேசியக் கட்சிகளான பாஜகவும் ,காங்கிரஸ் கட்சியும் தங்கள் கூட்டணி கட்சித் தலைமையிடம் மல்லுக்கட்டி வாங்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே இன்னும் அறிவிக்கவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் உதயசூரியன் சின்னத்தில் வோட்டு போடுங்கள் ....
பிற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர்கள் சின்னத்தை சொல்லி அவர்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லிவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை ராகுல் காந்தி அறிவித்ததும் அவருக்கு கைச் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறார்.
மயிலாப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
அப்போது அவருடன் இருந்து கைகூப்பி வாக்கு கேட்ட தமிழிசை சௌந்தரராஜனை பக்கத்தில் வைத்துக் கொண்டு இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிக்கப்படாததால் எடப்பாடி தமிழிசைக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவில்லை.
தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை போட்டியிட்டு பதவி சுகம் அனுபவித்தவர்களை ஓரம் கட்டி விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க என்று நினைக்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதல் புதியவர்களுக்கு வாய்ப்பு என்று அவர் திட்டமிட்டாலும் கட்சியில் உள்ள அழுத்தம் காரணமாக அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை.
இந்த முறை அது நிச்சயம் செயல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார் ராகுல் காந்தி.
தமிழக காங்கிரஸ் தந்த பட்டியலை ராகுல் காந்தி ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கிறார் .
ஒரு கட்டத்தில் செல்வப் பெருந்தகை, கார்கே ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பணம் வாங்கிக்கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்ததாக ராகுல் காந்தியிடம் முக்கிய நிர்வாகிகள் புகார் சொல்லியிருக்கிறார்கள்.
ராகுல் காந்தி நேரடி தொடர்பில் இருக்கும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இதை நேரடியாகவே ராகுல் காந்தியிடம் சொல்லி இருக்கிறார்.
தவிர தனது சமூக வலைதளத்தில் செல்வப் பெருந்தகையை கண்டித்து கருத்துக்களை பதிவு செய்தார் ஜோதிமணி. பட்டியல் தாமதத்திற்கு ஜோதிமணி ஒரு முக்கிய காரணம்.
நேற்று இரவு நீண்ட ஆலோசனைக்கு பிறகு அதாவது வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் நிருபர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை வேட்பாளர் தேர்வு 85 சதவீதம் முடிந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார்..
அது எந்த அளவு உண்மை என்பது அவருக்கே வெளிச்சம்.
இப்போதைக்கு இதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைமை.

பாஜகவை பொருத்தவரை வேட்பாளர் தேர்வுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என்று சொல்லப்படுகிறது.
அண்ணாமலையை முதலில் தேர்தல் பொறுப்பாளராக சில தொகுதிகளுக்கு நியமித்த போது என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை நான் குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனவே பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியை பார்ப்பதாக அறிவித்தார்.
நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் சொன்னார். இதனால் அண்ணாமலைக்கு ஒதுக்கப்ப்பட்ட தொகுதியை பாஜக அதிமுகவிடம் வாங்கவில்லை.
நயினார் நாகேந்திரனே இப்போதுதான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதி தனக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடியிடம் சாத்தூர் தொகுதியை வாங்கி இருக்கிறார்.
நான் இந்த முறை சாத்தூர் தொகுதியில் போட்டி போட போகிறேன் என்றும் அறிவித்தார் நயினார்.
ஆனால், பாஜக எதாவது கோக்குமாக்கு வேலை செய்து ஆட்சியை கைப்பற்றும் என்று தனக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் அண்ணாமலை மீண்டும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்.
கோவை வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட விரும்புகிறார்.
வானதி சீனிவாசன் சென்ற முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அந்த தொகுதி சரியில்லை என்று கோவை வடக்கு தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி இருக்கிறார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட போகிறார் என்பது முன்கூட்டியே வானதிக்கு தெரிந்தது என்பதுதான்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பலமுறை அண்ணாமலையை அழைத்தும் அவர் பங்கேற்கவில்லை.
தொகுதி பங்கீடு இறுதி செய்ய பியூஷ் கோயல்,நயினார் ,தமிழிசைச் சென்றபோது அண்ணாமலை போகவில்லை. இப்போது டெல்லிக்கு அழுத்தம் தந்து போட்டி போட விரும்புகிறார்.
வேட்பாளர் பட்டியல் காலதாமதத்திற்கு அண்ணாமலை தான் காரணம்.
அண்ணாமலை தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு கட்சியை முன்னுறுத்தி கட்சிக்காக எதுவும் செய்வதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு அண்ணாமலை மீது இருக்கிறது.
எப்படியோ ஒரு வழியாக முதலில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வந்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
மேலூர் தொகுதிக்கு நான் சொல்பவரை தான் நிற்க வைக்க வேண்டும் கார்த்திக் சிதம்பரமும்,மாணிக் தாக்கூரும் மல்லு கட்டுகிறார்கள் அந்த பஞ்சாயத்துக்கு பிறகு மேலூர் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பாரதிய ஜனதாவை பொறுத்தவரை அண்ணாமலையை இந்த முறை ஓரம் கட்டி விட்டார்கள்.
தொடர் தோல்விகளை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அண்ணாமலை நான் தேர்தல் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் வேட்பாளருக்கு வாழ்த்தும் சொல்லியிருக்கிறார் .ஆனால் வேட்பாளர்கள் கூப்பிடுவார்களா என்பது சந்தேகம்தான் குறிப்பாக அதிமுக வேட்பாளர்கள்.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் எல்.முருகன் இந்த முறை சட்டசபை களத்தை சந்திக்க இருக்கிறார். மொத்தத்தில் தேசியக் கட்சிகள் அரசியல் சடுகுடுகளுக்கு தயாராகி விட்டது.

Leave a comment
Upload