
அவனுக்கும் அவளுக்கும் எந்த ஒரு விஷயத்திலும் விவாதம் செய்யாமல் இருக்க முடியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுக்கவும் மாட்டார்கள். அந்யோன்ய தம்பதி என்று சொல்லிவிட முடியாது.
வீட்டிற்கு வரும் மனிதர்களை உபசரிப்பதில் மிக நல்லவர்கள். நன்கு கவனித்து அனுப்புவார்கள்.
நடுவில் இவர்கள் பிரச்சினையும் இருக்கும்.
ஒருமுறை பக்கத்து வீட்டு மனிதர் மனைவியை ஏதோ திட்டிக் கொண்டே இருந்தார். அன்றாடம் நடக்கும் விஷயம் என்றாலும் இன்று பெண்களை மொத்தமாக தவறு சொல்வது போல் இருந்தது. அவர்கள் வீட்டு ஹாலின் வெளியே உள்ள பால்கனி வழியாக இவர்கள் வீட்டுக் கிச்சனுக்குள் வந்து விழுந்தன வசவுகள்.
“மாமா நீங்க பேசறது சரியில்லை. என்ன ஒங்களுக்கு பெண்கள்னா அத்தனை எளக்காரம்? ஒங்க ஈகோ, நீங்க பண்ண தப்பை மறைக்க எதுக்கு பொண்ணுங்களை சாடணும்?” லகே லகே என்று கிளம்பி வந்து அவர்கள் போர்ஷனில் போய் கத்த ஆரம்பித்தாள்.
ஆங், இவங்க பேரெல்லாம் சொல்லவே இல்லையோ? நம்ப தம்பதி பேரு உமா, ஹரி.
பக்கத்து வீட்டுக்காரர் பேரு கோவிந்த், மனைவி பெயர் ஆர்த்தி.
ஆர்த்திக்குப் படபடப்பாய் இருந்தது. இந்த மனுஷன் எதாவது வார்த்தையை விட்டால் என்ன செய்வது? இருந்தாலும் உமாவின் கேள்விகள் ஆறுதலாய்த்தான் இருந்தது.
“என்ன சொல்லிட்டேன், ஏதோ எங்க வீட்டுல பேசறத நீங்க ஏன் கேள்வி கேக்கறீங்க?” – கோவிந்த்.
“என் காதுல விழுந்ததாலதான் நான் வந்தேன். பெண்கள்னா நீங்க சொல்றத மட்டும் கேட்டு நடந்தா நல்லவங்க. எங்களுக்குத் தோணியதை சொன்னாலோ, செஞ்சாலோ தப்பு. அப்டித்தானே?” – உமா
“அந்தக் குக்கரை வாங்கும்போது என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். நாலு கடையில விசாரிச்சுட்டு....”
“நிறுத்துங்க, அவங்க பழைய குக்கரை போட்டுட்டு பழைய பாத்திரத்தைப் போட்டு ஒரு குக்கர் வாங்கிருக்கா. இருக்கட்டுமே. அவாளுக்கு புடிச்ச மாதிரி வாங்கிருக்கா. இந்த விஷயம் ஐநா சபைக்கு போய்டும் போல இருக்கு. வீடு கட்டினிங்களே, எங்க சௌகரியப்படியா கேட்டு கட்டறீங்களா? இல்லை. பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி அமையும். எத்தனையோ விட்டுக் குடுக்கறோம். சின்னச் சின்ன விஷயத்திற்கு கத்தினா, எங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரியும், எதுவுமே பேசக்கூடாதுன்னும் சொன்னா எப்பிடி?” உமா கொந்தளித்தாள்.
கோவிந்தனுக்கு உள்ளூர ஆர்த்தி முன்னாடி அவமானமாக உணர்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“பாத்துப் பேசுங்க. எல்லாரையும் ஒரே மாதிரிப் பேசக்கூடாது. நெனைக்கவும் கூடாது. எனக்கு வருத்தந்தான்”சொல்லிக் கொண்டே வந்தாள் உமா. அன்றைய பொழுது ஏதோ ஒரு மாதிரி போனது. ஹரிக்கு உள்ளூர பயம்தான். மறுநாள் எழுந்து ட்ராக்ஸ் அணிந்து கொண்டு வாக்கிங் போவதற்கு கிளம்பினான்.
என்றும் இல்லாத திருநாளாய் கோவிந்தனும் வாக்கிங் வந்தான்.
“அப்றம், எல்லாம் எப்டி போகுது? சீக்கிரம் கிளம்பீட்டீங்க போல இருக்கு?” மென்று விழுங்கினான் ஹரி.
“அதிருக்கட்டும், நேத்து என்ன, பொண்டாட்டி ஏத்தி விட்டுட்டு வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருந்தீங்க. நாலு வார்த்தை பேசலாமில்ல?” கோவிந்த் கோபமாக கேட்டதும் ஹரிக்கு என்னவோ போலானது. இது என்னது, குழந்தைகள் விளையாடுவது போல் கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நிற்கிறான் என்று தோன்றியது.
இருந்தாலும் மனைவியை விட்டுக் கொடுக்காமல், நீங்க அப்பிடி பேசினது மட்டும் சரியா? மனைவி கிட்ட ஈகோ பாக்காதீங்க. ஒரு வாரம் அவங்க ஊருக்குப் போனாலே வீடு நாறீருது. அப்புறம் எதுக்கு வீண் ஜம்பம்” என்றான்.
கோவிந்திற்கு அவமானமாய் போய்விட்டது. தானும் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிவிட்டோம் என்று தோன்றியது. “சாரி” என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினான்.
இப்போதெல்லாம் கோவிந்தும் உமாவும், ஹரியும் ஆர்த்தியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டிருந்தனர்.

Leave a comment
Upload