தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 16 : “வளையோசை கலகல கலவென...” – மோகன் ஜி

20260302224111804.jpg

கைவளைகள் பற்றிய பேச்சு வந்தது. அவற்றைப் பற்றிய பாடல்கள் உண்டா எனும் வினா எழுந்தது. இரவெல்லாம் வளையோசை காதருகில் என்னை இம்சித்தபடியே இருந்தது. இலக்கியத்தில் காதலிலும் ஊடலிலும் இந்த வளையல் உருண்டபடியே தான் இருந்நிருக்கிறது. சில வளையல் சேதிகள் பார்ப்போமா?

கணவன் பொருள்தேடி அயலூர் போக யத்தனிக்கிறான். அவன் போகப் போகின்ற செய்தி, மனைவிக்குத் தெரிவதற்கு முன்பாக, இன்னொரு பொருளுக்குத் தெரிந்து போனதாம்!

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.

'குளிர்ந்த துறையை உடைய தலைவன் பிரியப் போகும் செய்தி நமக்கு முன்னரேயே அறிந்து கொண்ட கைவளையல்கள் தாமாகவே கழன்று விட்டனவே' என்று வேதனையிலும் வியப்புறுகிறாளாம் தலைவி. காமத்துப்பாலில் வள்ளுவனின் இலக்கிய நயம் ஏழே சீர்களில் நாடகவிரிவாக காட்சி தரும் அழகு!

சுமங்கலிகள் கைகளில் தவழும் ஆபரணம் வளை. வளையல்கள் ஒரு வாழ்க்கைச் சடங்கோடு பிணைந்துள்ளது அல்லவா? கர்ப்பிணிப் பெண்களுக்கு ' வளைகாப்பு' என்றொரு விழா எடுத்து, இரு கைகளிலும் பல வண்ணங்களில், பல்வகை வளையல்கள் பூட்டி அழகு பார்க்கிறோம். கருவில் வளரும் குழந்தை புரிந்து கொள்ளும் முதலோசை, அந்தத் தாய்மை பூண்ட வளையோசை தானே? அந்த வளையோசையின் கிணுகிணுப்பில் அன்னையின் அண்மையை உணர்ந்து மகிழும் அந்த சிசு.

ஒருமுறை திருஞான சம்பந்தர் மதுரைக்கு விஜயம் செய்கிறார். கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறார். தம்மில் யாரை முதலில் சம்பந்தர் பாடப்போகிறார் என அன்னை மீனாட்சியும், சொக்க நாதரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வந்த பிள்ளை இருவரையும் விடுத்து மஹாராணி மங்கையர்க்கரசியாரைப் பாடிவிட்டார். மங்கையர்க்கரசியார் யார் தெரியுமா? சமண சமய சார்பெடுத்திருந்த நின்றசீர் நெடுமாறன் பட்டத்தரசி.

சைவத்துக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை போக்கவே மந்திரி குலச்சிறையாரை அனுப்பி ஞானசம்பந்தரை வரவழைத்திருந்தார் மஹாராணி. சம்பந்தர் வந்தது அறிந்து சமணர்கள் மன்னனைத் தூண்டி,சம்பந்தர் தங்கியிருந்த இடத்திற்கு தீமூட்டினர். சம்பந்தரோ மன்னனை வழிப்படுத்த மூளும் அக்னியே மார்க்கம் என்று கண்டு 'பகைவர் இட்டத் தீந்தழல் பையவே செல்க பாண்டியர்க்காகவே' என்றோதினார்.

மன்னனை வெப்பு நோய் தாக்க, சமணர்களால் தீர்க்க இயலாத நோயை சம்பந்தர் பூசிய திருநீறு தீர்க்க, மேலும் சமணர் அறைகூவிய அனல்வாத புனல்வாதங்களில் வென்று சைவத்தை நிலைநாட்டியது பெருங்கதை.

நம் விவாதம் வளை பற்றியது அல்லவா? இதோ மங்கையர்க்கரசியாருக்கு சம்பந்தர் சூட்டிய பதிகக் கிரீடம்..

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.

(மூன்றாம் திருமுறையில் திருஆலவாய் தேவாரத் திருப்பதிகம்) .

அவருக்கும் அரசியை 'வரிவளைக் கைம்மட மானி' என்று தான் சொல்லத்தோன்றியிருக்கிறது. பின்னாளில் 'வளைக்கை மானி' என்றே மங்கையர்க்ரசியாரைப் பாடுகிறார் சேக்கிழார்.சுந்தர மூர்த்தி நாயனாரும் வளையலைப் பாடியிருக்கிறார். 'வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் '. வளையைக் குறிப்பிட்டு அரசியை சுமங்கலி என வாழ்த்தியதால் தானோ என்னவோ, தீமூட்ட அங்கீகரித்த அரசனை 'தீந்தழல் பையவே செல்க பாண்டியர்க்காகவே' என்று சிறிய தண்டனையாக தீயை பையவே வெப்பு நோயாக செல்லச் சொன்னாரோ சம்பந்தப் பெருமான்?

இராமகிருஷ்ண பரமஹம்சர் பணத்தைக் கையால் தொடாத புனிதர். கோயிலில் அவர் செய்துவந்த பூசாரி வேலைக்கான மாதசம்பளம் ஏழு ரூபாய். அதை சேமித்து வந்த ராகால் எனும் அவருடைய சிஷ்யப் பிள்ளையிடம், 'எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது?' என்று அதிசயமாக வினவினார். முன்னூறு ருபாய் இருப்பதாய்த் தெரிவித்தவுடன், சாரதாமணி அம்மையாருக்கு அந்தப் பணத்தில் குறிப்பிட்ட தினுசில் வளையல் செய்யுமாறு பணிக்கிறார். அந்த வளையல் தினுசு அவருடைய தியானத்தின் போது கண்ட சீதை பிராட்டி அணிந்திருந்த வளையல் வகை.

1886 ஆகஸ்டில் பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் சமாதியானார். வங்காள வழக்கப்படி கணவனை இழந்த மனைவியின் கைவளையல்களை சில விதவைகள் உருவி சுத்தியல் கொண்டு உடைத்துப் போடுவது வழக்கம். சாரதாமணி அம்மையாருக்கும் அந்த சடங்கை நிறைவேற்ற கங்கையின் படித்துறைக்கு அழைத்து வரப்பட்டார். வளையல்கள் உடைபடுமுன்னர் , கங்கையின் நீரிலிருந்து எழுந்த இராமகிருஷ்ணரின் உருவம் சாரதாதேவிக்கு காட்சிதருகிறது. ' நான் இங்கே தான் இருக்கிறேன். நீ நித்திய சுமங்கலி. உன் செயல்களில் என் துணை என்றும் இருக்கும். வளையல் உன் கையிலேயே இருக்கட்டும் ' என்று கூறி மறைந்தார். புதிய உத்வேகத்துடன் எழுந்த சாரதாமணி அம்மையார், இராமகிருஷ்ண மடத்தை உருவாக்க ஆற்றிய பங்கு வணக்கத்துக்குரியது. கடைசிவரை அந்த பாக்கியம் செய்த வளையல், அன்னையின் கைகளை அலங்கரித்திருந்தது. அன்னையின் புகைப்படத்தில் அவ்வளையைக் காணலாம்.

வளையலைப் பேசும் சொக்கநாதப் புலவர் பாட்டொன்று உண்டு

நங்கை பயண நமக்கென்று உரைத்தளவில்

அங்கம் பசலைநிற மானதே - செங்கை

வளைநெகிழப் பாதி மறுத்தேன் என்றோத

உளநெகிழப் பாதி யுடைந்து.

அன்பே! 'பொருளீட்டும் பொருட்டு நான் வெளியூர்க்குச் செல்ல வேண்டியிருக்கிறது', என்று சொல்லி முடிப்பதற்குள், இளம் மனைவியின் மேனியெங்கும் பசலை நிறம் படர்ந்தது. அவன் கைவளையல்களில் பாதியோ அவளின் உடல் மெலிந்ததால் கழன்று விழுந்தன.அதைக் கண்டு பரிதவித்து, நான் வெளியூர்செல்லவில்லை என்ற மாத்திரத்தில் பூரிப்பில் அவள் உடல் விம்மிப் பருத்து மீதமிருந்த கைவளையல்களோ உடைந்தே போயின. இலக்கியம் தரும் சுதந்திரம் கொண்டு,பெண்ணை பலூனாக்கி விளையாடியிருக்கிறார்கள்.

'வள வள' என்றாகிவிட்டதோ வளையல் சேதி?!