
உலகம் முழுவதும் பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் குறித்து விவாதிக்கப்படும் இந்த நூற்றாண்டில், மத அமைப்புகளிலும் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று, காந்தர்பெரி பேராயராக (Archbishop of Canterbury) ஒரு பெண் நியமிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகக இது கருதப்படுகிறது.
காந்தர்பெரி பேராயர் (Archbishop of Canterbury) என்பது உலக கிறிஸ்தவ மதத்தில் மிக முக்கியமான பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) உயர்ந்த ஆன்மிகத் தலைவராக இவர் கருதப்படுகிறார். இது மத அடையாளத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய சின்னம்.காந்தர்பெரி பேராயர் பதவி முதன்முதலில் 6ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில் கிறிஸ்தவம் இங்கிலாந்தில் பரவத் தொடங்கியபோது, இந்தப் பதவி முக்கியத்துவம் பெற்றது.காந்தர்பெரி நகரில் அமைந்துள்ள பேராலயம் (Canterbury Cathedral) இந்தப் பதவியின் மையமாக உள்ளது. இங்கு பல முக்கிய மத நிகழ்வுகளும், வரலாற்றுச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. காந்தர்பெரி பேராயர், இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள ஆங்கிலிக்கன் திருச்சபைகளுக்கும் ஒரு ஆன்மிக வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
2026 மார்ச் 25 அன்று, டேம் சாரா முல்லாலி அவர்கள் 106வது காந்தர்பெரி பேராயராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இதன் மூலம், 1,400 ஆண்டுகளைக் கொண்ட வரலாற்றில், இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் முதல் பெண் என்னும் பெருமை பெற்றுள்ளார். செவிலியராகவும், லண்டன் ஆயருமான(Bishop of London இவர், காந்தர்பெரி பேராலயத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் பதவியேற்றார். இந்த விழாவில் இங்கிலாந்தின் அரசியல் தலைவர்களும், அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், காந்தர்பெரி பேராலயத்தில் பெண்கள் மணி அடிப்பார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தன் முதல் பேருரையில் (sermon) காந்தர்பெரி பேராயராக உரையாற்றிய டேம் சாரா முல்லாலி, “என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது, கடவுளில் நம்பிக்கை வைத்து, இயேசுவை பின்பற்ற உறுதி எடுத்த இளமைக் கால சாராவைப் நினைக்கும் போது, எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதை நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை; குறிப்பாக, இப்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்தத் தெய்வப்பணியை நான் எதிர்பார்க்கவில்லை.” என்று கூறி, மத்திய கிழக்குப் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு தனது பிரார்த்தனைகளை தெரிவித்தார்.
ஒரு பெண் காந்தர்பெரி பேராயராக நியமிக்கப்பட்டது, வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தாலும், இவர் முன்னே இருக்கும் சவால்கள் பல. அதிலும் குறிப்பாக, சிலர் பெண்கள் மதத் தலைவர்களாக இருக்கக் கூடாது என்ற கருத்தை இன்றும் கூறுகின்றனர். இதனால்,தனது திறனை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் சாராவுக்கு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சவால்கள் இருந்தாலும், இந்த மாற்றம் ஒரு நல்ல எதிர்காலத்திற்கான பாதையை உருவாக்கியுள்ளது. பெண்கள் எந்த ஒரு துறையிலும் முன்னேற முடியும் என்பதற்கு இது ஒரு வலுவான சான்று.

Leave a comment
Upload