தொடர்கள்
கதை
மறதி - பா.அய்யாசாமி

2026030406431315.jpg

மொபலை கீழே வச்சுட்டு கொஞ்சம் ஆத்து வேலையையும் பார்க்கலாமே! என்றதும் தூக்கி வாரிப்போட்டது அய்யாசாமிக்கு.

நான் ஒன்றும் ஷாட்ஸ் பார்க்கலை, ஆர்கானிக் ஸ்நாக்ஸ் பன்றதைதான் பார்க்கிறேன் என்றதும்,

அத நான் பார்த்துக்கிறேன், நீங்க மில்லுக்குப் போய் மாவை நைசா அரைச்சுண்டு வாங்கோ என்றாள் ருக்கு.

நைசா ஏன் போகணும்,

யார் பார்த்தால் என்ன?! என்றதும்

தலையில் அடித்துக் கொண்டாள் ருக்கு.

ம்.க்கும்.

(அது அவர்களது முப்பது வருட குடும்ப அனுபவத்தின் நெத்தியடி)

கோலமாவுக்குனு நினைச்சுண்டு

கொர கொர னு அரைச்சிடுபோறார்..

அதனாலதான் சொல்றேன்... நைசா அரைங்கோன்னு சொல்லுங்கோ மில்லுக்காரரிடம் என்று கடுகடுத்தாள்.

புரிஞ்சுடுத்து...

என்று மில்லுக்கு கிளம்பியவர் எதிரே ஆம்புலன்சு வாகனம் ஒன்று தெருவிற்குள் வந்தது.

யார் வீட்டிற்கு போறது என நின்று பார்த்தபோது எதிர் பக்கத்தில் உள்ள ரிடையர்டு போஸ்டு மாஸ்டர் ஆத்திற்குப் போய் நின்றது வாகனம்.

ருக்கு...உடம்பிற்கு முடியாமல் ஆஸ்பத்திரியிலே இருந்த போஸ்ட்டல் மாமா தவறிட்டார் போலிருக்கு..பாடி வந்திருக்கு என்றபடி, ஓட்டமும் நடையுமாக ஓடினார் அய்யாசாமி.

மாமாவின் பாடியை கைத்தாங்கலாக எடு்த்துபோய் கூடத்திலே கிடத்தினார்கள்...

ஐயோ..மாமா என அலறலில் அக்கம்பக்கம் கூடிவிட்டனர்..

அரிசி எங்கே வச்சுருக்கேள்! விளக்கு எங்கே? என பரபரத்த அய்யாசாமி அடுப்படிக்குச் சென்று தேடி ஒரு பித்தளை அடுக்கில் அரிசி ஒரு படி எடுத்துப்போட்டு விளக்கையும் ஊதுபத்தி ஏற்றி மாமாவின் தலைமாட்டில் வைத்தார்..

அழுதுண்டே இருந்தால் மத்தவாளுக்கெல்லாம் எப்படி தகவல் செல்றது? என மாமியிடம் புலம்பியபடி வெளியேவந்தவர் யாரையோ கூப்பிட்டு வேலை ஒன்றினை சொல்லி அனுப்பினார்

உள்ளே சென்று ஓடும் கடிகாரத்தை நிறுத்தினார்..

மாமாவின் போனை வாங்கி அதிலுள்ள எண்களுக்கெல்லாம் தகவல் சொன்னார்.

சொன்னதில் ஒருத்தர், எப்போது எடுப்பேள்னு கேட்டுட்டார் போல.. அவரை

ஒய்! உமக்கு ஏதாவது இருக்கா? இப்போதான் தகவலைச்சொல்றேன் கேட்டுக்காமல் உடனே எப்போது எடுப்பேள்னு என்ன கேள்வி? என அவரை அதட்டினார்...

நாங்கள் வண்டி பிடித்து வரணுமில்லே, வேலை கிடக்கு அதான் ஒய் கேட்டேன் என்றதற்கு...

முடியலைனா வரவேண்டாம் உன் செளகரியத்திற்கா எடுப்பாங்களா?! பார்க்கவேண்டியவா பார்க்கவேண்டாமா? பொறுமையாக நீர் கேட்டிருக்கனும் ஒய்...

என பிலுபிலுவென பிடித்துக்கொண்டிருந்தார் எதிரில் போன் பேசியவரை..

கொள்ளைபக்கம் சென்று தெண்ணை ஓலை வெட்டச் சொல்லி வாசலில் போட்டார்..இப்படி பல பணிகளுக்கிடையே

ஒரு மணிநேரம் கடந்திருக்கும், அசதியாகி உட்கார்ந்து தனது கையைப் பிசைந்த அய்யாசாமிக்கு தனது விரலில் இருந்த நவரத்ண மோதிரம் கையில் காணதது தெரிய வந்தது.

எங்கே விழுந்திருக்கும்?! உள்ளே சென்று தேடினார்..

போஸ்டல் மாமாவின் மனைவி என்ன தேடறேள்? என கேட்டாள்.

பாவம் அவாகிட்ட சொல்லி மனசு சங்கடப்பட வேண்டாமென ஒன்றுமில்லை என்று நகர்ந்தார்.

பார்ப்பவரெல்லாம் என்னவென்று கேட்க ஒன்றுமில்லை என்று சொன்னாலும் மனசு முழுவதும் தங்கத்தின் விலையும்,ருக்குவின் முகமும் நினைவுக்கு வர பதட்டமடைந்தார்.

தல தீபாவளிக்கு அவாத்தில் போட்டது அந்த மோதிரம். கொஞ்சம் லூசா இருக்குனு சொன்னதுக்கு, அது மட்டுமா என்ற ருக்கு, நூல் சுற்றி சரி பண்ணிடலாம் போட்டுக்கோங்கோ என்றது நினைவிற்கு வந்து கவலையடைந்தார்.

என்ன ஆச்சு மாமாவிற்கு?! என கேட்டபடி வந்தார் தெருகோடி ரங்க பட்டர்..(வயசு 90,மறதி ஜாஸ்தி,சொன்னதை திரும்ப திரும்ப சொல்லிண்டே இருப்பார், அரத பழசெல்லாம் நன்னா ஞாபகமிருக்கும், அப்படி ஒரு வியாதி)

சிவியர் அட்டாக் என்றார் அய்யாசாமி

ஏன் ? என்றது அது.

வயசாயிடுத்து என்றார் அய்யாசாமி,

டாக்டரிடம் போகலையா ?!என்றது

போனதுதான்... போயிடுத்து இப்போ! என்றார் அய்யாசாமி

உள்ளே சென்று மாமியிடம் அதையே கேட்டது, அவளும் அதையே சொன்னாள்.

வெளியே வந்து அய்யாசாமியிடம் திரும்ப அதையே கேட்டதற்கு,

இப்போ நீங்க வந்து துக்கம். விசாரிக்கலைனு யாரு அழுதா? தொண்டைத் தண்ணி காயறது எனக்கு உம்மண்ட பேசி, என்று எழுந்து கொல்லைப்புறம் சென்று தொலைந்த மோதிரத்தை தேடலானார் அய்யாசாமி.

அமைதியாக இருந்த

ரங்க பட்டர் எழுந்து மீண்டும் மாமிடம் சென்று திரும்ப துக்கம் கேட்கவும் கூடி இருந்தவர்கள் 'கொல்' என்று சிரிக்க மாமியும் அடக்க முடியாமல் சிரித்து வைக்க..

இது என்ன எழவு விழுந்த வீடு மாதிரியே இல்லை,எல்லாம் சிரிச்சுண்டு இருக்கா? என வாசலில் வந்தமர்ந்து அய்யாசாமியிடம்,

யாரு செத்துட்டா?! என்னாச்சு ? என மீண்டும் அவர் கேட்டதும், அய்யாசாமி மோதிரக் கவலை மறந்து வாய்விட்டுச் சிரிக்க..

யாருக்கும் விவஸ்தை இல்லை என எழுந்துப் போனார் ரங்க பட்டர்.

ஆக வேண்டியதை பார்க்கனுமே என மாமாவை குளிப்பாட்டி முடித்து வாங்கோ, கோத்திரக்காரா, பெண்கள் மட்டும் வாங்கோ வாக்கரிசி போடுங்கோ என அழைத்தார் அய்யாசாமி அரிசி அடுக்கை கையில் எடுத்துண்டு..

அரிசியை அள்ளி அள்ளி கொடுக்க கூட்டம் சுற்றி நகர்ந்து வந்தது.

தானும் போட அடுக்கிலிருந்து அரிசியை அள்ளி வாயில் போடும்போது அதிலிருந்த மோதிரமும் அவர் வாயில் விழ..

அதனைப் பார்த்த மாமி,

போதும்டா அய்யாசாமி! ஏற்கனவே என் தங்கத்தையெல்லாம் வைத்து குடிச்சு விழுங்கியாச்சு நீ வேற வாய்க்கு தங்கம் போடறீயா...என்றதும்

சிரிப்பை அடக்கிண்டு மோதிரத்தை எடுத்து பையில் போட்டுண்டு, மாமாவைக் காட்டிற்கு கிளப்பிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினார் அய்யாசாமி.

ருக்கு! இந்த மோதிரம் லூசா இருக்கு..சரி பண்ணி கொடேன் என்றதற்கு

மோதிரம் மட்டுமா ?! சரி பண்ண வேண்டியதும் உங்களையும்தான் என்றாள்.

நான் என்ன ?! என்ற அய்யாசாமியிடம்.

துக்க வீட்டில் என்ன சிரிப்பு வேண்டியிருக்கு?! என்றதும்.

அந்த ரங்க பட்டர் மாமா இல்ல..

இங்கேயும் வந்தார் அதையே கேட்டார்.. சென்றார் என்றாள் ருக்கு.

செம மறதி அந்த மாமாவுக்கு. ..

என்று கேலியாகச் சிரித்ததும்,

எங்கே நான் அரைக்கச்சொன்ன அரிசி மாவு ?! என்றதும்,

தலையைச்சொறிந்த படி மில்லுக்கு ஓடினார் அய்யாசாமி.